இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?

20171112_105758806489332.jpg

‘இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?’

பரி கேட்ட இந்த கேள்வி அறியாமையால் வந்ததல்ல. கண்ணின் முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கடல் போல் நிறைந்திருக்கும் இப்படி ஒரு ஏரியை கண்டத்தில் எழுந்த வியப்பு. ‘இல்ல பரி, காஸ்பியன் இருக்கு. அதுக்கப்புறம் ஆப்பிரிக்காவின் லேக் சுப்பீரியர், விக்டோரியா ஏரின்னு நிறைய இருக்கு!’ என்று சொல்லவில்லை. முழுக்கொள்ளவை எட்டி நிறைந்து நிற்கும் இவ்வளவு பெரிய ஏரிக்கு முன் நின்று கொண்டு அதில் கரையாமல் அனுபவத்தை பேசிக்கலைப்பது மூடத் தனம் அல்லவா.

கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ காவியத்தின் தொடக்க இடமாக வைத்த ஏரி. என் குலம் உழுதுண்டு உணவுண்டு உயிர் தழைக்கக் காரணமான ஏரி.

கல்கி இந்தக் கரையில் நின்று பார்த்திருக்கக் கூடும். இல்லையென்றால் அப்படியா எழுதியிருக்க முடியும்! இந்தக் கரையின் வழியே நடந்து பார்த்திருக்க வேண்டும். அதனாலேயே ‘ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் என்று சொல்லப்படுவது உன்மைதானா என்பதை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான். ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்தடைந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்’ என்று குதிரையில் வரும் வந்தியத்தேவனைப் பற்றி அப்படி சொல்லியிருக்க முடியும்.

ராஜராஜ சோழன் ‘அரசாட்சியும் அரசியலும் வேண்டாம் போங்கடா!’ என்று எல்லாவற்றையும் துறந்து விட்டு காட்டுமன்னார்குடியில் வந்த வசித்த அந்த பன்னிரண்டு ஆண்டுகளில் பல முறை இந்த ஏரியின் கரையில் நின்று ராஜாதித்யனை நினைவு கூர்ந்திருக்கலாம். தந்தையின் உணர்வு தனயனுக்கும் கடத்தப் பட்டிருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ அவன் தஞ்சையிலிருந்து இந்தப் பகுதிக்கு நகர்ந்து வந்து ஜெயங்கொண்டத்தில் அமர்ந்து கொண்டான் போல, தனது பிள்ளைகளில் ஒருவனுக்கும் ராஜாதித்யன் என்று பெயர் வைத்தான் போல.

எப்பேர்ப்பட்ட பிள்ளையாய் இருக்கவேண்டும் அந்த ராஜாதித்ய சோழன்! தில்லைக் கோயிலுக்கு பொற்கூரை வேய்ந்த தந்தை பராந்தகனுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறான். வடகாவிரியில் (கொள்ளிடம்) வீணே கடலுக்கு ஓடும் நீரை திருப்பி விட்டு கடல் போன்ற இவ்வளவு பெரிய ஏரியை வெட்டி தனது தந்தையின் பெயருக்கு சமர்ப்பணம் செய்து விட்டான். (பராந்தக சோழன், வீரப் பெருமாள்). நூற்றாண்டு காலங்களாய் எத்தனை எத்தனை ஊர் செழித்திருக்கிறது!

போருக்குக் காத்திருக்கும் வீரர்களை இப்படி ஏரியமைக்கப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்த அவன் பால், சோழர்கள் திரும்பவும் வரக் காரணமான தக்கோலம் போரில் ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ராக களமாடி மார்பில் வேல் வாங்கி வென்று இறந்த அவன் மேல், அவனது கொள்ளுபேரன் ராஜராஜனைவிடவும் அதிக மரியாதை எழுகிறது எனக்கு.

‘அம்மா… இத்தனை நாள் எங்களை காத்ததற்கு நன்றி! இனிமேலும் காத்திடு’, முழங்கால் அளவு நீரில் அம்மாவோடு இறங்கி நின்று ஏரியைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.

அவர்களை செல்லிடப் பேசியில் படமெடுத்துக் கொண்டே திரும்பவும் கேட்டான் பரி,

‘இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?’

‘இல்ல! ஆனால் நம்மள மாதிரி நிறைய பேரோட உயிரைக் காத்த ஏரி!’

பரமன் பச்சைமுத்து

வீராணம் ஏரி (வீரப்பெருமாள் நல்லூர் ஏரி)

12.11.2017

www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *