என்ன பதில் சொல்லிவிட முடியும்!

ஓடிக்கொண்டேயிருந்தவள் மீளா ஓய்வுக்குப் போய் விட்டாள். மாராத்தான், ட்ரையத்லான், ட்ரெக்கிங், சைக்கிளிங் என்று ஓடித் துடித்த கால்களும் மூச்சும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன.

குரங்கணி காட்டில் தீ நாக்குகளால் தீண்டப்பட்ட அனுவித்தியா கண்ணாடிப் பேழைக்குள் வெறும் உடலாக.

‘பரமன்ன்ன்ன்…. ஏன் பரமன்? நெறைய சாதிக்கனும்ன்னு ஆசைப்பட்ட பொண்ண, சாதனை பண்ண அனுமதிச்சது தப்பா பரமன்? இமயமலையை ஏறனும்னு ஆசைப்பட்டாளே! ஏன் இது நடந்தது பரமன்? ஏன் இப்படி போயிட்டா?’ என்று அடிவயிற்றிருந்து துக்கம் பீறிட என்னைக் கட்டிக் கொண்டு அழுத தாய் கஸ்தூரிக்கு என்ன பதில் சொல்லிவிட முடியும் அந்தத் தருணங்களில்.

பதிலில்லா ஆற்றாமையால் விளைந்த கனத்த மௌனத்தைத் தாண்டி வழிகிறது கண்ணீர்.

தேவதைகள் பூமியில் வசிப்பதில்லை. வானுலகம் போய்விடவே செய்வார்கள். இமயமலை ஏற ஆசைப்பட்டவள் அதன் உச்சியையும் தாண்டி இருக்கும் கயிலாயம் போய் சேர்கிறாள்.

போய் வா தேவதையே!

– பரமன் பச்சைமுத்து
16.03.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *