எப்படி இருந்திருப்பான் ராஜராஜ சோழன்?

கோப்பரகேசரி சிவபாதசேகரன் அருண்மொழி வர்மன் என்னும் ராஜராஜ சோழன் எப்படி இருந்திருப்பான் என்று சரியாய்க்காட்ட வடிவங்கள் இல்லை. ராஜராஜ சோழன் என்று இணையத்தில் கிடைக்கும் பித்தளைச் சிலை வள்ளுவர் உருவம் போல் அனுமானத்தால் உருவாக்கப்பட்டது என்பது என் எண்ணம் ( மார்ச் 2018 மாத ‘வளர்ச்சி’ இதழின் முகப்புக் கட்டுரைக்கும் அட்டைப் படத்திற்கும் இந்தச் சிலையையே பயன்படுத்தியிருக்கிறோம் என்பது தனிச் செய்தி.) கலைந்து காணப்படும் ராஜராஜன் கருவூர்த்தேவர் சித்திரமும் தெளிவாக இல்லை. இந்நிலையில் ஓரளவு நம்பலாமென எண்ண வைக்கும் உருவம் ஒன்று கிடைத்துள்ளது.

தஞ்சை பெருவுடையார் கோவிலில் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன, அவற்றின் மதிப்பு நூறு கோடி என்று செய்தி வெளியாகியுள்ளது.

தூசிப் படிந்த ஒரு சிலை பீடத்தை ஆராய்ந்த போது, அதில் தெரியும் ஓர் ஓட்டையின் உள்ளே மூன்று ஐம்பொன் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை ஐஜி பொன் மாணிக்கவேல் கண்டெடுப்பதைக் காணொளிக் காட்சியில் காணும் போது பதைபதைக்கிறது உள்ளம்.

நூறு கோடி என்பது அரசாங்க மதிப்பு. இதன் சந்தை மதிப்பு நிச்சயம் அதிகமிருக்கும். இன்னும் எத்தனை சிலைகள் என தெரிய வரும்போது கோடிகளும் கூடும் என்பது நிச்சயம்.

ராஜ ராஜனின் மனைவிகள் என்று ‘உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், திருபுவன மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார்’ என பதினாறு பேரின் பெயர்கள் ‘நம் பெண்டுகள்’ என்று அவராலேயே தஞ்சைப் பெரிய கோவிலில் கொடைப்பற்றிய குறிப்பில் பொறித்து வைக்கப் பட்டுள்ளது. தந்திசக்தி விடந்தை என்றழைக்கப்படும் உலக மகா தேவியாரே பட்டத்து அரசி என்றும் கல்வெட்டுக்கள் மற்றும் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றன.

இந்த உலக மகா தேவியின் சிலையும், ராஜராஜனின் சிலையும்தான் காணாமல் போனவை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப் பட்ட இந்தச் சிலைகளின் படத்தை ஐஜி பொன் மாணிக்கவேல் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறார் (குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆராய்ச்சி மேற்கோளோடு).

‘பரமன், இந்த சிலை மட்டும் ராஜராஜனின் நிஜ உருவத்தோடு ஒத்துப் போகும் என்பதற்கு என்ன ஆதாரம்? எப்படி உங்களால் சொல்ல முடியும்!’ என்பது உங்கள் கேள்வியாயிருந்தால், இதோ எனது அனுமானம்:

ஐம்பொன்னில் செய்யப்பட்ட ராஜராஜன், உலகமகா தேவி ஆகியோரின் சிலைகளை கோவிலுக்கு கொடையாக கொடும்பாளூர் கிழவன் மலையமான் தந்ததாக கோவிலிலேயே கல்வெட்டுக்கள் உள்ளன. ‘சரி, அதுக்கு இன்னா இப்போ!?’ என்று கேட்காமல் மேலே படியுங்கள்.

யாரிந்த கொடும்பாளூர்க் கிழவன்? திருபுவன மாதேவியார் எனப்படும் வானவன் மாதேவியின் (சோழ வேங்கை ராஜேந்திர சோழனின் தாயார்.
‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் குந்தவையின் தோழியாக வந்து ‘யானைப் பாகா… யானைப் பாகா!’ என்று அருண்மொழியைக் காதலிக்கும் வானதி இவரே!) தந்தை. ராஜராஜனின் மாமனார்.

பாண்டிய ஆபத்துதவிகளோடு சேர்ந்து கொண்டு அருண்மொழி – ஆதித்த கரிகாலன் – மன்னர் சுந்தர சோழர் என மூவரையும் கொலை புரிய உத்தம சோழன் முயற்சித்த போது உடன் நின்று காத்ததாக புனைவுககளில் சொல்லப்பட்டிருக்கும் புதுக்கோட்டை மன்னன். இவன் வடித்து கொடையாகக் கொடுத்த சிலைகளே இப்போது காணாமல் போனவை. ராஜராஜன் காலத்திலேயே வடிக்கப்பட்ட சிலையென்பதால், வடிவம் ஓரளவிற்கு உண்மையாயிருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

சிலை வடித்துக் கொடை கொடுத்த அந்தக் கிழவனுக்கும், அதை நல்ல வேளையாக கல்வெட்டில் பொறிக்கச் செய்த ராஜராஜனுக்கும், பல ஆண்டுகளாய் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சூறையாடல்களை வெளிக்கொண்டு வர இயங்கும் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கும் மலர்ச்சி வணக்கங்கள்.

எது அந்த சிலை? பார்க்க படம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
04.03.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *