‘மேயாத மான்’ திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

மேயாத மான் - Copy

மேயாத மான்

புனல் ரேடியோ கட்டிக்கொண்டு திடீர்க் ‘கானா’ப் பாடல்களையும் சினிமாப் பாடல்களையும் பாடும் இசைக்குழு நடத்தும் ஒரு அக்மார்க் வடசென்னை ராயபுரத்து இளைஞனுக்கும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் காதல் வந்தால், அதைப் பீறாய்ந்து வழிக்குக் கொண்டு வருவதற்குள் அவனது தங்கையின் மனதில் காதல் என்று ஒரு முடிச்சு விழுந்தால்… என திரைக்கதை கட்டி அதில் முடிச்சுகளை மிக லாவகமாக அவிழ்த்து ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குனர். வடசென்னையை வடசென்னையின் மாந்தர்களை அவர்களது ஒரேயடியாய் கோபம் அல்லது சில்லென்ற குளுமை என்னும் உணர்வுகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.

கல்லூரியில் பயிலும் பெண்ணின் மீது காதல் கொண்டு அதை மூன்று ஆண்டுகளாக வெளியே சொல்லாமல் உள்ளேயே வைத்துக்கொண்டு குமுறும் ‘இதயம் முரளி’யாக (‘அதர்வா அப்பா மாதிரி’ என்று வசனம்!) வைபவ், கண்டிஷனர் போட்டு பளபளவென்று நிற்கும் தலைமுடி விஷயத்தைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் தன்னை ஒரு குப்பத்து இளைஞனாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார்.  நாயகி கேட்டதைத் தந்திருக்கிறார். நன்று.

படத்தின் உண்மையான நாயகன் வசனமும், நாயகி நாயகனின் தங்கை ‘சுடர்’ எனும் பாத்திரத்தில் வரும் அந்தப் பெண்னணும்தான். குப்பத்துப் பெண்ணாகவே மாறி விட்டார் அவர். சில காட்சிகளில் எதிரில் இருப்பவர்களை நடிப்பில் தின்றும் விடுகிறார். ‘லவ் லெட்டர்’ கொடுத்ததாக நடக்கும் ரகளை, ‘பனங்கெழங்கு வாங்கி வரியா’ போன்ற காட்சிகளின் போது என பின்னுகிறார்.  

நாயகனின் நண்பனாக வரும் விவேக் பிரசன்னா மிக நன்றாக செய்திருக்கிறார்.

‘இல்ல மச்சி, காமர்ஸ் சார கோத்து வுட்டுடலாம்ன்னுதான் அவர் வீட்டு மாடிக்கு வந்தேன்’ ‘தண்ணிய, நீங்க வேற எதால குடிப்பீங்க?’ ‘இந்த ஒரு ஃபோனப் போட்டு வேலைய முடிச்சிரு. கல்யாணம் நின்னு போச்சு சொல்லு’ ‘தோத்திரம் ஃபாதர்’ என பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

 

இது முதலில் குறும்படமாக வந்து இப்போது படமாக வந்திருக்கிறதாம். இடைவேளைக்கு முன்பு சில நிமிடங்கள் இழுப்பதைப் பொருத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

‘அன்பெல்லு பேய் வர்றா, அன்பின் குட்டித் தாய் வர்றா’ பாடல் நல்ல குத்து.  

‘வி – டாக்கீஸ்’ வெர்டிக்ட் : ‘மேயாத மான்’ – ‘மெர்சலின் மிகை வெளிச்சத்தில் தெரியாத மான்’. மாஸ் ஹீரோ, ஹீரோயிசம், இப்படித்தான் படம் இருக்கவேண்டும் என்று முன்முடிவுகள் கொள்ளாத சினிமா விரும்பிகள் ரசிப்பார்கள். இயக்குனர் கவனம் ஈர்க்கிறார்.

 : திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

 www.ParamanIn.com

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *