நினைவுகளை பதிவதும், பதிந்தவற்றை நினைவு கூறுவதுமே வாழ்க்கையின் ஒரு பகுதியை உன்னதமாக்கிவிடுகின்றன

மார்கழியின் குளிர், வாசல் தெளித்து தெருவடைத்து
அன்னையர் இடும் எண்பதுப் புள்ளிக் கோலம், பசுஞ்சாணத்தில் செருகப்படும் பூசணிப்பூ, மிளகும் பாசிப்பருப்பும் நெய்யும் தூக்கலாக இருக்கும் பெருமாள் கோவிலின் பொங்கல் என மார்கழியின் நினைவுகள் உன்னதமான கலவையென்றாலும், என் மார்கழி நினைவுகளுக்கு உன்னதம் சேர்ப்பவை பதிக – பாசுரங்களே.

பெண்ணாய் உருவகப்படுத்தி நற்றமிழில் மணிவாசகர் துயிலெழுப்பும் வெம்பாவையை விட திருப்பள்ளியெழுச்சியைக் கொண்டாடுபவன் நான்.

சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரால் ஏற்பட்டது என் திருவரங்கத்து ஈர்ப்பு. ராம்ஜீயால் அதிகமானதது. திருவரங்க ஈர்ப்பால் திருப்பாவையை நோக்கி நகர்தல் நடந்தது.

சூடிக்கொடுத்த சுடற்கொடியின் ஆழ்தமிழில் அசந்து திளைத்தாலும், என் சிறுவயதில் என் தந்தை பாடி மற்றும் ஒலிக்க விட்ட தரும்புரம் சுவாமிநாதனின் பதிவுகள் என்னுள்ளே நுழைந்து,
மார்கழி மாதத்து சுத்த தேங்காய் எண்ணெயைப் போல வெண்மையாய் உறைந்து கிடக்கின்றன.

அதனாலேயே,
யார் இசைத்தாலும்,
‘போற்றியென் வாழ் முதலாகிய பொருளே…’ ‘கூவின பூங்குயில்…’ போன்றவை இன்னமும் கிளர்ந்து எழும்புகின்றன, கிளர்ந்து எழுப்புகின்றன என் உணர்வை.

நினைவுகளை பதிவதும், பதிந்தவற்றை
நினைவு கூறுவதுமே வாழ்க்கையின் ஒரு பகுதியை உன்னதமாக்கிவிடுகின்றன.

அவ்வகையில் மார்கழித் திங்கள் என் உணர்வின் உன்னதத் திங்கள்.

திருப்பள்ளியெழுச்சியை படிக்கும்போதெல்லாம் கேட்கும் போதெல்லாம், திருப்பெருந்துறை நினைவு வந்து பெரிய புராணத்து திருநாளைப்போவார் போல் ஆகிவிடுகிறேன் நான்.
நாளை போவேனோ!

– பரமன் பச்சைமுத்து
17.12.2017
சென்னை

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *