‘வேலைக்காரன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Velaikkaran-Tamil-2017-20171203115305-500x500

Velaikkaran-Tamil-2017-20171203115305-500x500

சென்ற முறை மருத்துவ குற்றம் செய்யும் தனி ஒருவன் அவனை எதிர்க்கும் தனி ஒருவன் என்று படம் எடுத்த மோகன் ராஜா இந்த முறை நுகர்வோருக்கு குற்றம் செய்யும் தனி ஒருவன் பற்றி எடுத்திருக்கிறார்.

கூலிக்கார குப்பம் என்ற தனது குப்பம் கொலைகாரன் குப்பம் என்று மாற்றப்பட்டுள்ளதை எதிர்த்து மாற்றத்தைக் கொண்டு வந்து தன் மக்களை மீட்க இறங்கும் குப்பத்து இளைஞன், மாற்றம் என்று போன வழியில் மருண்டு நிற்கிறான். உயிர் நண்பனின் உயிரை இழந்து, நண்பனைக் கொன்ற தனது வாழ்நாள் எதிரியை மரணத்தின் விளிம்பிலிருந்து காக்கிறான். ஏன் இப்படிச் செய்கிறான்? குப்பத்து தாதா காசி எதிரி இல்லையென்றால், உண்மையான எதிரி யார் – என்று விரிகிறது படம்.

கார்ப்பரேட் நிறுவனத்தின் நேர்முகத்தேர்வுக்கான காத்திருப்பு வளாகத்தில் அறிமுகமாகும் அந்தக் காட்சித் தொடங்கி விளக்குகளை அடித்து உடைக்கும் இறுதிக்காட்சி வரை அட்டகாசமாக அடித்து ஸ்கோர் செய்யும் வாய்ப்பு ஃபகத் ஃபாசிலுக்கு. அடித்து ஆடியுள்ளார். சொந்தக் குரலாமே!

வெறும் காமெடி காதல் பாட்டு என்றே பயணித்து அவற்றைத் தவிர்த்துவிட்டு அடுத்த நிலைக்கு வந்துள்ள சிவகார்த்திகேயனுக்கு, ஃபகத் ஃபாஸில், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, ரோகினி என்று சீனியர் நடிகர்களோடு சேர்ந்து இயங்கிக் கற்றுக்கொள்ள களம் தந்த இது முக்கியமான படம்.. மனம் நொந்த ஒரு சராசரி குடிமகனின் நிலையில் அவர் பேசும் வசனங்களுக்கு அரங்கில் எழும் கைத்தட்டல்களே அதற்கு சாட்சி. பெரிய குழந்தைகள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நிறைய முன்னேறியிருக்கிறார்.  

குப்பத்திற்கு வந்து வசிக்கும் ஐயர் பெண்ணாக வரும் நயன்தாரா பாத்திரம்… பாவம். காதில் மிருணாளினி என்று எழுதி தோடு அணியும் அளவிற்கு அவருக்கு வடிவம் கொடுத்தவர்கள் அந்தப் பாத்திரத்திற்கும் இன்னும் கொஞ்சம் வடிவம் கொடுத்திருக்கலாம்.

ரோபோ சங்கர், பிரகாஷ் ராஜ், ரோகினி, சார்லி, சதீஷ், வசந்த், மன்சூர் அலிகான், தம்பி ராமையா என்று பெரிய கூட்டமே இருக்கிறது படத்தில்.

இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனம் என்றால் ஒரு மிகச்சிறிய அரங்கிற்குள் கூடி விடக்கூடிய அளவில்தான் ஊழியர்கள் இருப்பார்களா? தேசிய அளவில் அவ்வளவு பெரிய நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்கள் நேற்று வந்த ஒரு சிறிய பையனுக்குப் பயந்து கொஞ்சம் கூட சிந்திக்காமல் ஒரே மீட்டிங்கில் தங்களது நிறுவனத்தை எழுதித் தருவார்களா? சாஃரோன் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான குடும்ப விழாவில் நயன்தாராவும் ஆர் ஜே பாலாஜியும் வந்ததெப்படி? ஐந்து பெரும் நிறுவனங்களையும் விழுங்கி இந்த தேசத்தின் ஒட்டு மொத்த நுகர்வோரையும் தனது பைக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கும் அவ்வளவு சிந்திக்கும் அதிபன் பாத்திரம் சினேகாவை நேரில் போய் பார்த்த பின்பும் அவரை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவாரா? போன்ற கேள்விகளைத் தவிர்த்து விட்டு என்ஜாய் பண்ணிவிட்டு வரலாம்.

பரபரவென்று போகும் திரைக்கதை அமைத்து சரியான வசனங்கள் வைத்து படம் தந்ததில் மோகன் ராஜா வெற்றி பெற்று விட்டார். பொழுது போக்குப் படமென்றாலும் நம்ம பாக்கெட்லயே ஏண்டா கை வைக்கறீங்க?’ தேவையில்லாதத ஏண்டா வாங்கறோம்?’ என்ற வசனங்கள் சிந்திக்கவே வைக்கின்றன.  

கறுப்புன்னா கலீஜா… பாடல் நல்ல குத்து.

வி- டாக்கீஸ் வெர்டிக்ட்: வேலைக்காரன் – வீரியமானவன்,  பொழுதுபோக்குக்கு உகந்தவன். பார்க்கலாம்.

 

    திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *