இந்த மாணவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இயங்கலாம்!

Valarchipaathai - Copy

Valarchipaathai

 

வாழ்வில் சில சங்கதிகள் ‘மேஜிக்’கானவை. எப்படி என்று விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அனுபவித்தவர்களால் உணர மட்டுமே முடியும்.

கல்லூரிப் பருவத்து செல்வ மகன் நித்தின் நன்பனொருவனது காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிர் துறந்தான். தாங்க முடியா இழப்பு, பெற்ற அந்தத் தாய் உடைந்து போனாள். அந்த நிகழ்வு அந்தப் பெண்மணியை தாங்க முடியா மனவழுத்தத்திற்கு இட்டுச் சென்றது. நிறைய பிரச்சினைகளை உருவாக்கியது. ‘மலர்ச்சி’தான் உனக்கு வழி என்று இழுத்து வந்து திரும்பவும் பயிற்சி வகுப்பில் உட்காரவைத்தார் அவரது கணவர். ‘முழுமலர்ச்சி’ (பேட்ச் 19) மாயம் செய்தது அவரை முற்றிலும் மீட்டுத் தந்தது. இழப்பை ஏற்றுக்கொண்டாலும் கடவுள் மீது கடுங்கோபம் ஒன்றை எப்போதும் கொண்டிருந்தார். உள்ளே கனன்று கொண்டிருந்த அது ஒரு பாரமான உளைச்சலைத் தந்து கொண்டேதானிருந்தது.

நேற்று இரவு வளர்ச்சிப் பாதை முடித்து நடந்த ஆழ்நிலை அனுபவம் முடித்து வெளியேறும் போது என் காதருகே வந்து அந்தப்பெண்மணி சொன்னார், ‘நித்தினுக்கு எது நல்லதோ அதைத்தான் கடவுள் செஞ்சிருப்பார். ஏத்துக்கிட்டேன். கடவுள் மேல ஒரு பெரிய கோவம் இருந்தது இத்தனை நாளா. அதை இறக்கிப் போட்டுடேன். இந்தப் ப்ராசஸ்ல கடவுள கட்டிக்கிட்டு அழுதிட்டேன். எல்லாம் கரஞ்சிட்டுது.’ என்று சொல்லி அந்த மஞ்சள் விளக்கொளியில் சிரித்துக் கொண்டு அவர் சொன்னது மகோன்னதம். இனி ஒரு பெண்மணி பாரமில்லாமல் தூங்குவாள். தன் வீட்டு நந்தியாவட்டைச் செடியை பூவை ரசிப்பாள். வாழ்வை வாழ்வாள்.

‘பரமன், பதினேழு வருஷமா ஒரு பிரச்சினையை மனசுல வச்சிட்டு இருந்தேன். யார் கிட்டயும் சொன்னதில்லை அதை. பெரிய பாரம். இன்னைக்கு அது எறங்கி விழுந்துருச்சு. ரொம்ப லைட்டா போறேன்’ என்றார் மென்பொருள் துறையின் தொழில் முனைவோராக இருக்கும் பெண்மணி ஒருவர் என் காதோடு வந்து.

‘இறைவா என்னுள்ளே புனிதம் கொடேன்!’ என்று பரமன் கதறிய போது தங்களுக்கும் தொடங்கிய கதறலை கடைசிவரைக்கும் நிறுத்த முடியவில்லை மகாலக்சுமிக்கும் இன்னும் சிலருக்கும். நல்ல அழுகை அது. உறைந்து போயிருந்த உணர்வுகள் வெடித்துக்கொண்டு வெளி வந்த நல்ல அழுகை அவை.

‘பரமன்… வளர்ச்சிப் பாதை வகுப்பிற்கப்புறம் நடந்த அந்த ப்ராசஸில் எவ்ளோ எனர்ஜி. என் வாழ்நாளில் இவ்வளவு எனர்ஜி என்னைச் சூழ்ந்து நான் உணர்ந்ததில்லை’ – இது ஜனார்த்தணன்.

ஒன்று மட்டும் புரிகிறது – மலர்ச்சி ஒரு உன்னதம். மலர்ச்சியோடு இணைந்திருப்பவர்கள் வளர்வார்கள்.

‘வளர்ச்சியின் அளவுகோல் எவை?’ என்று சில மணித்துளிகள் நடந்த அந்த வகுப்பு வந்திருந்த நூற்றியெட்டுப் பேருக்கும் உள்ளே வெகு நாட்களாய் இறுகியிருந்த பல முடிச்சுகளை அவிழ்த்து விட்டிருக்கும் என்பது திண்ணம். இந்த ஒரு வகுப்பு ஆழமான பல விளைவுகளை ஏற்படுத்தும் என்பது என் பெரும் நம்பிக்கை.

‘ஊரை விட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. ஃபேக்டரி அது இதுன்னு சிட்டில பிசியா இருந்தது லைஃப். இப்போ ஊர்ல என் நிலத்தில விவசாயம் ஆரம்பிச்சிட்டேன். மரக் கண்ணுங்க வைக்கறேன் ஒன்றரை ஏக்கர்ல. ஒரு சின்ன வீடு கட்டறேன். புது அத்தியாத்தைத் தொடங்கறேன். மண்ணு விவசாயம் புடிச்சிடுச்சி. இவ்வளோ வருஷம் கழிச்சி நான் அதுக்கு திரும்பி போனத பாத்து எங்கப்பா ஆச்சரியப் படறாரு. இதுக்குக் காரணம் இந்த மலர்ச்சி.’ என்றொரு நகரத்து மாணவன் ‘முழுமலர்ச்சி’யை உள்வாங்கியதால் ஏற்பட்ட சமீபத்திய விளைவுகளை நேற்று பகிர்ந்ததைப் போல, நெடுநாளைக்குப் பிறகும் இந்த குறிப்பிட்ட நேற்று மாலையின் வகுப்பு ஏற்படுத்திய மாறுதல்களும் தாக்கமும் தொடரும் என்று எண்ணுகிறேன்.   

‘வெடிக்கும் சிரிப்பு, புன்னகை, நெகிழ்வு, ஆழமான உணர்வு, வளரத் துடிக்கும் வெறி, வாழ்வில் நாம் எங்கு நின்றுகொண்டிருக்கிறோம் என்ற ஓர் அசாத்திய புரிதல், இதயம் நனைக்கும் நன்றியுணர்வு, கண்ணீர், இறைச் சக்தியின் மீது பரிபூரண சரணாகதி, உள்ளே பேரமைதியை உணர்தல் – இவை எல்லாமே ஒன்றரை மணி நேரத்தில்… நன்றி பரமன்!’ என்று சந்தியா மனோகரன் குறுந்தகவலில் குறிப்பிட்டிருந்ததைப் போல மிக உன்னதமான ஒரு வளர்ச்சிப் பாதை அது.  முதல் வரியில் சொன்னதைப் போல ‘மேஜிக்கல்’லானது.

கட்செவியஞ்சலிலும், மின்னஞ்சலிலும், நண்பர்களோடு நேரடியாகவும் ‘வளர்ச்சிப் பாதையில் கற்றது என்ன?’ என்று எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ‘வளர்ச்சிப் பாதை’யில் நேரடியாய் அமர்ந்து அனுபவம் கொள்வது என்பது ஒப்பிட முடியாதது. அதிலும் நேற்றைய வளர்சிப்பாதை வேறு ரகம்.

மலர்ச்சி ஒரு உன்னதம்.

(‘பரமன், ‘துறையின் இலக்குகளை நோக்கிய நகர்வு’ ‘வெற்றி தோல்விகளைத் தாண்டிய செயல்பாடுகளின் பாங்கு’ன்னு ஒவ்வொரு வகுப்பிலும் உங்களை கவனிச்சே எங்களுக்கும் நல்ல தமிழ் வந்திடும் போல இருக்கே பரமன்!’ என்று சிரிக்கும் எமொஜியோடு செய்தியனுப்பியிருக்கிறான் மாணவனொருவன். )

ஒரு விஜய் படத்தின் தொடக்கத்தில் வரும் பாடலைப் போல, ‘‘வளர்ச்சிப் பாதை’க்கு வருவோர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை ‘சொன்னாப் புரியாது, சொல்லாட்டித் தெரியாது…’ அதிலும் வளர்ச்சிப்பாதைக்குப் பிறகு ‘மலர்ச்சி மகா முத்ரா’ பயிற்சிக்கு அமர்வோர்களுக்கு கிடைக்கும் ஆழமான அனுபவம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இந்த மனிதர்களுக்காக இந்த மாணவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இயங்கலாம்!

இறைவா நன்றி!

 

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,

பரமன் பச்சைமுத்து

08.10.2017

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *