செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்…

//
செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால் எத்தை தின்னும் ?…எங்கே கிடக்கும் ?

கேள்வி :மதுரகவிஆழ்வார்

“அத்தை தின்னும்
அங்கே கிடக்கும் ”

பதில் : நம்மாழ்வார்

இதற்கு அர்த்தம் தெரிய வேண்டும் நண்பரே …!

உதவி செய்ய முடியுமா? //

பரமன் பச்சைமுத்து: கேட்டதற்கு நன்றி வனிதா!

இது பிறந்ததிலிருந்து பேசாதிருந்த நம்மாழ்வாருக்கும், அவரை நோக்கி வழிநடத்தப்பட்டு வந்து நின்ற மதுரகவி ஆழ்வாருக்குமிடையில் நடந்ததாக வைணவ ஏடுகள் குறிப்பிடும் உரையாடல்.

அவர்கள் சொல்லும் விளக்கத்தில் நான் புரிந்து கொண்டது:

இந்த உடல் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறது. உடலின் உள்ளேயும் வெளியேயும் ஒவ்வொரு இரவிலும் செல்கள் எனும் அணுக்கள் செத்தழிகின்றன. உடல் இந்த செல்களை ஒவ்வொரு நாளும் உதிர்க்கின்றது. ஒரு மைக்ரோஸ்கோப்பின் வழியே பார்த்தால் நம் உடலிலிருந்து உதிர்ந்த செல்களைக் காணமுடியும் என்கிறது அறிவியல்.

சரி செத்துக் கொண்டிருக்கும் உடல் எப்படி இயங்குகிறது, எப்படி வாழ்கிறது? உயிர் உடலின் உள்ளே இருப்பதால், அணுவின் அணுவுள்ளே ( //சின்னது//) இருப்பதால், செத்த உடலிலிருந்து வேண்டிய சக்தியை எடுத்துக் கொண்டு புதிய புதிய செல்களை உருவாக்குகிறது. உயிர்ப்பு தருகிறது. இறந்த செல்களை முடியாகவும், நகமாகவும் மாற்றி மீதியுள்ளவற்றை வெளித்தள்ளுகிறது.

உள்ளிருப்பதை தின்னும், உள்ளேயே இருந்து இயக்கும் என்பதை // அத்தைத் தின்னும் அங்கேயே கிடக்கும்// என்று சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.

இது தவிர, என் சுய விளக்கமாக வேறொரு விளக்கமும் உண்டு. ‘அது என்ன சுய விளக்கம் பரமன்?’ என்பது உங்கள் கேள்வியாக இருக்கக் கூடும்

எனது தனிப்பட்ட புரிதல்.

எனது உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெரும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். ஒரு மாத காலம் உள்ளே ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு மருந்துகள் மாத்திரைகள் ஏற்றப்பட்டு முற்றிலும் கிருமிகளே வராவண்ணம் காக்கப்பட்டார். பார்ப்பவர்கள் யாவரும் காலணியின்றியும் வாய் பட்டையணிந்துமே அனுமதிக்கப் பட்டனர். வெளி உயிரிகள் -கிருமிகள் எவையும் அவரை அனுகிவிடக்கூடாதென்பதில் வெகு சிரத்தையாக இருந்தனர். ஒரு்மாத மருந்தில் மாத்திரையில் உள்ளேயே லேப் அறையில் இருந்து கிருமிகளே இல்லாமல் பாதுகாக்கப் பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் இயக்கத்தில் சிக்கல் வந்து இறந்து போய் விட்டார். கிருமிகளே இல்லாத உயிரிகள் பாக்டீரியாக்கள் நுழைய முடியாத கடும் பாதுகாப்பு கொண்ட அறையில் ஒரு மாதம் இருந்தவர், கிருமி நாசினிகளாலும், ஆன்ட்டிபயோடிக்களால் உடல் நிரப்பப்பட்டவரின் உடல் இறந்த உடன் என்னவாகும்?

வயிற்றில் கிருமிகள் உருவாகும், சிறு சிறு புழுக்கள் உருவாகும். அவை அந்த உடலைத் தின்று அங்கேயே கிடக்கும்.

கிருமிகளும் உயிரிகளும் நுழைய முடியா அந்த அறையில், எதிர்வினை பாதுகாப்பு மருந்துகள் ஏற்றப்பட்ட அந்த உடலுக்குள் கிருமியும் புழுக்களும் எப்படி வந்தன? அதுதான் // கிருமி… கிருமி.., ஜெர்மி செக்… ஆன்டி பயோடிக்…// என்று பம்மாத்து காட்டி பணம் பண்ணும் மருத்துவ மாஃபியாக்களால் பதில் சொல்ல முடியா கேள்வி.

கிருமிகள் என்று பயங்காட்டி ஒதுக்கி வைக்கப்படும் அந்த உயிரிகள் உண்மையில் ஒதுக்க முடியாதவை. இயற்கை பல்லுயிர்களோடு சேர்த்தே நம்மைப் படைத்திருக்கிறது.

உடல் தன்னைக் காத்துக் கொள்ளும், அதற்கு வேண்டியதை சரியாகக் கொடுக்கும் போது.

//செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால், சின்னது அத்தைத் தின்னும் அங்கேயே கிடக்கும் // என்று நம்மாழ்வாரும் மதுரகவியும் உரையாடியது கிருமிகளை வைத்து பயங்காட்டி பணம் செய்யும் உலகிற்கு ‘பளார்’ என்று கொடுத்ததாகப் படுகிறது எனக்கு.

:பரமன் பச்சைமுத்து

சென்னை

19.10.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *