ராஜாவும் ரஹ்மானும் சில தலைமுறைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையை நோக்கி பயணிக்கிறோம். பாதையை பார்வையை என என் எல்லாக் கவனத்தையும் சுருட்டி இழுத்துக் கொள்கிறது என் ஓட்டுனர் ஒலிக்க விட்டப் பாடலின் இசைச்கலவை. சுக்விந்தர் சிங், எஸ்பிபி, ஸ்வர்ணலதா என மூவரும் மூன்று திணுசில் பாட இவர்களை மீறி ஆனால் சன்னமாய் வருகிறது தபலா ( ரஹ்மான் என்பதால், டிஜிட்டல் தபலாவாக இருக்கக்கூடும்! ‘ரட்சகன்’). எப்பேர்ப்பட்ட கலவை!

நரம்புக் கருவியின் இசை நம் நரம்பை தொடும் தொடக்கம் கொண்ட ‘தாரை தப்பட்டை’யின் ‘பாருருவாய…’ மனதில் ஓடுகிறது. ‘தந்தானத்தானன்னனே..’ என்று ஒலித்து ‘செவ்வந்திப்பூ முடித்த சின்னக்கா…’வில் தொடங்கி ‘சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…’ ‘பொத்தி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசை’ என்று பயணித்து ‘ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே…’ ‘தாரை தப்பட்டை’ நாயகன் என்ட்ரி அடி வரை ராஜாவும்,

‘தமிழா தமிழா..’ என்று தொடங்கி, மேற்கத்திய தேவாலய அக்கெபெல்லாவை ‘ கார வீட்டுத் திண்ணையல கறிக்கு மஞ்சள் அரைக்கயிலே… (ராசாத்தீ)’யில், ‘பருவப் பொண்ணுகிட்டே பாகவம் பேசாதே’யில் வயலின் விளையாட்டில், ‘உசிலம்பட்டி பெண்குட்டி’, ‘ஆத்தங்கரை மரமே’ ‘ஊர்வசி…ஊர்வசி…’ ‘கல் தோன்றி மண் தோன்றி…’ ‘கின்னிக் கோழீ…’ என பயணித்து ‘மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை’ வரை ரஹ்மானும்,

சில தலைமுறைகளை மனவழுத்த நோயிலிருந்து இசைக் கொண்டு கைத் தூக்கிக் காப்பாற்றியிருக்கிறார்கள். மானுடத்தை மன உளைச்சலிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட சேவை!
வாழ்க ராஜா, வாழ்க ரஹ்மான்! வளர்க இவர்களது இசைத் தொண்டு.

(கவிதா கிருஷ்ணமூர்த்தியும், உன்னிக் கிருஷ்ணனும் ‘துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…’ என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள் இதை எழுதும் போது)

வணக்கம் சென்னை!

– பரமன் பச்சைமுத்து
11.10.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *