இலங்கை – கட்டுரை நிறைவுப் பகுதி

‘நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி, தாரிடை உறங்கும் வண்டு…’ என்று கோசல நாட்டைப் பற்றிக் கம்ப நாட்டாழ்வான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது இலங்கையின் குறுக்கே பயணிக்கும் போது, அப்படி ஒரு செழிப்பு. ‘கேரளாவைப் போல் இருக்கிறதே!’ என்று தொடக்கத்தில் தோன்றினாலும், அதை விட செழிப்பான சூழல் என்று போகப்போக உணர முடிகிறது.

அறுவடை முடிந்து ஆறப் போடப்பட்டிருக்கும் வயல், நெல் பயிரிடப்பட்டிருக்கும் வயல், நாற்றங்காலுக்குத் தயாராகும் வயல் என எல்லா வயல்களிலும் ஈரம் இருக்கிறது. அவ்வளவு நீர் வளம். நிலா வளம் பற்றி சொல்லவே வேண்டாம். செழிப்பென்றால் செழிப்பு அப்படியொரு செழிப்பு. இலங்கையின் மத்திய – கிழக்கு – வடக்கு – தெற்கு என்று எங்கு பயணித்தாலும் எல்லா இடங்களிலும் அனாமத்தாக செழித்து வளர்ந்து கிடக்கும் ஒரு வகைப் புல்லைப் பார்த்தாலே போதும், மண்ணின் வளம் புரிந்துவிடும். இந்த வளம்தான் இந்த தேசத்தின் பெயரையே மாற்றி எழுதியது வரலாற்றில்.

மண்ணின் வளத்தோடு அங்கு நிலவும் தட்ப வெப்பமும் சேர்ந்து கொள்ள அந்த தீவு முழுக்க விளைந்து கிடந்த இலவங்கம் என்னும் ‘சின்னமன்’ மிக உயரிய தரம் கொண்டதாக இருந்ததாம் (இப்போதும்!). அதனால் கவரப்பட்ட போர்த்துகீசியர்களும், டச்சுக்காரர்களும் வந்து வளைத்து எடுத்துக் கொண்டார்கள். அவர்களால் ‘சின்னமன் ஐலேண்ட்… சின்னமன் ஐலேண்ட்..’ என்று அழைக்கப்பட்டு பிறகு அதுவே சுருங்கி மருவி ‘சிலோன்’ ஆக மாறியது. பின்னே பிரித்தானியர்கள் வந்து போதும் அது ‘சிலோன்’ என்றே அழைக்கப்பட்டு அப்படியே வரலாற்றில் பதிந்தது.

சுதந்திரம் வந்த பிறகு அவர்கள் ‘ஸ்ரீலங்கா’ என்ற தங்களது பழைய பெயருக்கு மாற்றிகொண்டார்கள். தமிழில் எப்போதும்போல அது இலங்கையாகவே இருக்கிறது. அரசு கொண்டிருக்கும் மும்மொழிக்கொள்கையால் எல்லா அதிகாரப்பூர்வமான இடங்களிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் ‘ஸ்ரீலங்கா’ என்றும், தமிழில் ‘இலங்கை’ என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்றும் அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள், பழைய பழக்கத்தினால் சிலோன் என்றே இலங்கையைக் குறிப்பிடுவதைக் காணலாம், சென்னையை ‘மெட்ராஸ்’ என்று சொல்வதைப் போல.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கப்பல் வழிப் போக்குவரத்து இருந்த காலத்தில் தலை மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்று போய் இறங்க வேண்டியிருந்தது. இப்போது விமானப் பயணங்கள் வந்து விட்டதால் நேரடியாக கொழும்புவில் இறங்கி அங்கிருந்து மற்ற இடங்களுக்கு சென்று விட முடிகிறது.

‘கொள அம்பை தொட்ட’ என்ற சிங்கள விளிப்பிற்கு ‘மாந்தோட்டம்’ என்று அர்ந்தம். ‘கொள அம்பை தொட்ட’ மருவி ‘கொழும்பு’ என்றானது என்றும் ‘கலினி’ நதியில் இருக்கும் ஊர் என்பதால் அதுவே ‘கலம்போ’வாகி கொலம்போ ஆனது என்றும் பல்வேறு கதைகள் உள்ளன. ‘மாதோட்ட இறைவனே!’ என்று சுந்தரர் தேவாரம் பாடியதை நினைவுபடுத்தினான் தம்பி ஒருவன் எனக்கு. தேவார காலத்தில் இது மாந்தோட்டம் என்றே வருவதால், இதுவே காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்தக் கொழும்புவே தலை நகரம்.

புத்தரின் பல் இருக்கும் கோவிலான கண்டியிலிருக்கும் ‘தலதா’, ராவணன் தவம் இருந்ததாகச் சொல்லப்படும், சீதையை சிறைவைத்ததாக சொல்லப்படும் அசோகா வனம் எல்லாம் இருக்கும் நுவரே யிலிய காட்டுப் பகுதி, ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்யப் என்ற ஒரு மன்னன் கட்டிய அரண்மனைக் கோட்டையைக் கொண்ட சிகிரிய மலைப் பகுதி, ‘பின்னவல’ யானைகள் முகாம் என குடும்பத்திலுள்ளோர் கண்டு மகிழ இடங்கள் உண்டு.

‘கண்டி கதிர்காமம்’ என்றே தெனாலி படத்துக் கமல் உட்பட காலம்காலமாக சொல்லிப் பழகிவிட்டனர் இங்கே. உண்மையில் கண்டியும் கதிர்காமமும் வேறு வேறு. இருநூறு கிலோமீட்டர் இடைவெளி. கதிர்காமத்திலிருந்து கொழும்புவிற்கு முன்னூறு கிலோமீட்டர் (ஐந்து மணி நேரம் பயணிக்க வேண்டும்)

மதிய உணவு, இரவு உணவு என கூடுமானவரை இலங்கையின் உணவையே எடுத்துக்கொள்வது சாலச்சிறந்தது, பர்சையும் பதம் பாக்காது. நாம ஊர் அரிசிச் சோறு வேண்டும் என்று நீங்கள் போகும் உணவகங்களில் ‘ஃப்ரைடு ரைஸ்’’பிரியாணி’ என்ற பெயரில் கேவலமான எதையோ அதிக விலையில் விற்கிறார்கள். ஸ்ரீ லங்கன் லஞ்ச் வெள்ளை மற்றும் சிவப்பு அரிசிச் சோறோடு, மூன்று வித காய்கறிகள் அல்லது அல்லது இரண்டு வித இறைச்சி பதார்த்தங்களோடு வருகிறது. இருநூறு ரூபாயிலிருந்து அதிக பட்சம் அறுநூறு ரூபாய்க்கு கிடைக்கிறது. நம்பிக் குடிக்கலாம் தண்ணீரை. சிவப்பரிசி இடியாப்பம், பிட்டு, சம்பல், கட்ட சம்பல் என்று அவர்களது இரவு அல்லது காலையுணவும் சுவையாகவே உள்ளது.

இந்தியாவிலிருந்து கதிர்காமத்தின் முருகன் கோவில் உற்சவத்திற்கு பக்தர்கள் போனதும், தில்லை நடராசர் ஆணித் திருமஞ்சன தரிசனத்திற்கு அங்கிருந்து மக்கள் வந்ததும் வழக்கத்தில் இருந்ததாக வரலாறு சொல்கிறது. அதையும் தாண்டியும் பல சங்கதிகளில் தொடர்பைப் பார்க்க முடிகிறது. ‘மகாவெளி கங்கா’ ‘கெலினி கங்கா’ ‘மாணிக்க கங்கை’ என்று இலங்கையின் முக்கிய நதிகள் எல்லாம் ‘கங்கா’ என்றே முடிகின்றன. கொழும்புவில் இருக்கும் சயனித்த நிலையிலிருக்கும் புத்தரின் பெயர் கூடா ‘கங்கா ராம’. சிங்களவர்கள் தங்களது வாகனங்களை கதிர்காம கந்தன் (ஸ்கந்தன் என்று சொல்கிறார்கள்) பாதுகாப்பதாக நம்பி வணங்குகிறார்கள் (கிட்டத்தட்ட நம்மூரின் சென்ட்ரல் ஸ்டேஷன் அருகிலிருக்கும் ‘பாடிகாட் முனீஸ்வரர்’ போல). பொதுவாக எல்லாப் புத்தக் கோவில்களிலும் சங்கு சக்கரதாரியாக விஷ்ணுவின் சிலையை வைத்து சிங்களவர்கள் வழிபடுகிறார்கள். புத்த மதத்தைக் காப்பவர் விஷ்ணு என்பது அவர்களது பெரும் நம்பிக்கை. (ராஜபக்ஷே அவ்வபோது திருப்பதி கோவிலுக்கு வருவதை நினைவில் கொள்க!)

நீங்கள் தங்கியிருக்கும் ஓட்டலிலிருந்து உங்கள் பெட்டிகளை தூக்கி வந்து காரில் ஏற்றிவிடும் ஹோட்டல் பாய்க்கு நூறு ரூபாய் தரவேண்டும். நூறு ரூபாய்க்கு கீழே கொடுத்தால் அதற்கு மதிப்பில்லை என்கிறார்கள். ஒரு தேநீரின் விலை (‘ஹத்தர தே’ என்றால் நான்கு டீ என்று பொருள். ‘தேத்தண்ணீர்’ தமிழில், ‘தே’ சிங்களத்தில்). ஒரு தேங்காயின் விலை அறுபது ரூபாய், ஒரு கிலோ அரிசியின் விலை நூறு ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் நூற்றி முப்பத்தியைந்து ரூபாய்க்கும், டீசல் நூற்றி இருபது ரூபாய்க்கும் கிடைக்கிறது.

சராசரியாக, ஒரு நல்ல ஸ்ரீலங்கன் லஞ்சின் விலை அதிக பட்சம் அறுநூறு ரூபாய்க்கு கிடைக்கிறது. பயண / தாங்கும் விடுதி செலவுகள் (காலை உணவு ஹோட்டலில் வந்துவிடும்) போக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாய் தேவைப்படும். ஆறு நாட்கள் நீங்கள் இருந்தால் பதினெட்டாயிரம் ரூபாய் (இந்தியப் பண மதிப்பில் ஒன்பதாயிரம் ரூபாய்) தேவைப்படும்.

மிக அருகில் இருக்கும் ஒரு நல்ல தேசம், குடும்பத்தோடு ஒரு முறை பொய் வரலாம் நீங்கள். ‘மகிழவே பிறந்தோம்!’ என்ற ‘மலர்ச்சி’ நிகழ்சியையும் வைத்துகொண்டு விடுமுறையையும் கொண்டாட போன எனக்கு இருந்த நான்கு நாளில் மத்திய – தெற்கு – வடக்கு – கிழக்கு என முடிந்தவரை பயணித்து பார்த்து விட ஆசை.

ராஜராஜன் என்னும் அருண்மொழியும், வந்தியதேவனும் திரிந்த அந்த வடக்குப் பகுதியை அனுராதபுரத்தை காண முடியவில்லை என்னால். இறையருள் துணையோடு, அடுந்த முறை காண்பேன் என்று எண்ணுகிறேன்.

#ParamanInSriLanka

: பரமன் பச்சைமுத்து
20.05.2018
சென்னை

Facebook.com/ParamanPsge

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *