2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Rajini

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பறவைகளை நேசித்து பறவைகளுக்காகவே வாழும் சூழலியல் ஆர்வலர், பல்கிப் பெருகிவிட்ட செல்லிடப் பேசிகளின் அளவுக்கதிகமான அலைவரிசை வீச்சினால் அழியும் பறவைகளைக் காக்க வேண்டி அரசு, நீதிமன்றம், மக்கள் என்று எல்லா மட்டங்களிலும் போராடுகிறார். எவரும் செவிமடுக்கவே மறுப்பதோடல்லாமல் அவரை ஏளனம் செய்ய, ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!’ என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி வரிகளை சொல்லிக் கொண்டே உயிரை விடுகிறார். மரித்துப் போனவரின் ‘ஆரா’ (ப்ரோட்டான், நியூட்ரான்) ஏற்கனவே மரித்த எண்ணிலடங்கா பறவைகளின் ‘ஆரா’வோடு இணைந்து பேருருவம் கொண்டு நகரை நோக்கி வருகிறது.  மக்களுக்கு ஏற்பட்டிருக்ககும் பெரும் சிக்கலை ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் ரோபாட்டிக்ஸ் விஞ்ஞானி டாக்டர் வசீகரன் அவரது ஹ்யூமனாய்டு ரோபாக்களை வைத்துக் கொண்டு எப்படி சமாளித்துக் காக்கிறார், என்னவெல்லாம் நடக்கிறது என்பதை தனது கற்பனையில் செதுக்கி ரஜினியை வைத்து பிரமாண்டமான படமாக ஷங்கர் தந்திருப்பது ‘2.0’

சாதாரண வெறும் விஞ்ஞானியாக, சிட்டியாக, 2.0ஆக, குட்டியாக என ரஜினி மொத்த படத்தையும் தாங்கி நின்று தெறிக்க விடுகிறார்.  கடைசி முப்பது நிமிடம் திரையில் நெருப்பு பற்றிக்கொண்ட ‘பரபர’.

எமி ஜாக்ஜன் ‘நிலா’வாக நம்மை ஈர்க்கிறார்.

அக்ஷய் குமார் திருக்கழுக்குன்றம்காரராக  மனதை ஈர்க்கிறார், அடுத்த அவதாரத்தில் மிரட்டுகிறார். (ஜெயப்பிரகாஷ் குரல்!?)

காட்சிகளின் உருவாக்கம் தொழில் நுட்பப் பாய்ச்சல் (சிட்டியை பிய்த்துப் போடும் இடம், பக்ஷிராஜன் உருவமெடுக்கும் இடம் என பல இடங்கள்) இந்திய சினிமாவின் பெருமை. ஏ ஆர் ரஹ்மான் பின்னணியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

இவ்வளவு இருந்தும் குறையாகவே ‘இன்னும் கொஞ்சம் நல்லா தந்திருக்கலாமே!’ என்ற உணர்வு நிறைய இருக்கவே செய்கிறது.

ஷங்கர் படங்களுக்கே உரிய ‘ஏய்… தப்பு என்ன பனியன் சைசா….’ ‘புத்திக்கு தெரியுது மனசு கேக்கல’ வகை ஷார்ப் வசனங்களோ, ‘சரோஜா.. சாமான் நிகாலோ… சௌகார்பேட்டைக்கு ஜானே’ ‘லீவில வந்த ரிஷி மாதிரியே இருக்க’ ‘வாழ்க பாதி வளமுடன்!’ என்ற வகை நினைவில் நிற்கும் வசனங்களோ காணப்படவேயில்லை.

அவ்வளவு பெரிய முக்கியமான ஏஐஆர்டி அலுவலகத்தில் அவ்வளவு முக்கியமான அந்த முக்கிய இயந்திரத்தை போகிற போக்கில் எடுத்து அதை இயக்கிவிட முடியுமா, வசனங்கள் பலமாக இல்லை, கதை செய்து தொழில் நுட்பம் சேர்க்காமல், முழுக்க முழுக்க தொழில் நுட்பத்தை நம்பி அப்புறம் கதை சேர்த்ததுபோல் இருக்கிறது என குறைகள் இருந்தாலும், பார்க்கலாம்.   முதல் பாதியை பெரியவர்களும், இரண்டாம் பாதியை குழந்தைகளும் ரசிப்பார்கள்.

வி டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘2.0’ – தொழில் நுட்பம் – 2, மற்றவிஷயங்கள் – 0 – பார்க்கலாம்.

திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *