இலங்கை ‘கதிர்காமக் கேள்வி!’

தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளாலும் பின்னப்படும் நம்பிக்கைகளாலுமே தலங்களும் அதன் கடவுளர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

‘கதிர்காமத்துல விபூதி செய்யறது இல்ல. அங்க விபூதி வெளையுது. மலையிலேருந்து வெட்டி எடுக்கறாங்க!’ – இது என் ஐந்தாம் வகுப்புக் கோடை விடுமுறையின் போது இலங்கை போய் வந்த என் அப்பா என்னிடம் சொன்னது.

‘எல்லா ஊரிலும் நேரில் போய் பார்த்து திருப்புகழ் பாடினார். கதிர்காமம் மட்டும் போகவேயில்லை. இந்தியாவில் இங்கேயே கடலருகில் நின்றார். முருகன் காட்சி தந்தார், இங்கிருந்தே அந்தத் தலத்தைக் கண்டு உணர்ந்து திருப்புகழ் பாடினார் அருணகிரிநாதர்!’ – ஒன்பதாம் வகுப்பின் போது என் தந்தை சொன்னது.

‘முருகன் வள்ளிம்மைகிட்ட போயி தெனைப் புறத்துல வெளையாடனது, கல்யாணம் கட்னது எல்லாம் அந்த ஊர்லதான்(சிலோன்)’ – பாட்டி என்னிடம் ஒரு கதையின் நடுவே சொல்லி வைத்தது.

‘எங்கள் வேடுவர் குலத்து வள்ளியை மணந்ததால், முருகன் எங்கள் மாப்பிள்ளை’ – இலங்கையின் பழங்குடி வேடுவர்கள் சொல்வதாக இலங்கையின் நம்பிக்கை.

‘ஏலேல சிங்கன் என்னும் சோழனை போரில் வெல்ல துட்டகைமுனு என்னும் சிங்கள மன்னன் கதிர்காமத்தில் வணங்கிச் சென்று, வெற்றி பெற்று, பின்பு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினான்’ – சிங்கள புராணங்கள் சொல்வது.

‘யானை மீது இருந்த எழுபது வயது எள்ளாலனை (ஏலேல சிங்கன்) எவ்வளவு போர் புரிந்தும் வெற்றி பெற முடியா துட்டகைமுனு கடைசியாக ஒரு ஈட்டியை எறிய, அது பூமியில் போய் மேல் கீழாக குத்தி நிற்க (படையப்பா படத்தில் வருவது போல ஈட்டியின் முனை வான் நோக்கி நிற்க அடி தரையில் குத்தி நின்றிருக்கும் போல!), யானையிலிருந்து தவறி விழுந்த எள்ளாலன் ஈட்டியில் செருகி தரையில் படாமல் அந்தரத்திலேயே இறந்து நிற்க, ‘எவ்வளவு நல்லது செய்திருந்தால் மரணத்தில் கூட மண்ணில் சாயாமல் இருப்பார் இவர்!’ என்று சிங்கள மன்னனே ஓடி வந்து மடியில் தாங்கினான், அந்த ஈட்டியை அங்கேயே வைத்து மரியாதை செய்தான். அந்த இடம் கதிர்காமம். ஈட்டியை வேலாகப் புரிந்து கொண்டனர் மக்கள்’ – சில சிங்கள ஆராய்ச்சிகள் சொல்வதாக புதுச்சேரியிலுள்ள ‘அம்சம் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்’ நிறுவனர் கோவிந்தராஜுலுவின் மின்னஞ்சல் கட்டுரை குறிப்பிடுகிறது.

‘ராமனின் ஜானகியைத் தேடி வந்த மாருதி வெற்றி கொடு என்று கதிர்காம முருகனை வேண்டிச் சென்றார். கதிர்காமக் கந்தன் அருள் செய்தார் ‘ – கதிர்காமத்துத் தல திருப்புகழ்.

‘கதிர்காம ஆலயத்திற்கு அருகில் உள்ள மலையில் முருகனின் கதிர்வேல் உள்ளது. அங்கேதான் விபூதி விளைகிறது’ – தமிழ்நாட்டு நம்பிக்கை.

‘கண்டி கதிர்காமன் வேல் பயம் போக்கும்’ – தெனாலி படத்தில் கமல்.

‘அது கதிர்காமம் அல்ல, ‘கத்ர கம’ அப்படி என்றால் ‘வெகு தூரத்து ஊர்!’ என்கிறது சில சிங்கள நம்பிக்கை .

‘கருவரையில் தேவாசுரப் போர் புரிந்த உக்கிர முருகனின் சந்தனக்கட்டை விக்கிரகம் உள்ளது. அதன் உக்கிரம் பார்ப்பவர்களை ஏதாவது செய்து விடும் என்பதனால் அதை யாரும் பார்க்காமலிருக்க அது கருவறையின் உள்ளே ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருக்கிறது. அதனுள்ளே ஒருவரும் போக முடியாது. சடங்கு செய்யும் கோவிலதிகாரி கூட திரைக்கு அடுத்துள்ள முதல் அறை வரை மட்டுமே போகலாம். நாம், வெளியே வெறும் திரையை மட்டுமே பார்க்கலாம் !’ – மலையகத் தமிழர்களின் நம்பிக்கை.

‘கதிர்காமம் கோயிலுக்கு வெளியே ஓடும் ஆறு மாணிக்க கங்கை. மீன்கள் அதிகம் இருக்கும் அதில் குளித்தே கோவிலுக்குப் போவது வழக்கம்’ – நேற்று என் தந்தை என்னிடம் செல்லிடப் பேசியில் சொன்னது.

கதிர்காமக் கடவுள் வழிபாடு திருவிழா உற்சவங்கள் அப்போதிலிருந்தே (இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக) இருப்பதாக சிங்களர்களின் முக்கிய நூலான மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள ஆராய்ச்சியாளர்களே சொல்வதாக சிங்கள டூரிஸ்ட் கைடாலும், இணைய தளங்களாலும் சொல்லப்படுகின்றன.

இப்படிப் பல்வேறு கதைகளாலும் நம்பிக்கைகளாலும் பின்னப்பட்டிருக்கும் கதிர்காமம் முருகன் கோயில் கோபுரங்கள் என எதுவுமில்லாமல் மிக மிக எளிமையாக, ஆளும் அதிகாரத்தில் உள்ள புத்த மதத்தினரின் ஆளுகையில் இருக்கிறது. இடப்புறம் பிள்ளையார், பின்புறம் தலமரமான அரசமரம் என்றிருக்கும் முருகனுக்கு இணையாக பக்கத்தில் புத்தர் கோயிலும், பின்புறம் மிக மிகப் பிரம்மாண்டமான புத்த ஸ்தூபியும் வைத்து விட்டார்கள்.

மாணிக்க விநாயகரை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் ஒரு சிங்களவர் வந்து எங்களிடம் பழத்தட்டை பணிவோடு நீட்டினார். புரியாமல் நின்ற எங்களுக்கு ‘இங்கே தட்டு நிறைய பழங்களை வைத்தே முருகனை வழிபடுவார்கள். அந்தத் தட்டை வாங்கி திரைக்குப் பின்னே கருவறையை நோக்கிக் காட்டிவிட்டு திரும்பத் தந்துவிடுவார் புத்தமத கோயில் ஊழியர். வணங்கிவிட்டு வந்ததும் அந்தப் பழங்களை யாருக்காவது தந்தால் பெறுபவருக்கும் தருபவர் குடும்பத்திற்கும் நல்லது நடக்கும். அதான் தருகிறார். எடுத்துக் கொள்ளுங்கள்!’ என்று கைடு் ஆங்கிலத்தில் சொன்னதுமே புரிந்தது. திராட்சைப் பழமெடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டேன் நான். தட்டின் நடுவில் இருக்கும் விபூதியைப் பார்த்த என் மனைவியிடம் வெற்றிலையோடு மொத்த விபூதியையும் தந்து விட்டுப் போனாராம் அந்த சிங்களர். நான் அறிந்திருக்கவில்லை அதை.

‘ஏங்க, இந்தாங்க விபூதி!’ என்று கூப்பிட்ட என் மனைவியின் கையிலிருந்த விபூதியைப் பார்த்ததும், ‘மலையில் விளைந்த விபூதி!’ என்று உற்சாகமாய்ப் பாய்ந்து அள்ளிக் குழைத்து நெற்றி நிறைய பூசிக்கொண்டேன்.

‘பிரியா, இதே மாதிரி இன்னும் கொஞ்சம் வாங்கிக்கனும். மணக்குடில போய் அப்பாட்ட குடுத்தா சந்தோஷப்படுவாரு! கொண்டாடுவாரு! எங்க வாங்கன நீ இத?’

‘வாங்கல்லாம் முடியாது. பழத்தட்டு வச்சி படைச்சவங்களுக்குத் தந்தது அது. அதக் குடுத்திட்டுப் போனாரு அவரு’

நாங்கள் நகர்ந்தோம் முருகனை நோக்கி. பதிகம் பாடப்பெற்ற தலமென்றாலே உணர்வு கூடி நிற்பவனான நான், உள்ளே நுழையும்போதே ஒடுங்கியே நுழைந்தேன். வரிசையில் வந்து கொண்டிருந்தவன் மூலவர் இருந்த திசை நோக்கி கண் மூடி நின்றேன். என்ன ஒரு தலம்! நெடுநேரம் கழித்து கண் விழிக்கையில் நிறைய பேர் கடந்து போயிருந்தனர். ‘திரையிடம் போய் என்ன செய்யப் போகிறோம், உள்ளே இணைப்புதானே சங்கதி! இது போதுமே, இப்படியே வெளியேறிவிடலாம்!’ என்று அங்கிருந்து வணங்கி் வெளியேற எத்தனித்து நகர்கையில். திரையின் அருகில் நின்று சடங்குகள் செய்யும் புத்தமத அதிகாரி அழைத்தார். எனக்கு முன்னே இருவர் இருக்க, என்னை ஏன் அழைத்தார் என்று புரியாமல் முன்புறம் நகர்ந்து போய் நின்றேன். மலையில் விளைந்த அந்த விபூதியை அள்ளி என் உச்சந்தலையில் போட்டார். நெற்றியில் திலகம் போல விபூதியை வைத்தார். இரண்டு கையளவை விட பெரிதான ஒரு வெற்றிலையில் நிறைய விபூதியை அள்ளி வைத்துத் தந்தார். திகைத்துப் போனேன், திரை இருந்த திசையை நோக்கி வணங்கினேன், திரும்பிப் பார்த்தேன். நடப்பது மொத்தத்தையும் பார்த்துக் கொண்டு நின்ற என் மனைவியும் மகள்களும் கூட திகைத்து மகிழ்வில் இருந்தனர். நகர்ந்து அவர்களிடம் சேர்ந்து அவர்களோடு வெளியே வந்தேன்.

‘அப்பா, நீ கண்ண மூடி அப்படியே நின்னுட்ட. உன் முன்னாடி இருந்தவங்க தோள்ல இருந்த குழந்த கையால உன் முகத்தப் புடிக்க புடிக்க வந்தது. சிரிச்சி சிரிச்சி கை நீட்டி தொட வந்தது. நீ டீப்பா ரொம்ப நேரம் கரைஞ்சி நின்னுட்ட. உனக்குத் அது தெரியாது. நாங்க பாத்துட்டே இருந்தோம்!’, வெளியில் வந்து அவர்கள் விளக்கிய போது, என் மனதில் வேறொன்று ஓடியது. ஒன்று கேள்வியாய் தொக்கி் நின்றது.

‘அந்த புத்தமத கோயில் அதிகாரி என்னை ஏன் கூப்பிட்டார் என்று கேட்கமாட்டேன் இம்முறை (கண்டி தலதாவோடு முடிந்தது அது). கதிர்காம மலையில் விளைந்த இந்த விபூதி என்னிடம் தரப்பட்டது, எனக்காகவா இல்லை மணக்குடியிலிருக்கும் என் தந்தைக்காகவா?

– பரமன் பச்சைமுத்து
கதிர்காமம், இலங்கை
17.05.2018

#ParamanInSriLanka

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *