லேனா… ஆ…ஆ!

20180613_175723.jpg

நாம் பார்த்து பார்த்து பெரும் உவமையாகக் கொண்டு வளர்ந்த ஆளுமைகளை, வாழ்க்கை திடீரென்று நம் முன்னே நிறுத்தினால் மகிழ்வில் திளைக்கத்தானே செய்வோம்! கூடவே எதிர்பாரத வகையில் அவர்களுக்கு நம்மைத் தெரிந்திருக்கிறதென்று வேறு அறிந்தால்… அதிர்ந்து போகத்தானே செய்வோம் இன்பத்தில்!

கவிஞர் வைரமுத்து ஆய்வுக் கட்டுரையாற்றும் ஜெயகாந்தன் பற்றிய நிகழ்ச்சிக்கு அரங்கம் நோக்கி் நடக்கையில், அரங்கத்தின் வாயிலுக்குள் நுழைந்த போதே, யாரைக் கடந்து வந்தோம் என்பது விளங்கியது. ‘அட… அது லேனா தமிழ்வாணன் ஆச்சே!’ என்று உதித்தது. இரண்டாம் வகுப்புக் காலத்திலிருந்து வாராவாரம் சித்தப்பா வாங்கி வர நானும் அக்காவும் படித்த அந்நாளைய ‘குமுதம் – கல்கண்டு’ம் அவர் பெயரும் படமும் நினைவுகளில் வர, கடந்த மாதம் இலங்கை கொழும்பில் மலர்ச்சி நிகழ்ச்சியில் சந்தித்த அவரது சகோதரரும் நினைவில் வர, ஒரு பள்ளிப் பருவத்துச் சிறுவனைப் போல ஓடினேன், அரங்கின் வெளியே இடப்புறம் நாரதகான சபா உட்லண்ட்ஸில் சாப்பிட உட்கார்ந்திருக்கும் அவரை நோக்கி.

அதே கண்ணாடி, அதே வகை வித்தியாச வண்ண வடிமைப்புக் கொண்ட சட்டை.

‘வணக்கம் சார்’

எழுந்து விட்டார்.

‘சின்ன வயசிலேருந்து குமுதமும், கல்கண்டும் பார்த்தே வளர்ந்தவன். உங்களைப் பக்கத்தில பார்த்ததும் வணக்கம் சொல்லனுன்னு தோனுச்சி. அதான்’

படமெடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று உணர்ந்து ஒத்துழைக்கிறார். ‘எத்தனை நூல்கள், எவ்வளவு தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதியவர். ஒரு காலத்தில் நேர மேலாண்மை பற்றி எல்லோரும் குறிப்பிடும் ஆளுமை, பெரிய சுய முன்னேற்றப் பேச்சாளர்…’ என்பதையெல்லாம் நினைத்துக் கொண்டு பக்கத்தில் நின்று படமெடுத்துக் கொள்கிறேன்.

கடந்த மாதம் கொழும்பில் அவரது சகோதரரைச் சந்திக்க நேர்ந்ததைச் சொல்லுகிறேன். ஆர்வமாய் கேட்கிறார். அவருக்கு தோசை வருகிறது. சாப்பிட அமரப் போகிறவர், ‘நாம காண்டாக்ட்ல இருப்போம்’ என்று சொல்ல, விசிட்டிங் கார்டை பரிமாறிக் கொள்கிறோம்.

‘பரமன் பச்சைமுத்து’ என்று பெயரைப் படித்ததும் ‘ஓ… பரமன் பச்சைமுத்து நீங்கதானா?’ என்று எழுகிறார். பெரிய மனிதர்கள் நம்மை மகிழ்விக்க தெரிந்தவர்களாகக் காட்டிக் கொள்வார்கள் போல என்று நம்பி, சிரிக்கிறேன்.

‘ஷெனாய் நகர்லேருந்து வர்ற உங்க வளர்ச்சி மெகசின் படிச்சேனே. ஒரு நிகழ்வை நீங்க உள்வாங்கி அத ப்ரசண்ட் பண்ற விதத்தைப் பார்த்து ரொம்ப ரசித்தேன்’

என் கீழ் தாடை தானே விழுகிறது, வாய் பிளந்து நிற்கிறது என்பதை உணர்ந்து மூடிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

‘ஐம்பது ரூபாய்க்கு, முழு மெகசினையும் ஆர்ட் பேப்பர்ல நல்ல ஹை க்வாலிட்டியா பிரிண்ட் பண்ணி, நல்லா மனசுல ஆழமா எறங்கற மாதிரி் எழுதி… நல்ல பத்திரிக்கை’

எனக்கு தலையில் வானம் இடிப்பது போல ஓர் உணர்வு வர, முயன்று நிலை கொள்கிறேன்.

‘நானே… என் லெட்டர் ஹெட்ல உங்களுக்கு இதெல்லாம் ஒரு வாசகர் கடிதமா எழுதனும்னு இருந்தேன். உங்களையேப் பார்த்துட்டேன். இருந்தாலும் எழுதி அனுப்பறேன்!’

அதற்குள் இயக்குனர் எஸ்பி முத்துராமன் அங்கே லேனாவை நோக்கி வர, நான் விடை பெற்றுக் கொண்டேன்.

அரங்கினுள்ளே கவிஞர் வைரமுத்து வரும் வரை, முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரையே இரண்டாம் வரிசையிலிருந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன் நான்.

நடந்த எல்லாவற்றையும் உடனிருந்து கண்டு மகிழ்ந்து பக்கத்தில் அமர்ந்திருந்த குத்தாலிங்கத்திடம் பகிர்ந்து கொண்டேன்…
‘அப்பன்னா, நம்ம எழுத்து ஓரளவுக்கு பரவாயில்லை போல!’

– பரமன் பச்சைமுத்து
சென்னை
13.06.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *