விமானப்பயணமென்றால்…

பேருந்து, ரயில், கார் என பயணமென்றாலே சன்னல் இருக்கைதான் விருப்பத் தேர்வு என்று வளர்ந்த நாம்(ன்), வளர்ந்த பின்னும் விமானத்திலிலேயும் சன்னலிருக்கையே விரும்புகிறோம். இரவுப் பயணங்களில் ‘ப்ளைட் நேவிகேஷன்’ காட்டும் திரை இருந்தால் போதுமெனக்கு,
எவ்வளவு மணி நேர பயணமாக இருந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டே என்னால் பயணிக்க முடியும்.

சாதாரணமாக மற்றவர்களுக்கு இரண்டு நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியாத ‘இத்துப் போன’தாகத் தெரியும் விமானப் பாதை பற்றிய அந்த விவரங்களை, ப்ரூஸ்லீ படம் இருந்தால் கூட ஒதுக்கி வைத்துவிட்டு ஆழ்ந்து பார்க்க என்னால் முடியும்.

எவ்வளவு வேகம், காற்றின் வேகம், அருகிலுள்ள நாடு – நகரம் – ஊர், கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம், வெளியே எவ்வளவு குளிர் என்பதைப் பார்த்துக் கொண்டே பயணிப்பது ஓர் அனுபவம். அதுவும் சிறீலங்கன் ஏர்வேய்ஸ்ஸில் கொழும்புவிலிருந்து சென்னைக்கு வந்தால் திரையில் அனுராதாபரம், யாழ்ப்பானம், கோடியக்கரை, நாகப்பட்டினம், கடலூர், சிதம்பரத்திற்கு மேலாகப் பறந்து போவதை திரையில் படித்து சன்னல் வழியே ‘இங்க இருக்கு சிதம்பரம்’ என்று பார்ப்பது ஒரு அனுபவம். நாகப்பட்டினம் போவதாக சொன்ன முன்னிருக்கையில் இருக்கும் ஆளைப் பார்த்து, ‘யோவ், உன் ஊர் இங்க நேரா கீழ இருக்கு. அவ்ளோ தூரம் சென்னை போய் எறங்கி அப்புறம் பஸ்ஸ புடிச்சி திரும்பி வரப் போற நீ! ம்ம்ம்’ என்று சிரிக்கத் தோன்றும். சிங்கப்பூரிலிந்து சென்னை நோக்கிப் பயணிக்கையில் ‘மலேசியா விசா இல்லாமலேயே கோலம்பூருக்கு மேலாகப் பறக்கிறோம்!’ என்று புன்னகைத்து முப்பத்தெட்டாயிரம் அடி உயரத்தில் அந்தமான் நிகோபாரைத் தாண்டி மீனம்பாக்கம் நோக்கி பறக்க முடியும்.

கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் போன்ற சில விமானங்களில் முன்புறம் பின்புறம் என இரண்டு கேமராக்களை வைத்து பறக்கும் விமானத்தின் பாதையை அப்படியே காட்டுவதும் இருக்கிறது. ‘அனிமேட்டேடு ப்ளைட் நேவிகேஷன்’தான் நான் கண்டதிலேயே ஆகச் சிறந்தது. தொடுதிரையில் விரல்களை வைத்து நேர்க்கோட்டுப் பாதையை விரிக்க, கூகுள் மேப்பைப் போல விரிந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரை காட்டும்.

இவை எதுவுமில்லாத விமானங்களில் சன்னலின் வெளியே அடுக்கடுக்காய் உறைந்திருக்கும் அல்லது நகர்ந்து கொண்டிருக்கும் மேகங்கள் என் விருப்பத் தேர்வு. மேகங்களை நோக்குகையில் தொடக்கத்தில் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் படங்களது நாரதர் பயணிக்கும் காட்சிகள் நிழலாடும், டைனசர்கள் மலைகள் என பற்பல உருவங்கள் வந்து போகும், சிறிது நேரத்தில் உருவங்கள் தொலைந்து மேகங்களில் நான் புதைந்து தொலைந்து போவது நடந்தேறும்.

சன்னல் இருக்கை மறுக்கப்பட்ட இரவுப் பயணங்களில் எழுதத் தொடங்கிவிடுவது என் வழக்கம். சென்னை கோவை விமானத்தில்தான் என் பெரும்பாலான கட்டுரைகள் எழுதப்பட்டன அந்நாட்களில். சமீபத்திய சிங்கப்பூரை நோக்கிய இரவுப் பயணத்தில் இருக்கும் இடத்தில் குறுக்கிக் கொண்டு இரண்டு மடிகளிலும் இரண்டு மகள்கள் உறங்க, நான் அக்டோபர் மாத ‘வளர்ச்சி’ இதழுக்கு தலையங்கம் எழுதி முடித்தேன்.

இரவுப் பயணங்களில் இண்டிகோ ஏர்வேய்ஸ்ஸில் சில டாலர்களை இழந்து நான் கற்ற பாடங்கள் இரண்டு. ஒன்று – ‘கமேலியன் சதர்ன் ஸ்பைஸ் டீ’ என்றிருக்கும் அந்த வாயில் வைக்க முடியாத டீயை ஆர்டர் செய்யக் கூடாது. (இண்டிகோவில் இருப்பதிலேயே – சாண்ட்விச், டீ, காப்பி ஆகியவை ஓரளவு நன்று)

இரண்டு – டீயோ காப்பியோ சாண்ட்விச்சோ எது வாங்க விரும்பினாலும் சில்லரையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

க்ரீன் டீ 3 டாலர் என்று மெனுவில் இருக்கும். அது வேண்டுமென்று நீங்கள் சொன்னால் ‘யு பே பை சிங்கப்பூர் டாலர்ஸ் ஆர் யுஎஸ் டாலர்ஸ் சார்?’என்பாள் முகத்தில் எப்போதும் ஈரப்பசை இருக்கிற மாதிரி ‘க்ரீம்’ தடவிக்கொண்ட பணிப்பெண்.

குழந்தைகளோடு பயணித்து சாண்ட்விச், காப்பி, டீ என்று ஆர்டர் செய்தால் தீர்ந்தது. மூன்று பொருட்களுக்கு பேப்பரில் எழுதி கணக்கு போட்டு கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் எடுத்துக் கொண்டு ‘சார் 16 யுஎஸ் டாலர்ஸ் என்பார்கள். ‘அம்மா தாயே, நான் சிங்கப்பூர் டாலர்ஸ்ல தர்ரேன்னு சொன்னேன்பா!’ என்று நீங்கள் சொன்னால் தீர்ந்தது இன்னும் இரண்டு நிமிடங்கள். கைவிரல்கள் கால்விரல்களை எல்லாம் சேர்த்து கணக்குப் போடாத குறையாக திரும்பவும் கணக்குப் போடத் தொடங்கிவிடும் அவர்களைப் பார்த்தால், ‘இவளுங்கல்லாம் படிச்சாளுங்களா இல்லையா!’ என்று எண்ணக் கூடத் தோன்றும். பல முறை சரிபார்த்து விட்டு, ‘சார் ட்வெண்டி டூ டாலர்ஸ்’ என்பார்கள். (நிற்க. இது ஒரு முறை ஒரு விமானத்தில் மட்டும் நடந்ததல்ல! பல்வேறு விமானங்களில் பல்வேறு முறை நடந்தவை)

ஒரே ஒரு டீ வாங்கிக் கொண்டு நீங்கள் 5 சிங்கப்பூர் டாலர்கள் தந்தால், 4 டாலர்கள் டீக்குப் போக மீதம் 1 டாலர் திரும்ப வராது. ‘வி ஹேவ் நோ சேஞ்ச் சார்’ என்ற வாக்கியம் மட்டுமே வரும்.

ஒரு இரவுப் பயணத்தில் ஐம்பது டாலர் நோட்டைப் பார்த்துவிட்டு ‘சாரி, வி டோண்ட் ஹேவ் சேஞ்ச்’ என்று சொல்லி டீயே மறுக்கப்பட்டதும் நடந்தேறியிருக்கிறது. நம்மூரின் அந்நாளைய டவுன் பஸ்களில் ‘சில்லறையாக வைத்துக் கொள்ளவும்’ என்றிருக்குமே, அதை நினைவில் கொள்ளுங்கள் இந்நாளைய விமானப் பயணங்களில்.

:பரமன் பச்சைமுத்து
02.10.2017

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *