யார் அந்தப் புண்ணியவானோ, அவருக்கு என் பெரும் வணக்கம்! …

தேவனூர் பகுதியில் வாழும் இருளர்கள் வாழ்வில் திடீரென்று ஒரு ஒளி பாய்ந்துள்ளது. தேவனூர் பகுதியில் திடீரென அதிக அளவில் மீன்களும் நண்டுகளும் வளர்ந்துள்ளன. அதைப் பிடித்து விற்பதில் அவர்களது வாழ்வாதரங்களும் மகிழ்ச்சியும் உயர்ந்துள்ளன.

தேவனூர், சாத்தனஞ்சேரி, பழவேரி, சீதாவரம், படூர், அரும்புலியூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குடிநீர் தேடியலைந்தவர்களும் விவசாயிகளும் அதிசயித்து மகிழ்கிறார்கள்.

எப்படி நடந்தது இந்த அதிசயங்கள்?

தமிழகத்தில் பாயும் அதிக அகலம் கொண்ட நதிகளில் மிக முக்கியமானது பாலாறு. மணல் சுரண்டல்களாலும் அண்டை மாநில அரசியல்களாலும் தமிழகத்தில் வறண்டு கொண்டிருக்கும் நதிகளில் இதுவும் ஒன்று. நீரின்றியே அதிகம் காணப்படும் இதில் ஆந்திரப் பகுதியில் மழை அடை பெய்தால் மட்டுமே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எல்லா நீரையும் ஓட விட்டுவிட்டு ‘நீரில்லை நீரில்லை’ என்று புலம்புவது நம் வாடிக்கை. இந்தப் பாலாற்றில்தான் மீன்களும் நண்டுகளும் செறிந்துள்ளன. இதே பாலாற்றால் தேவனூரைச் சுற்றியுள்ள முப்பது கிராமத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. எப்படி!

தேவனூரில் பாலாற்றின் குறுக்கே கருங்கற்கள் கொண்டு 8 மீட்டர் அகலத்திற்கு தரைகீழ் தடுப்பணை ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். இந்தத் தரைகீழ் தடுப்பணையால் எல்லா நீரும் ஓடாமல் தடுக்கப் பட்டு செறிவூட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியே நீர்வளம் – மீன்வளம் – மக்களின் வாழ்வு வளம் என உயர்ந்துள்ளது.

இப்படி ஓர் நீர் செறிவூட்டும் தரை கீழ் தடுப்பணை வேண்டும் என்று முதலில் சொன்ன விவசாயி யாரோ, அதை முன்னெடுத்து செய்ய அனுமதித்த அதிகாரி யாரோ, அதை செயல்படுத்தியவர் யாரோ… அந்தப் புண்ணியவான்களை கரம் குவித்து வணங்குகிறேன்.

பாலாற்றில் இன்னும் சில பகுதிகளில் சில தரைகீழ் அணைகள் கட்டினால் காஞ்சிபுரத்தை குடியாத்தத்தை வாணியம்பாடியை காப்பாற்றலாம். தமிழகத்தில் மழை நீர் பாய்ந்து ஓடும் மற்ற ஆறுகளில் இதைச் செய்தால், தமிழகத்தையே காப்பாற்றலாம். நீர் ஆதாரங்கள் சுருங்கிப் போய் நிற்கும் தமிழகத்தின் இன்றையத் தேவைக்கு முன்னுதாரங்கள் காட்டுகிறார்கள் இவர்கள். அரசு உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டிய சங்கதி இது.

முகம் தெரியாத அந்த மனிதர்களுக்கு என் மலர்ச்சி வணக்கம்!

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
30.10.2017

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *