‘கத்தி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Kaththi

Kaththi

அந்தக் காலத்தில் மிகப் பெரிய ஹிட்டடித்த ‘வாணி – ராணி’, எம்ஜியாரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ரஜினியின் ‘ராஜாதிராஜா’ ‘அதிசய பிறவி’ ரக சாதுவான நல்லவர் ஒருவரின் இடத்தில், அவரைப் போலவே உருவம் கொண்ட பொல்லாதவர் வந்து உட்கார்ந்து ஆடும் அதே ஆள்மாராட்ட ஆக்ஷன் கதை, புதுக்களம் என்ற ஆயில் பிரிண்ட் போடப்பட்டிருக்கிறது.

உழுதுண்டு வாழ்ந்தவர்கள் எல்லாம் நசிந்துபோய் இப்போது தொழுதுண்டு வாழ்வதற்குக் காரணம் நீரின்றி அமைகிறது அவர்கள் உலகம். இந்த தேசத்தின் அடிநாதமாயிருந்த அவ் விவசாயிகளின் வாழ்க்கைப் பொய்த்துப் போனதற்குக் காரணம் வான் பொய்த்ததல்ல, வலியவர்கள் சிலர் அதிகப்படியாய் நீரை உருஞ்சுவதே என்ற ஒரு கருத்தைக் கமர்சியல் தோரணங்கள் கட்டி கல்லாக் கட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.

(கோலா கம்பெனிகள் நீரை உறிஞ்சி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறிஞ்சி அழிக்கின்றன, கோலா கம்பனிகள் அழியவேண்டும் என்னும் கருத்துக்களை அந்தக் கோலா கம்பெனியின் நிஜ பிராண்ட் அம்பாசிடர் விஜய்யை வைத்தே எடுத்திருப்பது இது வெறும் கமெர்சியல் கல்லா கட்டும் ஆட்டம் என்று இடித்துரைக்கிறது!)

விஜய் மாதிரி ஒரு ஆளை வைத்துக்கொண்டு, முருகதாஸ் மாதிரியான இயக்குனர் எப்படி ஒரு ஒரு படம் தந்திருக்கவேண்டும் என்று நினைக்க வைக்கும் முதல் அரை மணிநேரத்தைக் கடந்து, படம் தொடங்கும் போது இடைவேளை வருகிறது. இரண்டாம் பாதி பரவாயில்லை.

‘துப்பாக்கியை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள்,’ ‘விஜய் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்,’ ‘இது வேறு மாதிரி படம்,’ என்ற விஜய் ரசிகர்களின் முக நூல் இடுகைகளே போதும் படத்தைப் பற்றி சொல்ல. இயக்குனரே துப்பாக்கியை மனதில் வைத்துத்தான் இடைவேளையில் ‘அந்த ஐயாம் வெயிட்டிங்’சீனை வைத்திருக்கிறார். (கூடவே பாட்ஷாவின் ‘உள்ளே போ’ சீன் அப்படியே சொருகப்பட்டிருக்கிறது).

விஜயை குறை சொல்ல முடியாது, கொடுத்ததை செய்திருக்கிறார். அற்புதமாய் நடனம் ஆடுகிறார். கொடுத்த பஞ்ச்களை சிறப்பாய் பேசுகிறார், இந்த வயதிலும் உடலை அருமையாய் வைத்திருக்கிறார். (I think he should get back to the makeup man who did ‘Azhagiya Tamizh Magan’)

இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறது. அனிருத் சில இடங்களில் பலம் சேர்க்கிறார்.

சிறுவர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்கும். நிலத்தடி நீர் குறைவது நல்லதல்ல, ஏரிகள், ஊற்றுகள் காக்கப் படவேண்டும், விவசாயம் செழிக்க நிலங்களைக் கையகப் படுத்தி மனை போடுவது நிறுத்தப் படவேண்டும் என்ற மிக நல்ல கருத்தைக் கொண்டிருக்கும் இந்தக் கதையை இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாம்.

வெர்டிக்ட்:
‘கத்தி’ – முனை மழுங்கியது, ஒரு முறை பார்க்கலாம்.

திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *