‘நடிகையர் திலகம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

nadigaiyar-thilagam_152541507840

ஆந்திர விஜயவாடாவின் அருகிலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து புறப்பட்ட தந்தையை இழந்த ஒரு சிறுமி, தமிழ் – தெலுங்கு சினிமாவின் ‘நடிகையர் திலகம்’ ஆக உயர்ந்து,  இறுதியில் தன் வாழ்வை எப்படி முடித்துக் கொள்கிறாள் என்பதை ஒரு படமாகத் தந்து, நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். ஒரு திரைப்படம் என்றால் அதில் ஒருவர் நல்லது செய்யும் நாயக / நாயகியாக இருக்கவேண்டும், இன்னொருவர் கெட்டது செய்யும் பாத்திரம் கொண்டிருக்க வேண்டும் என்று முறைமைகளைத் தாண்டி முக்கிய பாத்திரங்களை நல்லதும் கெட்டதும் கலந்த பாத்திரங்களாகவே தந்தது வாழ்க்கைக்கு நெருக்கமாக தெரிகிறது. ஒரு ‘பயோபிக்’ என்றால் இப்படி இருக்கலாம் என்று சொல்லும்படி தந்தது இந்தப் படத்தின் வெற்றி.

படம் தொடங்கிய கொஞ்ச நேரம் கீர்த்தி சுரேஷ் தெரிகிறார், அப்புறம் கீர்த்தி சுரேஷ் தெரியவில்லை, சாவித்திரியே தெரிகிறார். அசாத்திய உழைப்பு. அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

ஜெமினி கணேசனாக வரும் துல்கர் சல்மானும் மிகச் சிறந்த தேர்வு. இவரது வசங்கள் மட்டும் மணி ரத்ன வசனங்களாக நறுக்குத் தெரிக்கின்றன என்றாலும் பொருந்திப் போகின்றன.

Dulquer Salmaan, Keerthi Suresh in Nadigaiyar Thilagam Movie Images HD

‘நான் செய்வேன்! என்னால் முடியும்!’ என்ற பிடிவாத குணம் எப்படி ஒரு கிராமத்து சிறுமியை உருவாக்கி உச்சிக்கு கொண்டு செல்கிறது, அதே குணம் எப்படி ஒரு நிலையில் அவள் உணரும் முன்னே அவளை சரியவைத்து நிலை குலையச் செய்கிறது என்பது படம் சொல்லும் பெரிய படிப்பினை.

தந்தையின் அன்பிற்காக ஏங்கிய அந்தப் பெண்ணுக்கு இறுதி வரையில் தனக்கான ஆணின் அன்பு கிடைக்காமலே போவது ஒரு பெரும் வலியை உண்டாக்கவே செய்கிறது.

எவ்வளவு உயரத்திற்கு வந்து எப்படி வாழ்ந்தவர்கள் தனக்கான உறவுகளை மனிதர்களை இழந்து போகும்போது அவர்களது இறுதிக்காலம் என்னவாகிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது படம்.

சென்னைக்கு வந்து தெலுங்கு சினிமாவில் தொடங்கினாலும், சாவித்திரியின் வாழ்வு ஜெமினி கணேசன், தமிழ்ப் படங்கள் என்று தமிழ் ரசிகர்களாலேயே அதிகம் நிறைந்திருந்தது. அது படத்தில் தெரியவில்லை. சிவாஜி கணேசனை வசனத்தில் கடந்து போனது, இறுதி காட்சியில் காட்டப்படும் மீசை முறுக்கிய குளக்கரை சிலையில் குளோசப் காட்சியில் தமிழ் எழுத்துக்கள் ஆனால் அடுத்த தூரப் பார்வையில் தெலுங்கு எழுத்துகள் போன்ற சங்கதிகள் படத்தின் பலவீனம். முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாவிற்காக திரைக்கதை அமைத்து, அதை அப்படியே தமிழிலும் மொழி மாற்றி எடுத்தார்கள் போல. (‘மலந்து மலராத பாதி மலர் போல…’ என்ற பாசமலர் பாடு வருகையில் தியேட்டர் தன்னை மறந்து கைதட்டி ஆரவாரிக்கிறது)

‘சாம்பார்’ என்றே விளிக்கப்பட்டுப் பார்க்கப்படும் ஜெமினி கணேசன் சாவித்திரியின் தொடக்க கால உருவாக்கத்தில் இவ்வளவு பங்கு வகித்திருக்கிறார் என்பதை அறிகையில் வருவது ஆச்சரியம்.

‘எனது தந்தையை தவறாக காட்டிவிட்டார்கள். சாவித்திரியை வீட்டிற்கு கொண்டு வந்து காரியங்கள் செய்தது என் அம்மா. ஜெமினி கணேசனை சில ஆண்டுகளுக்கு என் அன்னையிடம் விடவே இல்லை சாவித்திரி. அதெல்லாம் படத்தில் இல்லை!’ என்று படம் பற்றி குற்றம் சாற்றியிருக்கிறார் ஜெமினியின் மகளான டாக்டர் கமலா செல்வராஜ் என்பதையெல்லாம் கடந்தும் இது மிகச் சிறந்த படமே.

பெரியவர்கள் நிச்சயம் விரும்புவார்கள், இளம் வயதினரும் நிச்சயம் பார்க்கட்டும்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘நடிகையர் திலகம்’ – நல்ல ‘கிளாசிக்’ படம், நிச்சயம் பாருங்கள்.

திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

www.ParamanIn.com

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *