போய் வாருங்கள் பாலகுமாரன், உங்கள் ராஜேந்திர சோழன் சென்ற உலகத்திற்கு…

20180520_232944-1.jpg

வாழ்க்கை மட்டும் ‘இதுதான் அறிய தருணம், இனி இது திரும்பக் கிடைக்காது!’என்று சப்-டைட்டில் போட்டு நிகழ்வுகளை அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அப்படி மட்டும் இருந்திருந்தால், அன்று என் அடுக்ககக் குடியிருப்பின் முகப்பில் உங்களைப் பார்த்த தருணங்களை இன்னும் பயன்படுத்தியிருப்பேன், ‘பரமனை நமது விழாவிற்கு அழைக்கலாம், கூப்பிடுங்கள்!’என்று ரகுராமிடம் நீங்கள் தகவல் சொன்னபோது ஓடி வந்திருப்பேன். இன்னும் நிறைய வாய்ப்பிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு ‘ஒரு நாள் நிச்சயம் உட்கார்ந்து விலாவாரியாகப் பேசுவோம்,‘என் கண்மணித்தாமரை’ பற்றி, ‘முதிர் கன்னி’ பற்றி, ‘தனிமைத் தவம்’ பற்றி,‘காதல் அரங்கம்’ என்னை திருவரங்கம் நோக்கி நகர்த்தியது பற்றி, ‘கருணை மழை’ பற்றி, ராஜேந்திர சோழனின் அருண்மொழி பற்றி, உடையாரின் பஞ்சவன் மாதேவி பற்றி பகிர்ந்து கொள்வேன் என்று பெரும் மடையனாக வாய்ப்புகளை தவற விட்டுவிட்டேன்.

செல்லிடப் பேசி இணைப்பு, இணையத் தொடர்பு, செய்தித் தாள்கள் – செய்தி சானல்கள் பார்க்கும் வாய்ப்பு குன்றிய வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி என்று இலங்கையில் நான் சுற்றிக்கொண்டிருந்த போது நீங்கள் உடல் துறந்து போயிருக்கிறீர்கள். நான்கு நாட்கள் கழித்தே அறிந்து பதைத்தேன்.

கல்லூரி முடித்து சென்னையில் வேலைதேடிய நாட்களிலும், தந்தை பெரியார் பேருந்தில் சிதம்பரம் நோக்கிப் பயணிக்கும் வேளைகளிலும் உங்கள்‘பாக்கெட் நாவல்’களே என் துணையாயிருந்தன. குமுதத்தில் வந்த உங்களது தொடர் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!’வை வெறுமனே படம் பார்த்து ‘எப்பயும் எதாவது ஒரு குதிரையைப் பத்தியே எழுதுவாரு இவரு!’ என்று சொல்லிக் கடந்து போயிருக்கிறேன். ‘மெர்குரிப் பூக்கள்’உங்களை கையிலெடுக்க வைத்தது. உங்கள் ‘என் கண்மணித் தாமரை’ என்னை என்னை நோக்கியே நகர்த்தியது. நான் திருவரங்கம் நோக்கி போகத் தொடங்கியதிற்கு சுஜாதாவோடு, நண்பன் ராம்ஜீயோடு, நீங்களும் ஒரு காரணம்.

‘பாலா’வாக இருந்து, ‘பால குமாரன்’ ஆக மாறி, பின்பு ‘எழுத்துச் சித்தர்’ ஆக உருவெடுத்த உங்களது எல்லா நிலைகளிலும் உங்களிடமிருந்து பலவற்றைக் கற்றிருக்கிறேன் நான்.‘பாட்ஷா’ படத்திற்கு அப்புறம் உருவான‘அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்’ சர்ச்சையை நீங்கள் கையாண்ட விதம், ‘முன் கதை சுருக்கம்’ படித்து தமிழ் எழுத்தாளர்கள் தூற்றிய போது அதை நீங்கள் எதிர்கொண்டு கடந்த விதம், யாகவா முனிவர் உங்களை கட்டாயப்படுத்திய போது மறுத்து நீங்கள் விலகிய விதம் என உங்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன்.

என் பக்கத்து வீடு வரை சத்சங்கிற்கு வரும் உங்களை, இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன, நிறைய வாய்புகள் இருக்கின்றன என்று சொல்லியே நெருங்காமல் விட்டுவிட்டேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மதில் மேல் பூனையாக இருந்த அந்த வயதில் என்னுள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உதவியிருக்கிறீர்கள். நன்றி ஐயா! உங்களுக்காக எனது பிரார்த்தனைகள்.

முன்கதைச் சுருக்கத்தில், உங்கள் நண்பர் சுப்ரமணிய ராஜூவைப் பற்றி வருத்தத்தோடு நீங்கள் குறிப்பிடும் அதே வரிகளையே இங்கே நான் சொல்கிறேன்,வருத்தத்துடன். ‘இன்னும் கொஞ்சம் உடம்பை பார்த்திருக்கலாம் நீங்கள்!’

போய் வாருங்கள் ஐயா! உங்களது ராஜராஜன், ராஜேந்திர சோழன் சென்ற உலகத்திற்கு!

நன்றியுடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
20.05.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *