‘சிஐஏ – காம்ரேட் இன் அமெரிக்கா’ – மலையாளம் – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

CIA - Copy

CIA“…அயலூர் சினிமா…”

கம்யூனிசத்தில் ஊறிய அஜி மேத்யூ என்ற ஒரு காம்ரேட் இளைஞன் இரவில் கவலையோடு தனது அலுவலகத்திற்கு திரும்புகிறான். படிகளில் மேலே ஏறும்போது கம்யூனிசத் தலைவர் ஸ்டாலின் எதிரில் அவனைக் கடந்து போகிறார். கதவைத் திறந்து உள்ளே போனால்… புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டு கார்ல் மார்க்ஸ், அவருக்கு எதிரே லெனின், சன்னலுக்கு அருகில் சுருட்டை பிடித்துக் கொண்டு தனது பச்சை ராணுவ உடையில் சேகுவாரா.  ‘யோவ்… மார்க்ஸ், உனக்கெல்லாம் என்னையா தெரியும், கொஞ்சம் சிரிக்கவாவது தெரியுமா? என் பிரச்சினை உனக்குப் புரியாது. என் காதலி சாரா மேரி குரியன் அமெரிக்கால இருக்கா.  இருவத்தியாரம் தேதி அவளுக்கு கல்யாணம். பாஸ்போர்ட் இருக்கு, ஆனா விசா இல்லை. நான் அமெரிக்கா போகணும்! வழி சொல்லு!’ என்கிறான். ‘எலா அஜ்பனு, விசா இருந்து அமெரிக்கா போனா அது புரட்சி இல்ல. விசா இல்லாம போனாதான் அது புரட்சி! புரட்சி செய் காம்ரேட்!’ என்கிறார்கள் மூவரும்.

விசா இல்லாமல் அமெரிக்காவை நோக்கிப் பயணிக்கிறான் நம் காம்ரேட். ‘கேரளத்தின் நல்ல மண்ணையும் நல்ல காற்றையும் விட்டு விட்டு பிசிறு பிடிச்சவன்தான் அமெரிக்காவுல போய் செக்யூரிட்டி செக்யூரிட்டின்னு சாவான்!’ என்ற மனநிலைக் கொண்ட கால்பந்தையும் சொந்த மண்ணையும் நேசிக்கும் இளைஞன் விசா இல்லாமல் அமெரிக்கா சென்றடைய செய்யும் பயணம், அதில் அவன் சந்திக்கும் மனிதர்கள், காணும் அனுபவங்கள் ஆகியவற்றை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது படம்.  நம்மூர் தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ மனதில் வந்து போனாலும், இது வேறு மாதிரியான ஒரு பதிவு.

மொழி தெரியாத நம் அஜி மேத்யூ நிகாரகுவாவிலிருந்து மெக்சிகோவின் ரெய்னோசாவிற்கு போக விழி பிதுங்கி நிற்கும் வேளையில் ‘அதுக்கு பேசாம நீ செத்தே போயிடலாம்!’ என்று தமிழ்ப் பேசி ஸ்ரீலங்கன் டாக்சி டிரைவர் அருள் வரும்போது இன்ப அதிர்ச்சி. அதுவும் அருளின் வீட்டில் தம்பி பிரபாகரனின் நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்த படத்தைப் பார்த்ததும் விசிலடிக்க வேண்டும்போல் இருக்கிறது நமக்கு.

பாகிஸ்தானிலிருந்து வரும் ‘லேடன்’ என்ற அலிகானும், சீனாவின் அக்கையும், கேரளத்து பல்லவியும் இன்னும் சிலரும் சேர்ந்தது செய்யும் அந்தப் பயணம் ஒரு போராட்டம்.

அமெரிக்கா சென்றடைந்தார்களா, தொழில்நுட்பங்களின் உச்சத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்கா அவ்வளவு எளிதாக உள்ளே நுழைந்து விடக் கூடியதா, கடைசியில் என்னதான் ஆச்சு அவர்களுக்கு — என்பதை திரையில் பாருங்கள்.

அஜி மேத்யூவாக வரும் துல்கர் சல்மான், அவரது நண்பர்கள், காதலி, பெற்றோர் என அனைவரும் மிக இயல்பாக செய்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் ரசிகர்களை திருப்தி செய்யவேண்டும் என்ற காரணத்தால் துவக்கத்தில் செருகப்பட்ட சண்டைக் காட்சி துறுத்திக் கொண்டு தனியே நிற்கிறது, சில இடங்களில் மெதுவாக போகிறது என்ற குறைகள் இருந்தாலும் கதையும் சொன்ன விதமும் நன்று.

‘வானம் பர பரக்குது  … பூமி பளபளக்குது’ என்ற பாடல் நம்முடன் ஒட்டிக் கொள்கிறது.

‘சிஐஏ – காம்ரேட் இன் அமெரிக்கா’ : ஒரு நல்ல நாவல் படித்த திருப்தி. பார்க்கலாம்.

 

        திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *