பல்லாயிரம் பெலிக்கன்கள்

படகில் பயணிக்கும் போது பக்கத்து தொட்டு விடும் தூரத்து திட்டில் பல்லாயிரம் பெலிக்கன்கள் முதுகைக் காட்டிக் கொண்டு கோடைகாலத்தில் வரும் டிஸ்னி படங்களில் வருவதைப் போல ஒரே இடத்தில் சேர்ந்து உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு! மலர்ச்சி மாணவர் கார்த்திகேயனோடு ‘டச்சுக்காரர்களின் கல்லரைகளை பார்த்து வருவோம் வா!’ என்று ஒருமுறை பழவேற்காடு ஏரிப்பக்கம் போன போது கொண்ட அனுபவம் அது.

அவ்வளவு பெலிக்கன்களைப் பார்த்த பரவசத்தில் ‘உடுறா என்னை!’ என்று பாதி் வழியில் படகிலிருந்து நீரில் குதித்து பறவைகளிருந்த மணற்திட்டை நோக்கி நான் போனதில் கொண்ட அதிர்ச்சி போக சில மணி நேரங்கள் ஆனது கார்த்திக்கு.

மெதுவாக பின்னாலிருந்து நெருங்கிய போதும் கடைசி வரிசை பெலிக்கன் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் திரும்பியே பார்க்காமல் சில அடிகள் நகர்ந்து விலகியது் எங்களின் உச்சகட்ட பிரமிப்பு. உட்கார்ந்து நகர்ந்து நின்று என பல நிலைகளில் வெகு நேரம் முயற்சித்தோம். ‘குட்டி, கேளேன்! கொஞ்சம் பக்கத்துல வர்றேனே! எவ்வளவு தூரத்திலேருத்து பறந்து வந்திருப்ப நீ!’ என்று நான் பேசியதை விட ‘கர்ர்’ என்று தூரத்துப் பெலிக்கன் ஒன்று பேசியதையே கேட்டு நகர்ந்தது அது. ‘ஏய்… மனுஷன் ஒருத்தன் உனக்கு பின்னால இரண்டு அடி தூரத்துல வர்றான். நகரு!’ என்று அதற்கு பொருள் இருக்கலாம்.
‘டான் ஆஃப் த ப்ளானட் ஆஃப்த ஏப்ஸ்’ படத்தில் வரும் குரங்குகள் மொழி போலவே இவைகளும் தங்களுக்கான ஒரு மொழியைக் கொண்டிருக்கலாம்.

பழவேற்காட்டில் ஃப்ளங்கோ, பெலிக்கன்கள் குவிந்திருக்கின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருக்கிறது.

காணும் பொங்கல், எம்ஜிஆர் பிறந்த நாள் என்று தொடர் விடுமுறைக்கு எங்காவது போகலாம் என்றெண்ணுபவர்கள் பழவேற்காட்டுக்கும், சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கும் போய் வரலாம்.

பரமன் பச்சைமுத்து
சென்னை
16.01.2017

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *