பொன்னியின் செல்வன் போல சரித்திர நாவல் வேண்டுமா?

கேள்வி: சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் ‘பொன்னியின் செல்வன்’ வாங்கினேன். படித்தேன். அருமை. இது போன்ற இதற்கு ஈடான சரித்திர நாவல்கள் ஏதும்?

பதில்: சரித்திர நாவல்கள் என்றாலே சாண்டில்யன் என்று சொல்லும் நிலை இருந்தது ஒரு காலத்தில். அரு ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி,’ சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்த குமாரன் கதை’ ஆகியவை சிறந்த படைப்புகள்.

ராஜராஐ சோழன் படத்திற்கு கதை வசனம் எழுதிய அரு. ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ நிச்சயம் உங்களை வேறோர் உலகத்திற்குக் கூட்டிச் செல்லும். சரித்திர புனைவுகள் ரசிப்பவர் என்றால் இதை நிச்சயம் படியுங்கள். திருப்பங்களும் நிகழ்வுகளும் உண்மையில் பொன்னியின் செல்வனை விட சிறப்பாக இருக்கும். வந்தியத் தேவனைத் தாண்டி வாள் நிலை கொண்டான் ஜனநாதன் என்னும் சோழீய வீரன் உங்கள் மனங்கவர்வான். குலோத்துங்க சோழனின் மதுரை வெற்றியின் போது பாண்டிய நாடு, சேர மகராணி, ஈழத்து ஆதரவாளர்கள், சோழீய அதிகாரிகள் ஆகிய பின்னணியில் கம்ப ராமாயணத்தைக் கலந்து கட்டி தந்திருப்பார் நூலாசிரியர்.

பொன்னியின் செல்வன் ராஜராஜன் ஆட்சிக்கு வரும் முன்பு நடப்பதான புனைவு. ஆட்சிக்கு வந்த பின்பு சேரதேசத்தின் மீது கொண்ட முக்கிய போரான ‘காந்தளூர்ச் சாலை’ போர் பற்றிய புனைவு ‘காந்தளூர் வசந்த குமாரன் கதை’. தன்னுடைய வழக்கமான ‘கணேஷ் – வசந்த்’ஐ கணேச பட்டராகவும், வசந்த குமாரனாகவும் இறக்கி கலக்கியிருப்பார் சுஜாதா. விறுவிறுப்பு நிறைந்த சரித்திர புனைவு, ஒரே நாளில் படித்து முடித்து விட முடியும்.

சு. வெங்கடேசனின் ‘வேள்பாரி’ இன்னும் அட்டகாசம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *