‘வாழ்க்கை – ஒரு கொண்டாட்டம்’ – பரமன் பச்சைமுத்து – அண்ணா பல்கலை கழகம் – ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ஆனந்தம் ஃபவுண்டேஷன்ஸ் நிகழ்ச்சி

மன நிறைவான ஓர் உணர்வெனக்கு!

கிராமப்புற ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்காக உழைத்து வரும் ஆனந்தம் அறக்கட்டளையின் சார்பாக நிதி திரட்டுவதற்காக ‘வாழ்க்கை – ஒரு கொண்டாட்டம்!’ என்ற வாழ்வியல் பயிலரங்கை செய்தோம், நேற்று மாலை அண்ணா பல்கலைக்கழகத்தின் அரங்கம் ஒன்றில்.

முன்னூற்றியைம்பது பேர் என்று எப்போதோ செல்வக்குமார் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு அரங்கில் நுழைந்தால் அறுநூற்றியைம்பது பேரால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிரம்பி வழிந்தது அரங்கம். ஆனந்தம் நண்பர்கள் நிறைய உழைத்திருக்கிறார்கள் இந்த நிகழ்சியைக் கொண்டு மக்களிடம் சேர்க்க. சொற்ப அளவில் மலர்ச்சி மாணவர்களும் இருந்தார்கள் என்றாலும் பெரும்பாலோனோர் இரண்டாம் முறை அல்லது முதல் முறை மலர்ச்சி உரை கேட்க வந்தவர்கள்.

தொடங்கிய சிறிது நேரத்தில் அவை நிகழ்ச்சியை உணர்ந்து உள்வாங்கத் தொடங்கியது. தேநீர் இடைவேளையில் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், இன்னோவேட்டிவ் வெங்கடேஷ், பாமக வழக்குரைஞர் பாலு ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு தம்பதியினர் பேச முற்பட்டனர்.

‘சொல்லுங்க!’

‘ஐயா, பிரமாதம், என் வாழ்நாளில் இப்படி ஒரு மாற்றம் தரும் நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை.’

‘நன்றிங்க!’

‘இது என் மனைவி. இவங்க டிப்ரஷன்ல இருந்தாங்க. இங்க வந்தது நல்லதுங்க.’

‘ஆமாம்ங்க! நான் விரக்தில இருந்தேன்.’

எனக்கு தேநீர் இடைவேளை முடித்து அடுத்து நிகழ்ச்சி தொடங்க வேண்டும். நான் மேடைக்கு செல்ல வேண்டும். அதை விட முக்கியமாக அடுத்து என்ன பேசுவதென்று முடிவு எடுக்க வேண்டும் (ஆமாம், ‘இதுவா… அதுவா..’ என்றொரு தவிப்பில் இருந்தேன்!) அந்த நேரத்தில் இவர்கள் டிப்ரஷன் பற்றி விளக்கமாக கேட்டுக் கொண்டிருக்க முடியாது என்று எண்ணி முடித்துக் கொள்ள விரும்பினேன்.

‘டிப்ரஷன் இருக்கா? நீங்க, அதோ அவர்கிட்ட என் ஆஃபீஸ் நம்பர் வாங்கிக்கோங்க. வந்து பாருங்க. என்ன செய்யலாமுன்னு பார்போம்!’ என்று சொல்லி மேடை ஏறப்போனவனிடம் அவர் சொன்னார்…

‘இல்லைங்க. டிப்ரஷன்ல இருந்தேன். இவர் கூட்டியாந்தார். இந்த ரெண்டு மணி நேரத்தில, டிப்ரஷனே போயிருச்சி. பாருங்க எப்படி சிரிச்சிருக்கேன். எப்படி அழுதிருக்கேன். வெடிச்சி சிரிச்சிருக்கேன்!  நான் ரயில்வேஸ்ல வேலை பாக்கறேன்ங்க! என் பேரு பவானிங்க!’

இன்பத்தில் அதிர்ந்து மேடை ஏறினேன். மக்கள் தங்களை மறந்து கிறங்கி வெடித்துச் சிரித்தார்கள், அழுதார்கள், நெகிழ்ந்தார்கள், வளர்ந்தார்கள்.  ‘நிரம்பப் கற்றோம், இதெல்லாம் கற்றோம், இனி இப்படி வாழ்வோம்!’ என்று நிறைய பகிர்ந்தார்கள்.

‘ஆரம்பிக்கும் போது இருந்த அதே எனர்ஜி எப்படிங்க நாலு மணிநேரம் தொடர்ந்து பேசியும் அப்படியே இருக்கு உங்களுக்கு? தொடங்கும்போது இருந்த அதே எனர்ஜி!’     ‘இனி புதிய வாழ்க்கை!’   ‘இனி கோபம் வரும்போது பயம் வரும்போது உங்க முகம் மனசில வரும் சார்!’    ‘இனி வாழ்க்கையை கொண்டாடுவோம்!’   ‘பரமன் சொல்றது ஒன்னு, செய்யறது வேறோன்னா இருக்கே. மகிழ்ச்சிய யாராலும் தர முடியாதுன்னு சொல்லிட்டு, நாலு மணிநேரம் மகிழ்ச்சியக் குடுத்திட்டாரு பரமன்!’  என்று பல வகை பகிர்வுகள். ‘நாலே நாலு விஷயத்தை நான்கு மணி நேரத்திற்கு எப்படி சொல்ல முடியும். ஆனால். பரமன் நம்மை சீட்டின் நுனியிலேயே இருக்க வைத்து நான்கு மணி நேரங்கள் கட்டிப் போட்டு நல்ல விஷயங்களை தந்து விட்டார் என்று சொல்லியிருகிறாராம் சிரிப்பானந்தா என்னும் குரு ஒருவர் (நிகழ்சியில் பங்கேற்றார்).    நான் இந்தியா இலங்கை உட்பட பல இடங்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ட்ரைனிங் எடுத்திருக்கிறேன். நானே பரமன் பச்சைமுத்துவின் ரசிகன் ஆகிவிட்டேன் என்று முகநூலில் பதிவிட்டிருக்கிறாராம் இளங்கோவன் என்னும் பயிற்சியாளர் (அவரது பெருந்தன்மை!)

‘பரமன்… எனக்கு கமிஷனர் சொன்னது இதான் ‘ ரிட்டயர்டு ஆகற வரைக்கும் ஃபோன ஆஃப் பண்ணாத, சைலண்ட்ல போடாத. கூப்டா எடுக்கனும். நம்ப பொழப்பு அப்படி!’ உங்க நிகழ்ச்சியில இருக்கவும் ஆசை. ஃபோனையும் அணைக்க முடியல. அதனால ஃபோன வச்சிட்டு வெளிய நிக்க ஒருத்தர ஏற்பாடு பண்ணிட்டு கடைசி ரோல உட்கார்ந்துட்டேன். அருமையான நிகழ்ச்சி. நிறைய இடத்தில எனக்குள்ள நிறைய மாறுதல்கள் உணர்வுகள் வந்திருச்சிங்க. எங்க போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு உங்கள கொண்டு போவனுங்க!’ என்று பகிர்ந்து கொண்டார் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

ஆனந்தம் நண்பர்களை கட்டியணைத்து அன்பை தெரிவித்து விட்டு காரில் திரும்பி வரும்போது ஒரு நிறைவான உணர்வு. அரங்கு நிறைய அறுநூற்றைம்பது பேர் பயன்பட்டதால் அல்ல, வந்திருந்தோர் இனி வாழ்கையை வேறு மாதிரி அணுகுவார்கள் என்பதால் மட்டுமல்ல…. இந்த நிதியில் நிறைய ஏழைக் குழந்தைகள் மேற்படிப்பு படிப்பார்கள்!

இன்னும் கொண்டாட வேண்டும் போல் இருந்தது எனக்கு. வீட்டிற்கு விடாமல் காரை கடற்கரை சாலை நோக்கி விட்டேன்.

 

பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *