விசு அவர்களோடு ஓர் அனுபவம்

ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் அப்பா சித்தப்பா இலங்கை பயணித்து விட, அவர்களது சைக்கிளை (பழைய ராலே, புதிய ஹீரோ என்று இரண்டு) எடுத்துக் கொண்டு ராஜவேலு சித்தப்பாவிடமும், கருணாகரன் மாமாவிடமும் குரங்கு பெடல் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது ஜப்பானிய ‘டெட்ரெக்ஸ்’ சட்டைத் துணியோடு வாங்கிக் கொண்டு வந்த ‘நேஷனல்’ டேப் ரெக்கார்டர்தான் மணக்குடிக்கே முதல் டேப் ரெக்கார்டர். ( இன்று மலர்ச்சி வகுப்புகளில் நான் ஒலிக்கவிடும் இளையராஜாவின் கீதாஞ்சலி இலங்கையிலிருந்தே எனக்கு வந்தது)

பாலதண்டாயுதம் சித்தப்பா ‘கௌரவம்’ ‘திருவிளையாடல்’ என சிவாஜி படங்களின் தலைப்பிலும், பூராயர் அண்ணன் முத்தையன் சித்தப்பா ஆகியோர் ‘மணல்கயிறு’ போன்ற விசு படங்களின் தலைப்பிலும் ஒலிச்சித்திரங்கள் வாங்கி வந்து விடுவார்கள். அப்பா வீட்டிலிருக்கும் போது என்எஸ்கிருஷ்ணன் – பியூ சின்னப்பா – கேபி சுந்தராம்பாள் என்று ஒலிக்கும் கேசட்டுகள், அப்பா வெளியே கிளம்பியதும் திரைப்பட கேசட்டுகளாக மாற்றப்படும்.

இரவு பகல் காலை மாலை மதியம் என எந்தேரமும் ஒலிச்சித்திரங்களை ஓட விட்டுக் கேட்கும் எனக்கு பல புதிய உலகங்கள் அறிமுகமாயின அந்த வயதில்.

வளர வளர ரஜினி படங்களும் வரத் தொடங்கின என்றாலும், கூடவே ‘சம்சாரம் அது மின்சாரம்’ ‘பெண்மணி அவள் கண்மணி’ என விசுவின் படங்களும் வந்து குவியவே தொடங்கின. வீட்டிற்குப் பின்னே வயலில் உழைத்து விட்டு வீட்டிற்கு முன்னே இருக்கும் குளத்தில் குளிக்க வருபவர்கள், ‘சிவா… ஒரு படம் போடேன், கேட்போம்!’ என்று கேட்கபதும் நான் மகிழ்வாய் நேயர் விருப்பம் அளித்ததும் பல ஆண்டுகள் நடந்தன.

உத்ரமேரூர் நாரத நாயுடு, நாகர் கோவில் நாதமுனி, அம்மைப்ப முதலியார் என விசுவின் பாத்திரங்களும் வசனங்களும் அத்துபடி அந்த வயதில் (இன்று வரை) எனக்கு.

இன்று ‘ஹியூமர் க்ளப் இண்டர்நேஷனல்’லின் திருவல்லிக்கேணி கிளை சார்பாக மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நடந்த கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டேன். முதல் வரிசையில் ஒருவர் வெடித்து சிரித்தும் கைதட்டியும் ரசித்துக் கொண்டிருந்தார். அவரும் அவரது மனைவியும் சேர்த்து அனுபவித்து ரசித்து சிரித்தது அரங்கின் மெல்லிய மஞ்சள் ஒளியில் கம்மலாக தெரிந்தது.

நிகழ்ச்சி முடிந்து இறங்கியதும் ‘சார்…சூப்பர் சார்’ ‘யோசிக்க வச்சிட்டீங்க!’ ‘அமேசிங்’ ‘டச்சிங்!’ என்று கூறி சூழ்ந்து கொண்ட கும்பலுக்கிடையே, ‘மிஸ்டர் பரமன், என்ன ஃப்ளோ! என்ன ஆழம்! இலக்கியம் பக்தி கரண்ட் அஃபேர் எல்லாம் பிரமாதம்! அனுபவிச்சி சிரிச்சோம். நிறைய யோசிச்சோம்!’ என்று கை கொடுத்தார் ஒருவர்.

மனைவியோடு சிரித்து ஆழ்ந்திருந்த அந்த முன்னிருக்கை மனிதர் அவர் என்று புரியும் போது, என் புருவங்கள் தாமாக உயர்ந்தன…

அவர்.. நடிகர், இயக்குனர் விசு! கையைப் பிடித்துப் பாராட்டிய அவருடன் வந்த இன்னொருவர் காத்தாடி ராம மூர்த்தி!

( திருவண்ணாமலை இரவுப் பயணம் – தூக்கம் இழப்பு – ஹோட்டல் சாப்பாடு ஒவ்வைமையால் ஒரு நாள் முழுக்கப் பட்ட துன்பம், காய்ச்சல், உடல் வலி… என எல்லாம் பறந்து போனது மேடையில் ஏறிய போது! இப்போது சுவடே இல்லை!)

நாரதர் நாயுடுவும், அம்மையப்ப முதலியாரும், நாகர்கோவில் நாதமுனியும் என் கைகளைப் பிடித்துக் கொண்டு நிற்பதை உணர்ந்தேன். கொண்டாடுகிறேன்.

பரமன் பச்சைமுத்து
சென்னை
11.03.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *