தந்தைக்குதவும் தனயன்…

sanjeekumar - Copy

sanjeekumar1

‘எனக்கு எக்ஸாம் இருக்குல்ல, அப்புறம் ஏன் என்னை வேலை செய்யச் சொல்ற?’ ‘அப்பா ஐ ஃபோன் X வருது. நீ எப்ப வாங்குவே?’ ‘பிக் பாஸ் பாக்கறது ஒன்னும் தப்பு கெடையாது’ ‘நான் நல்லாத்தான் படிக்கறேன், அவங்க ஏனோ மார்க் போட மாட்டேங்கறாங்க’ என்று சிணுங்கும் பிள்ளைகள் வளரும் அதே நகரத்தின் மையப்பகுதியில் இது எதற்கும் சம்மந்தமே இல்லாமல் வளர்ந்து வருகிறான் ஒரு பதினான்கு வயது சாமானியப் பையன்.

வர்த்தக நெரிசல் நிறைந்த ஆதி சென்னையின் பிராட்வே வீதியில் இந்தப் பையனை அதிகம் பேர் அறிவர். தினமும் மாலையில் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது மாதிரி வாரத்தின் ஆறு நாட்களிலும் தன் தந்தைக்கு உதவி செய்து கொண்டு இருப்பான் அவன்.

 …

கேள்வி: உன் பேரென்ன?

பதில்: சஞ்சீவ் குமார் ஜெ

கேள்வி: என்ன வயசு உனக்கு?

பதில்: பதினாலு வயசு. ஏப்ரல் 2003ல பொறந்தேன்.

கேள்வி: எந்தக் ஸ்கூல்ல படிக்கிற?

பதில்: செயின்ட் கேபிரியேல், ஜார்ஜ் டவுன், பிராட்வே.

கேள்வி: அப்பா என்ன செய்யறாரு?

பதில்: அவர் பேரு ஜெகன்நாதன் (என்கிற ஜோசப்).எலக்ட்ரிகல் கடைங்கள்லேருந்து லோட் ஏத்தி வண்டியில கொண்டு போயி எறக்குவாரு.

கேள்வி; அம்மா?

பதில்: அம்மா பக்கத்துல ஒரு ஸ்கூல்ல வேல செய்யறாங்க. கூட்டற வேலை. அங்கதான் அக்கா ட்வெள்த் படிக்குது.

(எதற்காக தன்னை நேர்காணல் செய்கிறார்கள் என்பது புரியாமல் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறான் சிறுவன்)

கேள்வி: காலையில் எப்போ எந்திரிப்ப நீ, அப்புறம் என்னல்லாம் செய்வ நீ?

பதில்: ஏழு மணிக்கு எழுந்திரிப்பேன். காலைல ஸ்கூல்.

கேள்வி: சாப்பாடு?

பதில்: காலை இட்லி எதாவது அம்மா செய்யும். மதியம் ஸ்கூலுக்கே சாப்பாடு கொண்டாந்து குடுத்திடுவாங்க அம்மா.

கேள்வி: லஞ்ச்ல என்ன இருக்கும்?

பதில்: சோறு, கொழம்பு, மீனு, பீஃப் எதாச்சும் இருக்கும்.

கேள்வி: அப்புறம்?

பதில்: ஸ்கூல் முடிஞ்சதும் ஸ்கூல்லயே கோச்சிங் கிளாஸ் இருக்கும். சார்லாம் வந்து இங்கிலீஷ், கணக்கு, அறிவியல்ன்னு கிளாஸ் எடுப்பாங்க. அது முடிஞ்சதும் வீட்டுக்கு வருவன் ஜெர்சி மாத்திகிட்டு அஞ்சு மணிக்கு ஃபுட் பால் விளையாடப் போயிடுவேன். ஒரு மணிநேரம் ஃபுட் பால் பயிற்சி.

கேள்வி: அது எங்க?

பதில்: ஏவிபி கிளப், ஆசீர்வாதபுரம் கிளப். அங்க ஒரு கோச்சர் இருக்காரு ஜேடன் சார். அவருதான் எங்களுக்கு எல்லாம் சொல்லித் தருவாரு.

(சென்னைத் தமிழில் ‘கோச்’ என்பதை ‘கோச்சர்’ என்றே சொல்லுவர். நினைவு கொள்க ‘இறுதிச் சுற்று’ திரைப்படம்)

கேள்வி: தொர்ணமென்ட் எதுக்காவது போயிருக்கியா நீ?

பதில்: ம்ம்ம்.. நெறைய்யா! புளியாந்தோப்பு, அடையார், ஆர்ஏ புரம் எல்லாம் போயிருக்கோம். கப் வாங்கியிருக்கோம்.

கேள்வி: ஃபுட்பால்ல நீ எந்த எடத்தில ஆடுவ?

பதில்: ஸ்டாஃபர் பேக் (டிஃபெண்ட்)

கேள்வி: உன்னோட பெஸ்ட் கிக் எது?

பதில்: மட்டையடி ஷாட். (புறங்காலை காட்டி அதால் உதைப்பது என்று விளக்குகிறான்) அதலா அடிச்சா ஃபோர்சா ஸ்ட்ரேயிட்டா போகும் பந்து,சுத்தாது.

கேள்வி: ம்ம்ம். அஞ்சு மணிக்கு ஃபுட் பால் கிளப், அப்புறம்?

பதில்: ஆறு மணிவரைக்கும் ஃபுட்பால் கிளப்,

கேள்வி: அப்புறம்?

பதில்: அப்புறம் இங்க பிராட்வேக்கு வந்திடுவேன் அப்பாவுக்கு ஹெல்ப் பண்ண.

sanjeekumar

( அவனது அப்பா ஜோசெப் எலேக்ட்ரிகல் கடைகளில் லோட் (மூட்டைகள், பெட்டிகள்) ஆகியவற்றை முதுகில் தூக்கி வந்து மீன்பாடி வண்டியைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதி வண்டியில் ஏற்றி, சைக்கிளை மிதித்து வேண்டிய இடத்தில் இறக்கி கூலி பெற்றுக் கொள்பவர்.

அவருக்கு உதவியாக தினமும் வந்து அந்த முட்டைகளை சுமப்பது, சைக்கிளை தள்ளுவது, தந்தை மூட்டை இறக்க செல்லும் நேரங்களில் சைக்கிளுக்கு காவல் இருப்பது போன்ற வேலைகளை தந்தைக்கு உதவியாக செய்து கொண்டிருக்கிறான். இவனுக்கும் நிறுவனங்களுக்கும் சம்மந்தம் இல்லை. தனது தந்தைக்காக உடன் நிற்கிறான்.)

கேள்வி: அப்பாவுக்கு உதவியா என்னல்லாம் செய்வ?

பதில்: லோட் ஏத்தறது, சைக்கிள தள்றது, சில சமயம் மிதிக்கறது.

கேள்வி: எப்பல்லாம் வருவ நீ?

பதில்: வாரத்தில ஆறு நாளும், தினமும். சண்டே அப்பாவுக்கு லீவு.

கேள்வி: எதுக்கு இந்த வேலைக்கு வந்த?

பதில்: கைதொழில் ஒன்றைப் பழகிக் கொள்வது நல்லதுதானே (வயதிற்கு மீறிய வரிகளை பேசுகிறான்!) அப்பறம், நம்ப அப்பா கஷ்டப்படுறாரு. நம்ம குடும்பத்துக்குத்தானே ஒழைக்கறாரு. நாமதான ஹெல்ப் பண்ணனும்.

கேள்வி; அப்பா எதாவது காசு குடுப்பாரா ?

பதில்: இல்ல. எப்பயாவது பரோட்டா வாங்கித் தருவார். நல்லா நச்சுன்னு இருக்கும்.

கேள்வி: எவ்ளோ நேரம் இந்த வேலை செய்வே?

பதில்: ஆறுலேருந்து எட்டு வரைக்கும்.

கேள்வி: அப்புறம்?

பதில்: வூட்டுக்கு போயிடுவோம். சாப்புடுவேன். டிவி பார்ப்பேன், பேசிட்டு இருப்பேன்.

கேள்வி: அப்புறம் எப்போ தூங்குவ?

பதில்: பதினோரு மணிக்கு.

கேள்வி: ஞாயித்துக் கிழமை என்ன செய்வ?

பதில்: காலை எட்டு – பத்து சர்ச்ல இருப்போம். ஆர்சி இல்ல, பெந்தகோஸ்து சர்ச். அப்புறம் விளையாட்டு டிவி வூட்ல இருப்பேன்.

கேள்வி: சஞ்சீவ் குமார்ன்னு பேரு இருக்கு?

பதில்: சர்ச்சில் என் பேரு ஸ்டீஃபன்ராஜ்.  

கேள்வி: கடவுள் நம்பிக்கை எவ்ளோ இருக்கு உனக்கு?

பதில்: பைபிள்ல வரும் ‘ கண்டு விசுவாசிப்பதை விட, காணாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான்’. நான் இயேசுவை கண்டதில்லை. விசுவாச்கிறேன். நான் பாக்கியவான்.

கேள்வி: கடவுள் உன் முன்னாடி வந்தா என்ன கேப்ப?

பதில்; ஞானம் கேப்பேன்.

கேள்வி: சினிமா பாக்கமாட்டியா?

பதில்: பாப்பனே.

கேள்வி: யாரு பிடிக்கும்?

பதில்: விஜய். அப்புறம் சிவகார்த்திகேயன்.

கேள்வி: விஜய் படம் என்ன படம் கடைசியா பார்த்த?

பதில்: ‘கத்தி’

கேள்வி: கத்தியா?

பதில்: இப்போ விநாயகர்சத்திக்கு டீவில போட்டங்களே. அப்பத்தான் பாத்தேன்.

கேள்வி: படமெல்லாம் டிவியிலதான் பாப்பியா நீ? தியேட்டர்ல?

பதில்: டீவியிலதான். தியேட்டர் போனதில்ல.

(அதிர்ந்து போகிறோம்)

கேள்வி: பத்து மணி வரை டிவி பார்ப்பேன் பேசிட்டு இருப்பேன்ன்னு சொன்ன. பதினோரு மணிக்கு தூங்குவேன்ன்னு சொன்ன. பத்துலேருந்து பதினோரு மணி வரை என்ன செய்வ? அது கணக்குல வரலையே?

பதில்: பத்து மணிலேருந்து பதினோரு மணி வரை ஷார்ப்பா ஒன்னவர் படிப்பேன்.

கேள்வி: அதுக்கு மேல போயி படிப்பியா நீ?

பதில்: ஆமாங்! படிக்கணும் இல்ல. ஸ்கூல் இருக்கே!

கேள்வி: எவ்ளோ மார்க் வாங்குவ நீ?

பதில்: அன்க்கிள், நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்கு! ஆறாவதுலேருந்து நான் மேத்ஸ்ல சென்ட்டம் (நூத்துக்கு நூறு). இங்கிலீஷ்ல மட்டும் சிக்ஸ்டி – செவண்டி. மத்த எல்லாத்திலயும் எய்ட்டிக்கு மேல.

#வளர்ச்சி சுய முன்னேற்ற இதழ்

#Valarchi Tamil Monthly

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *