பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும்…

ரயில் பயணம் ஒரு சுகம். பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும் இரவில் வேறு வடிவம் கொண்டுவிடுகிறது. பகல் முழுக்கத் தட தடவென்று உற்சாக குவியலாக ஓடிய அதே ரயில் இரவில் ஒரு தொட்டிலைப் போல வடிவெடுத்து விடுகிறது.
ஆடியாடி மிதந்து செல்லும் ஓர் ஓடத்தில் உறங்குவதைப் போன்றதொரு உணர்வைத் தருகிறது அது. சில ரயில்களின் அந்த மிதவையாட்டம் அரைத் தூக்க நிலையில் அன்னை நம்மை கிடத்தி் ஆட்டிய தூளியின் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது.

ரயில் ஒரு சௌகரியம்.
ஆடாமல் அலுங்காமல் போகும் ‘ஆடி’ காரையே எடுத்துக் கொண்டு போனாலும் அதிக தூரப் பயணத்தில் அசதி வரும், ஆனால் ஆடி ஆடி அலுங்கி குலுங்கி போகும் ரயிலில் போனால் அசதியில்லை. அதனால்தான் அதிகம் காரில் பயணிக்கும் திமுக செயல்தலைவரே ரயிலுக்கு மாறி விட்டார் போல இப்போது.

எங்கெங்கோயிருக்கும் முன்பின் தெரியாத மனிதர்களை திடீரென்று ஒரு புள்ளியில் இழுத்துப் போட்டு சில மணி நேரங்களுக்கு ஒன்றாய் உட்கார வைத்து, அல்லது ஒரே பெட்டிக்குள்ளே அருகருகே உறங்க வைத்து விடுகிறது ரயில். படுத்ததும் உறங்குபவன், படுத்தவனையும் உறங்க விடாதவன், ‘சரிண்ணே, அதெல்லாம் நான் பாத்துக்கறேன்’ என்று ஊரிலிருப்பவனுக்கு நேரடியாகவே கேட்குமளவிற்கு சத்தமாய் பேசுபவன், கூவும் ரயிலே ‘இவனிடம் தோற்றேன் நான்!’ என்று சொல்லுமளவிற்கு சத்தமாய் குறட்டை விடுபவன், லிப்ஸ்டிக் ஐப்ரோ சரி பார்த்து உறங்கும் அம்மணி, விடாமல் அழும் குழந்தை, குழந்தைத் தனமான சேட்டைகள் செய்யும் உடல் வளர்ந்த பெரிசுகள் என எத்தனை எத்தனை மனிதர்கள் எத்தனை முகங்கள் ரயில்களில்.

நண்பரொருவர் அனுப்பிருந்த காணொளி ஒன்றில், ஓடும் ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கிடையே ஒரு கையில் குழந்தையைப் பிடித்துக்கொண்டு மறுகையில் உயிரைப் பிடிப்பது போல் கம்பியைப் பிடித்துக் கொண்டு பயணிக்கும் இளம் பெண்மணியைக் காண நேர்ந்தது. விழுந்தால் போய்விடும் உயிர்(கள்). ‘அய்யோ!’ என்று அலறிக் கூவ வேண்டும் போல் இருந்தது. அழவேண்டும் போல் இருந்த து. அழகான அந்த இளம் பெண்ணுக்கு என்ன ஆபத்தோ! பணமோ, மனிதர்களோ, அலுவர்களோ, சமுதாயமோ… எதற்கோ யாருக்கோ அஞ்சி உயிரைக் கையில் பிடித்துப் பயணிக்கிறாளே அவள். அழுகை முட்டுகிறது. அவளுக்கு உதவ யாருமேயில்லையா என்று தவிக்கிறது மனம். ‘க்கூவ்’ என்று அப்போது வரும் ரயிலின் சத்தம் ‘நான் இருக்கிறேன். கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்!’ என்று சொல்வது போல் இருக்கிறது.

உண்மை. ரயில் எவர்க்கும் உதவிகள் புரியம் ஓர் உன்னதம். ரயிலிடம் எவர் வந்தாலும் உதவி உண்டு. அன்றைய கண்ணதாசன் முதற்கொண்டு இன்றைய முத்ரா ட்ராவல்ஸ் அதிபர் வரை தன்னிடம் ஒன்றும் இல்லாமல் வந்தவர்கள் பலபேரை காபந்து செய்து ஊர் சேர்த்திருக்கிறது அது.

பிடித்துப் போன ரயில் காதலர்களுக்கு வேறெதுவும் பிடிப்பதில்லை. ரயிலை கட்டாயம் காட்டிய பாரதிராஜாவும், மணி்ரத்னமும் வேறாக தெரிவார்கள் அவர்களுக்கு.

‘கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திடிச்சி…’ போன்ற
இளையராஜாவின் மிக அசத்தலான பாடல்கள் கொண்ட மோகன், இளவரசி நடித்த படமான ‘குங்குமச் சிமிழ்’ழில் ஒரு பயன்படுத்தாத பழைய ரயில் பெட்டியில் ‘லிவிங் டுகெதர்’ வகையில் வசிப்பார்கள் நாயகனும் நாயகியும். ஒரு நாள் ஸ்டேஷன் மாஸ்டர் வந்து விரட்டி விட வீடற்று தங்களது ரயில் பெட்டியை ஏக்கத்துடன் பார்க்கும் அவர்களது சோகம் பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது அந்த வயதில் எனக்கு.

‘இல்லன்னே… நீங்க இடையில ஏறி இடையில எறங்கறீங்க. இதே ரயில்ல ராஞ்ச்சியிலேருந்து ஆலப்பி வரைக்கும் போறேண்ணே. மூனு நாளு போக, மூணு நாளு வர. ஆறு நாளு ஆடிட்டேருக்கற ட்ரெயின்லயே இருந்து இருந்து எறங்கி வெளியில வந்து நார்மல் தரையில படுத்தா தூக்கம் வர்றதில்லண்ணே! ட்ரெயின் உள்ள ஓடுது நமக்கு!’ என்ற ரயில்வே முதல் வகுப்பு சர்வீஸ் பாய் ஒருவன், என் சென்னை கோவை பயணத்தில் என்னிடம் சொன்னது இன்னும் என் கண்ணில் நிற்கிறது.

ரயில் பழகிப் போனவனுக்கு அது வெறும் பெட்டியல்ல. அவனோடு கலந்த ஓர் உணர்வு. ரயில் வாழ்வியலின் பெரும் பாடம் ஒன்றைக் கற்றுத் தருகிறது.

இங்கே ஏறுகிறார்கள் சிலர். அங்கே ஏறுகிறார்கள் சிலர். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இருப்பவர்களோடு பயணித்தே ஆக வேண்டியுள்ளது. அவரவர் நிறுத்தம் வந்ததும் அவரவர் இறங்கிக் கொள்கிறார்கள்.
யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை அது. யார் இறங்கினாலும், யார் ஏறினாலும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை ரயில்.

என் இளம் பருவத்திலிருந்து எத்தனை ஆண்டுகளாய் எத்தனை பயணங்கள் எத்தனை அனுபவங்கள் தந்திருக்கின்றது ரயில். இதைக் கண்டுபிடித்து, எல்லா எதிர்ப்பையும் மீறி இயக்கிக் காட்டி உலகிற்குக் கொடுத்த ஜேம்ஸ் வாட்டை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. பார்த்து நன்றி சொல்ல வேண்டும்.

‘அய்யே… தூ…! இந்த ட்ரெயினை ஒழுங்கா சுகுரா ஓட்டி உன்னிய ஒழுங்கா சேஃபா கொண்டு போய் சேக்கராருல்ல ஒருத்தரு, இன்சின் ட்ரைவரு! அவர பாத்தியா நீ? அவருக்கு மொதல்ல டேங்க்ஸ் சொல்லு தல, அப்பால ஜேம்ஸ் வாட்டாண்ட காட்டலாம் ஜோலி!
நன்றி சொல்றாராம் நன்றி! தோடா!’ என்கிறது மனசாட்சி.

பரமன் பச்சைமுத்து
பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில்.
04.10.2017

Www. ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *