இலங்கை மங்கலக் குத்து விளக்கு தெரியுமா!?

முதல் முறை இலங்கை தமிழர்கள் பயன்படுத்தும் மங்கலக் குத்து விளக்கைக் கவனித்தேன்.

கொழும்புவின் பம்பலப்பிட்டி பகுதியின் சரஸ்வதி ஹால் மக்களால் நிரம்பியிருந்தது. நம் இலங்கை நண்பர்களின் ஏற்பாட்டில் நடக்க இருந்த ‘உறவுகளில் உன்னதம்’ மலர்ச்சி உரை தொடங்க இருந்த நேரத்தில், அறிவிப்பாளர் ‘ஐங்கரனைத் தொழுது மங்கல குத்து விளக்கை ஏற்றும் நிகழ்ச்சி’ என்று சொல்லி முக்கிய பிரமுகர்கள் சிலரை அழைத்தார். முதலில் வந்த முக்கிய பிரமுகர் மெழுகுவத்தியை கையில் வாங்கி விளக்கின் ஒரு திரியை ஏற்றினார், அடுத்தது என்னையழைக்க நானும் சென்று அதற்கடுத்த திரியை ஏற்றினேன். ‘மங்கலக் குத்து விளக்கினை ஏற்றி வைக்க இவரை அழைக்கிறோம்… அவரை அழைக்கிறோம்…’ என அழைத்துக் கொண்டேயிருந்தார்கள். பெரிய மனிதர்கள் வந்து ஏற்றிக் கொண்டேயிருந்தார்கள். ‘மொத்தமே அஞ்சு திரிதானே… எத்தனைப் பேரக் கூப்டுறாரு இவரு! ரெண்டு ரெண்டு பேரு சேர்ந்து ஏத்துவாங்க போல!’ என்று நினைத்துக் குழம்பி நிற்கும் போதே, வந்தவர்கள் அனைவரும் ஒரு திரியேற்றியது தெரிந்தது. விளக்கில் ஏழு திரிகள் உள்ளதை அப்போதுதான் கவனித்தேன் ‘ஓ… ஏழு திரியா…!’ என்று அதிசயத்த போது, அறிவிப்பாளர் ‘கல்லூரியின் பேராசிரியர் அவர்கள் மங்கலக் குத்து விளக்கை ஏற்றுவார்கள்’ என்று தொடங்கி இன்னும் பலரை அழைத்தார். ‘வேற விளக்கு ஏத்துவாங்க போல…’ என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வந்த பேராசிரியர் மெழுகுவத்தியை வாங்கிக் கொண்டு அதே விளக்கை நோக்கியே போனார். ‘அணைஞ்சி போன திரியை ஏத்துவாரோ!’.

விளக்கின் அருகே சென்று குனிந்து ஏற்றினார். அட… அடுத்து ஒரு அடுக்கு. ஒன்று… இரண்டு…மூன்று… ஒன்பது திரிகள் கொண்ட இரண்டாம் அடுக்கு கொண்டிருக்கிறது இலங்கையின் மங்கலக் குத்து விளக்கு.

கொழும்பு நகரில் மலர்ச்சி உரை முடித்து மூன்றரை நேரம் மலைகளின் ஊடே பயணித்து கண்டியை அடுத்த நாவலபிட்டியை அடைந்து, அங்கே கதிரேசன் கல்லூரியில் மாணவர்களுக்கான மலர்ச்சி உரையைத் தொடங்கும் முன்பு ‘மங்கலக் குத்துவிளக்கு ஏற்றுதல்’ என்ற போது, இரண்டு அடுக்குக் கொண்ட விளக்கை விவரங்கள் தெரிந்ததால் குழப்பமில்லாமல் நோக்க முடிந்தது.

இதற்கு முன்பு இதைப்பற்றி அறிந்திருக்க வில்லை நான். நீங்கள்?

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *