‘முக்கால் எம்எல்ஏ’

‘முக்கால் எம்எல்ஏ’

சோமாசிப்பாடி திருமலை மாமாவை சுப்புராய உடையார் மாமா இப்படித்தான் விளிப்பார் அக்காலங்களில். ‘பஉச’வும், ‘விவிஎஸ்’ஸும், ‘கலைமணி’யும் கட்சியில் களைகட்டிய அந்தக் காலங்களில் கட்சியில் கலகலவென்று வளைய வந்தார் அவர். எப்போதும் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் பளிச்சென்று இருக்கும் அவர் அப்போதெல்லாம் சோமாசிப்பாடி அரசமரத்தடி அருகிலிருக்கும் சோடாக்கடையில் அதிகம் தென்படுவார்.

திருமலை மாமாவிற்கு எல்லாமே கழகம்தான். பொன்னம்மா அத்தை ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்த போது பார்க்கப் போன என்னிடம், ‘சிவா… மினிஸ்டரு, எம்ப்பி ரெண்டு பேருமே கூப்டாங்க. ‘திருமலை மிஸஸுக்கு செய்யனும்பா’ன்னு ஃபோன் பண்ணி சொல்லிட்டாங்க!’ என்றார்.

எம்ஜியார் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் முழு எம்எல்ஏவாகவே ஆகியிருப்பார் மாமா என்பதென் உறுதியான எண்ணம். கட்சி… கட்சி…கட்சியென்று அடிமட்டத்திலிருந்து வேலை செய்து அடுத்த நிலைக்கு வருவதற்குள் தலைவர் இறந்து விட எல்லாமே மாறிவிட்டது. தலைமை மாறும் போது அடுத்த நிலையிலும் அதைப் பொறுத்தே சிலர் உயர்தலும் சிலர் விடுபட்டுப் போதலும் நடந்து விடுகிறது. அதுவே நடந்தது அவருக்கும்.

ஜெயலலிதா இறந்த போது அடித்துக் கொண்டழுத உண்மையான அடிமட்டத் தொண்டர்களைப் பார்த்த போது அது புரிந்தது. அப்போது மாமாவை நினைத்துக் கொண்டேன்.

மாமா இறந்த போது என்னால் போக முடியவில்லை. சென்ற வாரம் ஒரு பெரும் அரசியல் பிரமுகர் ஒருவர் என்னை சந்திக்க விரும்பியதாகக் கேள்விபட்டு, வகுப்பு முடிந்து இரவு சென்னைக்குப் புறப்படும் முன் உடல் நலம் தேறி வரும் அவரை சென்று பார்த்தேன்.

‘உங்க க்ளாசுக்கு அப்பயே வரணும்னு எனக்கு ஆசை. ஆனா, மூன்றரை மணி் நேரம் ஃபோன் ஆஃப் பண்ணச் சொல்வீங்களே. அரசியல்ல இருக்கறச்சே அது முடியாதே!’ என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார். சில நிமிடங்கள் அவரோடு உரையாடிவிட்டு சென்னைப் புறப்பட காரிலேறும் போது, அவரது பெயருக்குப் பின்னால் இருக்கும் ‘மெம்பர் ஆஃப் பார்லிமெண்ட்’, ஆளுங்கட்சி என்ற வாசகங்கள்… எனக்கு திருமலை மாமாவை மனதுக்குள் கொண்டு வந்தது.

அவர் இன்று இருந்திருந்தால், ஒன்று அந்த அலுவலக அறை முகப்பில் இருந்திருப்பார் அல்லது இதைக் கேள்விப்பட்டு் பெருமகிழ்ச்சி் கொண்டிருப்பார்.

பரமன் பச்சைமுத்து
25.03.2018
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *