காவிரிப் படுகையின் மக்களுக்குத் தேவை இன்றைய நிவாரணம் மட்டுமல்ல, நிவாரணம் தாண்டிய நாளைக்கான வழி!

Gaja Cyclone

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் கிராமம் இரண்டு லட்சம் மரங்களை இழந்து நிற்க, அதே ஊரின் விவசாயி சீனு மட்டும் ஒரு பாதிப்புமின்றி நூற்றுக்கணக்கான தென்னைகளோடு நிற்கிறார். ஊரின் எல்லா வீடுகளையும் கலைத்துப் போட்ட ‘கஜா’ இவரது வீட்டை மட்டும் விட்டுவிட்டது எப்படி? குறைந்த சேதாரங்களோடு நிற்கிறார் விவசாயி சீனு.

‘கஜா புயல் கடலூருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே கடக்கும்’ என்று வானிலை நிலையம் தகவல் தந்த போது, ‘இல்லை, கஜா வேதாரண்யத்தில்தான் கடக்கும். முன்பு தனுஷ்கோடியில் ஏற்பட்ட அழிவைப் போல டெல்டா மாவட்டங்களில் பெரும் அழிவு வரும். தென்னைகளின் இளநீர், தேங்காய், குறும்பைகள், பச்சை மட்டைகள் என எல்லாவற்றையும் கழித்து விடுங்கள். மரங்கள் கனமின்றி நிற்கும், தப்பிக்கும். பச்சைமட்டைகளை வீட்டின் கூரை மீது போட்டு கயிற்றால் கட்டுங்கள், வீடு தப்பிக்கும்’ என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் தன்னார்வ அடிப்படையில் வானிலை நிகழ்வுகளைக் கணிக்கும் ஆசிரியர் செல்வக்குமார். செல்வக்குமார் சொன்னதைக் கேட்டு, தென்னை மரங்களைக் கழித்தார் விவசாயி சீனு. அந்தப் பகுதியிலேயே பிழைத்த மரங்களும், தப்பித்த வீடும் அவருடையதுதான்.

‘கஜா’வின் கோரத் தாக்குதலில் வேதாரண்யத்தின் எல்லா மரங்களும் சாய்ந்த போது ஒரேயொரு தோப்பில் மட்டும் நூற்றுக்கணக்கான தென்னைகள் அப்படியே நின்று பிழைத்துள்ளன.
‘நெட்டை மரங்கள்’ என்றழைக்கப்படுகின்ற பாரம்பரிய தென்னைகள் புயலைத் தாண்டி பிழைத்து நிற்கின்றன. பனை மரங்கள் பிழைத்து நிற்கின்றன. அரசும் அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் இதை. செல்வக்குமார் தந்த அந்த எச்சரிக்கை அரசின் வழியே வந்திருந்தால், விவசாயி சீனுவின் மரங்கள் மட்டுமல்ல, மொத்த வேதாரண்யமும் திருவாரும் காவிரிப்படுகையும் பிழைத்திருக்குமே. இது போன்ற ஆர்வலர்களை பொதுமக்கள் நலன் கருதி அரசு ஊக்குவித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
….

ஐந்து ஏக்கரில் இருந்த தென்னை மரங்கள் மூன்று ஏக்கரில் இருந்த தேக்கு மரங்கள், குடியிருந்த ஓட்டு வீடு என எல்லாமும் சரிந்து விட, உள்ளுக்குள் சரிந்து போனார் அந்த விவசாயி. நான்கு நாட்கள் யாரிடமும் பேசாமல் இருந்தவர், ஐந்தாம் நாள் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு ஊர் சுடுகாட்டின் அருகிலேயே உயிரை விட்டார். ‘கஜா’ புயல் தாக்குதலின் மீட்பிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

மெழுகுவர்த்தி, போர்வைகள், சூரிய விளக்குகள், உணவு, தண்ணீர் என்ற உடனடி நிவாரணப் பொருட்களைத் தாண்டி வாழ்வாதாரத்தை நினைத்து அஞ்சுகிறார்கள் அம்மக்கள். ‘அடுத்த சில ஆண்டுகளுக்கு என்ன செய்வது?’ என்ற கேள்விக்கு விடையில்லாமல் மனம் கலங்கி நிற்கின்றனர், அதன் விளைவே தற்கொலைகள். சோறுடைத்த சோழ நாட்டிலிருந்து வேலை தேடி புலம் பெயரும் கொடுமையும் கூட நடக்கும் நாளை.

இங்கே தேவை, இன்றைய நிவாரணம் மட்டுமல்ல, அவர்களுக்கான நாளைய நம்பிக்கை. ‘இந்த வழி தெரிகிறது!’ என்று அவர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டால், மீண்டெழுந்து உட்காருவர். இரண்டாண்டுகளில் பலன் தரக்கூடிய புது ரக தென்னைகளை அல்லது பாரம்பரிய தென்னைகளை, அவை வளரும் வரை பலன் தரும் ஊடு பயிர்களை தந்து உதவி செய்ய வேண்டும் அரசு. அரசின் குடையின் கீழ் தனியார், பன்னாட்டு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கைகளை கொண்டு வந்து மிகப் பிரமாதமாக செயல்படுத்திவிட முடியும். போர்வைகள், மெழுகுவர்த்திகள் தருவது மற்றவரால் முடியும், இதை அரசுதான் செய்ய முடியும். செய்ய வேண்டும்.

காவிரிப் படுகையின் மக்களுக்குத் தேவை இன்றைய நிவாரணம் மட்டுமல்ல, நிவாரணம் தாண்டிய நாளைக்கான நம்பிக்கை, நாளைக்கான வழி!

சோழ தேசம் மீண்டெழ
பிரார்த்தனைகள்!

பரமன் பச்சைமுத்து
சென்னை
01.12.2018

www.ParamanIn.com

Facebook.com/ParamanPage

gaja_f gaja_f2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *