சிந்து சமவெளியைப் படித்த அறிஞருக்கு மலர்ச்சி வணக்கம்!

உலகின் தொன்மையான நாகரீகங்களில் ஒன்று என்று ஒத்துக்கொள்ளப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தில், திராவிட முத்திரைகள் உள்ளன என்று படித்துக்காட்டி உலகத்தை ஒத்துக் கொள்ளச் செய்து அதிர்வுகளை ஏற்படுத்திய அறிஞர் ஐராவதம் மகாதேவன்.

‘கஜினி முகம்மதுவை பதினேழு முறை ஓட ஓட விரட்டிய சோழனின் கல்லறை எங்கேடா?’ வகையில் கட்செவியஞ்சலில் வரும் புருடா பகிர்வுகளைப் போல அல்லாமல் வரலாற்று ஆதாரங்களை கல்வெட்டிலிருந்து எடுத்துப் படித்து உலகிற்குத் தந்த அறிஞர் ஐராவதம் மகாதேவன்.

அசோகன் பிராமி என்று ஓடிக்கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களை தலையில் தட்டி தமிழ் பிராமியைக் காட்டிய சாதனையாளர். நெடிய போராட்டத்திற்குப் பிறகு மைசூரிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து கடற்கரைச் சாலைக்கு வந்த செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் பெயர்ப்பலகையை தமிழ் பிராமி எழுத்துக்களில் வைக்கலாமென்று முடிவெடுத்து, எழுத்துரு செய்து, தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ம. இராசேந்திரன் அதை அப்போதைய முதல்வர் கலைஞரிடம் காட்டிய போது, ‘இதை முதலில் ஐராவதம் மகாதேவனிடம் காட்டி விட்டு வா!’ என்றாராம். ‘ஐராவதம் மகாதேவன் சரிபார்த்து கையொப்பமிட்ட பின்னரே உங்களிடம் காட்டுகிறேன்!’ என்றாராம் துணை வேந்தர்.

‘சோழர் கால பண்டைய நாணயங்கள் கண்டெடுப்பு’ என்று எங்கு செய்தி வந்தாலும், தமிழகத்தில் குறைந்த பட்சம் ஆறு ஆண்டுகளாக செய்தித்தாள் வாசிப்பவர்கள் ‘ஐராவதம் மகாதேவன்’ என்ற பெயரை முணுமுணுப்பார்கள். என்னைப் போன்ற சிலர் ‘அது சேரர்களது நாணயமா, சோழர்கள் நாணயமா, களப்பிரர் காலத்ததா என்று அவர் சொல்லட்டும்!’ என்று வெளிப்படையாக சொல்லவே செய்வார்கள். பிள்ளையார்பட்டியின் குடைவரைக் கோயில் பல்லவர்களால் செய்யப்பட்டது என்றே உலகம் முடிவு செய்து முற்றுப்புள்ளி வைத்தபோது, கல்வெட்டைப் படித்து, அதில் இருக்கும் ஊர்ப்பெயரை புறநானூற்றின் வரிகளோடு காட்டி, ‘இந்தக் குடைவரைக் கோயில் பல்லவர்களுக்கும் முற்பட்ட பாண்டியரால் செய்யப்பட்டது!’ என்று அடித்து ஆதாரம் காட்டி பிழையைத் திருத்திய பெருமகனார் அவர்.

நாமெல்லாம் நிமிர்ந்து பார்க்கும் குடவாயில் பாலசுப்ரமணியன், கலைஞர் போன்றோரே நிமிர்ந்து பார்க்கும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன்.

‘தினமணியின் ஞாயிறு ‘தமிழ்மணி’யின் பகுதிகளை கத்தரித்து வைத்துப் பாதுகாக்கிறேன்! நான் தமிழ்மணியின் ரசிகன் ‘ என்று கி.வைத்தியநாதனிடம் சொன்னாராம் வைகோ. வைகோ மட்டுமல்ல, தலையங்கத்திற்காக தினமணிக்குத் தாவி அப்படியே ‘தமிழ்மணி’யின் ரசிகர்களானோர் என்னைப் போல பலருண்டு என் நட்பு வட்டாரத்திலேயே. ‘வளர்ச்சி’ இதழுக்கும் எனது நூல்களுக்கும் பிழைத் திருத்தம் செய்ய வரும் நண்பர் (தமிழின் பெரிய பத்திரிக்கையொன்றில் பணி செய்பவர்) பக்கங்களின் வழியே செல்கையில் சொல்வது, ‘சார், இந்த வார்த்தைங்கல்லாம் பிரமாதம் சார். தமிழ் வித்தியாசம் சார்!’, அவருக்கு நான் சொல்லும் பதில் ‘ தினமணி தமிழ்மணி – சொல் கற்போம் சார்!’
அப்பேற்பட்ட தமிழ்மணி என்ற ஒன்றை தினமணியில் தொடங்கியவர் அப்போது ஆசிரியராய் இருந்த இந்த ஐராவதம் மகாதேவன்தான்.

ஐராவதம் மகாதேவன் இருக்கும் போதே அவருக்கு ‘தமிழ்த்திரு’ விருது வழங்கி பெருமையையும், அவரை அருகிலிருந்து பார்க்க என்னைப் போன்றவர்க்கு வாய்ப்பைத் தந்து புண்ணியத்தையும் கட்டிக்கொண்டது இந்து தமிழ்.

கரூருக்கு அருகே புகலூர்க்குகைக் கல்வெட்டில், சித்தன்ன வாசலில், சிந்து சமவெளியில் என கல்வெட்டுகளில் நாணயங்களில் முத்திரைகளில் ஆராய்ச்சி செய்து ரிக் வேதத்தையும், புறநானூற்றையும் இணைத்துக் காட்டிய பெருமகனார் போய் சேர்ந்தார் இறைவனடி.

பேரரசன் ராஜராஜன் பால் கொண்ட ஈர்ப்பால் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு ஓடி, பக்கச் சுவர்களைப் பார்த்து நிற்கும் தருணங்களிலெல்லாம், பொறித்திருக்கும் எழுத்துக்களை கண்கள் பார்க்கும் போது, உள்ளம் ஐராவதம் மகாதேவனை நினைவு கொள்ளும்.

சிந்து சமவெளி நாகரீகத்தை இனி எவர் ஆராய்ச்சி செய்தாலும், ஐராவதம் மகாதேவனின் நூல்களை ஆராய்ச்சி முடிவுகளைத் தொடாமல் செய்வது கடினம்.

ஐயா… போய் வாருங்கள்! கண் மூடித் துயிலுங்கள். உங்கள் கண்களின் வழியேதான் கல்வெட்டுகளைப் படிக்கும் இனி இந்த உலகம்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
27.11.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *