“சார், பணத்தை வச்சிட்டு இருந்தா வீணாக்கிடுவோம் சார்!”

ஆறுமுகம் 1 (3) - Copy

ஆறுமுகம் 1 (3)

ஞாயிறு முன்னிரவின் மகிழ்திருக்கும் பொழுதுகளில் ‘நாளை திங்கட்கிழமை வேலைக்குப் போகவேண்டும்!’ என்று வரும் சிறு எண்ணமே பல பேருக்கு மன அழுத்தத்தை உருவாக்கப் போதுமானது என்று சொல்கிறது சமீபத்தில் வந்திருக்கும் ஓர் ஆய்வறிக்கை. ஒரு வேலைக்குப் போவதற்கே இப்படியொரு அழுத்தம் வரும் உலகில்., மூன்று வேலையை மகிழ்ச்சியாய் செய்து வளைய வரும் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறீர்களா?

சென்னையின் முக்கிய பகுதியான ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் திரு. ஆறுமுகம் அவர்களை நீங்கள் பார்க்கவேண்டும். மாடுகளை வளர்த்து பால் கறந்து வீடுகளுக்கு கொடுத்து வருகிறார் ராஜா அண்ணாமலைபுரத்தில் (‘அண்ணாமலை’(புரம்)ன்னாலே பால்தான் போல!)

கேள்வி: இந்த பால் கறந்து வீடுகளுக்குத் தரும் இந்த வேலைக்கு எப்படி வந்தீங்க?

பதில்: நான் பொறந்ததே இதுலதான். நான் பொறக்கறதுக்கு முன்னயிலேருந்து எங்கம்மா இத செய்யறாங்க. எங்கப்பா மேல்மருவத்தூர் பக்கத்துல அச்சரபாக்கம் ஊரச் சேர்ந்தவரு, எங்கம்மா மயிலாப்பூரு. கல்யாணம் ஆயி அப்பாவ இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. அப்பேருந்து அம்மா பால் ஊத்திட்டுதான் இருந்தாங்க. எட்டு வயசுலேருந்து இதில இருக்கேன்.

கேள்வி: வீடு எங்க இருந்தது அப்போது?

பதில்: இதே ஏரியாதான், இதே வீடுதான். அம்மாவுக்கு இப்ப முடியல.

கேள்வி: அப்போ இந்த பகுதி எல்லாம் வேற மாதிரி இருந்திருக்குமே? இல்லையா?

பதில்: தோ நீங்க நிக்கறீங்களே இந்த இடம், இந்த அபார்ட்மென்ட், பக்கத்துல இருக்கிற அந்த வீடுங்க எல்லாம் ஒரே பெரிய எடமா இருந்தது. ஒரு செட்டியாருக்கு சொந்தமானது. ராஜா அண்ணாமலை சொந்தங்கள். அதான் சார் ராஜா அண்ணாமலைபுரம். அவரு வித்துட்டு போயிட்டாரு. இவங்க வாங்கி இவ்ளோ பெரிய கேம்பஸ் வச்சி இத்தனை அபார்ட்மென்ட் கட்டியிருக்காங்க.

கேள்வி: அம்மா பால் வியாபாரம் செஞ்சாங்க. அப்பப்ப எதாவது உதவியா இருந்தீங்க. இதையே தொழிலா நீங்க எப்போ எடுத்து இறங்கனீங்க?

பதில்: (கணக்குப் போட்டு பார்க்கிறார்) இருவத்தஞ்சி வருஷம் ஆயிடிச்சி சார். போனதே தெரியல.

கேள்வி: ஏன் இதுக்கு வந்தீங்க?

பதில்: தொன்னூத்தியொன்னுல கல்யாணம் ஆச்சி. சரி எதாவது செய்யணும். இது பொறந்ததிலேருந்து பாத்து பாத்து வளர்ந்த விஷயம். சரின்னு எறங்கிட்டேன்.

கேள்வி:: எத்தனை மாடுங்க இருக்கு உங்ககிட்ட?

பதில்: ஆறு மாடுங்க.

கேள்வி: இந்த வேலையில உங்களுக்கு பிடிச்சது என்ன?

பதில்: அட, இது என்ன கேள்வி? எல்லாம்தான் புடிக்குது. நல்ல தெரிஞ்சது. மாடுகளோட பழகி மனுஷங்களோடு பழகி பால் ஊத்தும் வேலை. அப்புறம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நான்தான் பத்து வருஷமா பால் தர்றேன். தெனம் காலையில அபிஷேகம் பாத்துட்டுதான் வருவேன்.

கேள்வி: என்ன கஷ்டம் இதுல?

பதில்: கஷ்டம்ன்னு சொல்ல முடியாது அத. என்ன ஆனாலும் அதிகாலை எந்திரிச்சி தீனி போட்டு பால் கறக்கணும். அடை மழை அடிச்சாலும் வுட முடியாது. நாலரை மணிக்கு என்ன ஆனாலும் செய்யணும். கமிட்மென்ட் பரமன் சார்!

கேள்வி: என்ன மாடுங்க வச்சிருக்கீங்க?

பதில்: நாடு மாடுங்கதான்.

கேள்வி: நாட்டு மாடுன்னா என்ன மாடு? காங்கேயம், காஞ்சி குட்டை, ஹல்லிக்கர், கிர், மயிலம், எது?

பதில்: கிர்ரு மாடுங்க!

கேள்வி: கிர் மாடுங்க எவ்ளோ கறக்கும்?

பதில்: மொத்தமா ஒரு நாளைக்கு பன்னண்டு லிட்டர் கறக்கும் சார்.

கேள்வி: புல்லுக்கு என்ன செய்வீங்க?

பதில்: பெருங்குடில ஒருத்தர் புல்லு வேலைய வச்சி கட்டு எடுத்திட்டு வந்து தருவாரு எல்லாருக்கும் அப்பல்லாம். இப்ப எங்க? பெருங்குடிதான் ஏக்கரு கோடிக்கணக்குலன்னு ஆயிருச்சே. அதெல்லாம் இப்போ இல்லை. புல்லே கெடைக்கறது இல்லை. எங்கேருந்து தர்றது?

கேள்வி: புல்லும் வைக்கோலும்தான் மாடுங்களுக்கு குடுப்போம். கொஞ்சம் தீனி வைப்போம். இப்போ எல்லாம் மாறியாச்சி!

பதில்: வைக்கோல் வைக்கறேன் சார். வைக்கோலும் தீனியும்தான் வைக்கறேன் மாட்டுக்கு.

கேள்வி: அட, வைக்கோல் இங்க கெடைக்குதா? எவ்ளோ?

பதில்: ஊர்ப்பக்கத்திலேருந்து முறுக்கி பண்டல் செய்து கொண்டு வந்திடறாங்க. இங்க விலைக்கு கெடைக்குது. ஒரு பிரி இருவத்தியேழு ரூவா.

கேள்வி: அப்போ மாடு என்ன விலை, இப்ப என்ன விலை?

பதில்: திருவெற்றியூர் மாட்டு சந்தையில இருவத்தியஞ்சி வருஷம் முன்னால நான் வாங்கன போது ஒரு மாடு ஆயிரத்து இருநூறு ரூவா. ரெண்டு மாடு வாங்கினேன். இப்போ அம்பத்திநாலாயிரம் ரூவா. ரெண்டு மாடு வாங்கினேன்.

கேள்வி: பாலை செக் பண்ணுவாங்களே!

பதில்: அப்போ குடத்தில பாலைக் கொண்டு போவோம். வழியிலயே திடீர்னு வருவாங்க. தண்ணி கலந்திரு க்கான்னு பாக்க ‘டிகிரி செக்’ பண்ணுவாங்க. குடத்த அப்படியே தரையில கொட்டிட்டு ஓடிடுவோம். இப்ப அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா யாரும் இருக்கறதில்ல சார்.

கேள்வி: எப்ப எழுவீங்க? என்ன செய்வீங்க?

பதில்: காலைல நாலுக்கு எழணும் சார். நான் தீனியப் போட்டுட்டு அப்புறம்தான் கறப்பேன். கறந்திட்டு குளிச்சிட்டு கபாலி கோவிலுக்குப் போய் ஊத்திட்டு அப்புறம் மத்த வீடுகளுக்கு போய் குடுப்பேன். அப்புறம் வேலைக்குப் போவேன்.

கேள்வி: வேலைக்குப் போவீங்களா?

பதில்: கார்ப்பரேசன் ஆஃபீஸ்ல கொசு மருந்து அடிப்பாங்களே அந்த ஆப்பரேட்டர் வேலை சார் நமக்கு. சில மணி நேரம் வேலை நமக்கு அங்கே. அப்புறம் மதியம் வந்து மாடு கறக்கணும். வீடுகளுக்கு பால் தரனும். மதியம் ஒரு முறை அதே மாதிரி கறக்கணும்.

கேள்வி:  ஒரு அஞ்சு மணி வாக்கில முடிச்சிடுவீங்க இல்லையா. அப்புறம் ஓய்வா?

பதில்: ஓய்வா எதுக்கு? அஞ்சு மணியிலேருந்து எட்டரை மணி வரைக்கும் ஆட்டோ ஒட்டுவேன் சார்..

கேள்வி: ஆட்டோ ஒட்டுவீங்களா? சபாஷ். சொந்த ஆட்டோவா, வாடகையா? எந்தத ஸ்டாண்டு?

பதில்: சொந்த ஆட்டோ சார். அஞ்சு மணியிலேருந்து எட்டரை வரைக்கும் ஓட்டுவேன். என ஸ்டாண்டும் இல்லை சார். அப்படியே ரோட்டுக்கு வந்து நின்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான். எல்லாம் முடிச்சிட்டு வந்து படுக்க ஒரு பத்து மணியாயிரும்.  அடுத்தநாள் காலை நாலு மணி எழுவேன்.

கேள்வி: அருமை. மாடுங்கள எவ்ளோ நாள் வச்சிப்பீங்க? வயசான என்ன செய்வீங்க? (மாட்டிறைச்சிக்கு விற்கத் தடை என்பதை மனதில் வைத்து கேட்கிறோம்)

பதில்: ஒரு மாடு பன்னண்டு கண்ணு போடற வரைக்கும் வசிப்பேன். அதுக்கபுறம் கோயிலுக்கு குடுத்திருவேன் சார்.

(சிறு வயதிலிருந்து இதையே பார்த்து பார்த்து வளர்ந்து பழகிச் செய்வதால் அவருக்கு இது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஒரு வேலையாகவே தெரியவில்லை. அதுவே வாழ்க்கையாகத் தெரிவதால் எதையும் அவரால் கஷ்டம் என்றே கருத முடியவில்லை அவரால். ‘அதெல்லாம் அப்படிதான் இருக்கும், நெறை குறை இருக்கும்தானே!’ என்று எடுத்துக் கொண்டு இயங்கிக்கொண்டே இருக்கிறார் இவர். இது இவரிடமிருந்து கற்க வேண்டிய ஒரு முக்கிய சங்கதி)    

கேள்வி: இந்த வேலையில கஷ்டம் இல்லன்னு சொன்னீங்க. நீங்க வாழ்க்கையில எதிர் கொண்ட கஷ்டம் என்ன?

பதில்: (யோசிக்கிறார்) மூணு பசங்களையும் படிக்க வைக்க கொஞ்சம் கஷ்டம் இருந்திச்சி சார். அடுத்த தெருவில சிவன் அப்படீன்னு ஒரு நல்ல மனுஷன் இருக்காரு. எல்லோருக்கும் உதவி செய்வாரு. அவர்கிட்ட வேலை செய்யறவங்களுக்கு கல்யாணம் பண்ண உதவி எல்லாம் செய்வாரு. அவருகிட்ட போயி நிப்பேன். அவரு பணம் குடுத்து பசங்க படிப்புக்கு  உதவுவாரு. அவங்க வீட்டுக்கு பால் குடுத்து பால் காசில கழிச்சி கடனை அடைச்சிருவேன்,.

ரெண்டு வாரம் முன்னாடி நல்ல அடிச்சி ஒரு மழை பெஞ்சதே, ரோடு எல்லாம் தண்ணி நின்னுச்சே. அப்ப என் மாடு ஒன்னு எப்பயும் படுக்கும் ஒரு எடத்துல படுத்துருக்கு. எலெக்ட்ரிக் போஸ்ட்டு மழைத் தண்ணி ஈரத்தில எர்த் ஆகி ஷாக் அடிச்சி செத்து போச்சி பரமன் சார். நல்ல மாடு. என்ன பண்றது சொல்லுங்க.

கேள்வி: எவ்வளவோ வயசு மாடு? எத்தனை கண்ணு போட்டது அது?

பதில்: ஆறு வருஷ மாடு சார். ரெண்டு கண்ணு போட்டுருக்கு.

கேள்வி: அடடா. வருத்தமா இருக்கு. ஒரு மாட்டுக்கு எவ்ளோ செலவாவுது?

பதில்: ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு தூத்தியேழுவது ரூவா. ஒரு லிட்டர் பால் அம்பது ரூவாய்க்குத் தர்றேன். ரொம்ப நாளா பால் வாங்கறவங்க கிட்ட கம்மியாதான் வாங்கறேன். எல்லா செலவும் போக மாசம் ஒரு முப்பதாயிரம் நிக்கும் சார்.

கேள்வி:  உங்களோட வெற்றின்னு எதை சொல்வீங்க?

பதில்: மூணு புள்ளைகள படிக்க வச்சிட்டேன். அம்பத்தியிரண்டு வயசு எனக்கு, சென்னை சிட்டிக்குள்ள வீடு கட்டிருக்கேன் சார். இப்ப இருக்கறது என் அம்மா -அப்பா இருந்த வீடு. நாளைக்கு இதுல எனக்கோ எம்புள்ளைக்கோ ஒரு பங்கு வரும். அதப் பத்தி நான் சொல்லல. தொரப்பாக்கத்துல எடம் வாங்கி வீடு கட்டிருக்கேன். அது என்னோட வெற்றிதானே சார்.

கேள்வி: நிச்சயம் வெற்றிதான். பாராட்டுகள். உங்களுக்கு கடன் இருக்கா?

பதில்: இல்லை.

கேள்வி: மாடு பால் கறந்து விற்கும் இந்த வேலையில, எல்லாம் போக ஒரு தொகை உங்களிடம் இருக்கும் இல்லையா! அதை என்ன செய்வீங்க? இதில் வரும் பணத்தை எப்படிக் கையாள்கிறீர்கள்ன்னு கேக்கறேன்?

பதில்: பரமன் சார், பணத்தை வச்சிட்டு இருந்தா வீணாக்கிடுவோம் சார். சீட்டு கட்டி சேமிச்சுருவன் சார். மாசா மாசம் இருவத்தியஞ்சாயிரம் கட்டிடுவேன். தொன்னூத்தியொன்னுல தொரப்பாக்கத்துல அந்த இடத்தை பதினேழாயிரம் ரூவாய்க்கு வாங்கினேன். அப்படியே இருந்தது. இப்ப சீட்டு கட்டி சீட்டு கட்டி சேர்த்து எடுத்து வீட்ட கட்டிட்டேன்.

கேள்வி: ஒரு வேலை பார்ப்பதற்கே புலம்புகிறார்கள். காலை மாலை மாடு கண்ணு பால், அதற்கப்புறம் மாகராட்சி வேலை, மாலையில் ஆட்டோ ஒட்டுதல்ன்னு மூணு வேலைகள பாக்கறீங்களா! ஓய்வு வேண்டாமா?

பதில்: அட, ஓய்வா என்னாத்துக்கு? அதான் ராத்திரி நல்ல தூங்கறோமே! நேரம் இருக்கே சும்மாவா இருக்க சொல்றீங்க? ஜாலியா நல்ல செய்யறோம். நெறைய மனுஷங்கள பாக்கறோம் இன்னும் சந்தோஷமா செய்யறோம். சும்மா இருக்கக்கூடாது இல்லையா!

பிடிப்பதை செய்யும்போதும், செய்வதை பிடித்து மகிழ்ச்சியாய் செய்யும்போதும் ஓய்வென்று தனியாக ஒன்று வேண்டாம்தானே! மகிழ்ச்சியாக இயங்கட்டும் அவர், அவர் பால் ஊற்றும் வீடுகளிலும், அவரது வாழ்விலும் பால் பொங்கட்டும்!

வாழ்க! வளர்க!      

 

 # Valarchi

 #வளர்ச்சி சுய முன்னேற்ற இதழ்

Facebook.com/ParamanPage

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *