திரை விமர்சனம் : ‘அக்வா மேன்’ : பரமன் பச்சைமுத்து

aquaman-movie-poster

 

aquaman-movie-poster

 

நாட்டின் ஓரத்தில் இருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தின் காப்பாளரின் கண்களில், கரையில் அடிபட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு பெண் அகப்படுகிறாள். அன்பும், அரவணைப்பும், மருந்தும் புகட்டப்பட்டு  சுயநினைவு பெற்று அவள் எழுந்து உட்கார்ந்ததும் அவள் வேறு ஓர் உலகத்தை சேர்ந்தவள் என்றும், கடலின் அடியில் இருக்கும் அட்லாண்டிஸ் தேசத்தின் ராணி ‘அட்லாண்டா’ அவள் என்றும் தெரியவருகிறது. கலங்கரை விளக்கக் காப்பாளருக்கு ஒரு குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு சில காரணங்களால் பிரிந்து கடலுக்குள்ளே போய் விடுகிறாள். போகும் முன்னே, ‘நம் அன்பு புனிதமானது. ஒரு நாள் சூரிய உதய வேளையில் நான் இதே கடற்கரையில் உங்களுக்கு முன்னே தோன்றுவேன்!’ என்று முத்தமிட்டு உறுதிகூறிப் போய் விடுகிறாள்.

ஒவ்வொரு காலையும் சூரிய உதயத்தின் போது அவள் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டே நிற்கிறார் வயது முதிர்ந்த பின்னும் அந்தக் காப்பாளர் கணவர். அவள் வந்தாளா?  கடலுலக – மண்ணுல சேர்க்கையாக அவளுக்கும் அவருக்கும் பிறந்த அந்தப் பிள்ளை என்னவானான்? அந்த உலகத்தின் ராணி என்று சொன்னாளே, அப்படியானால் அந்தக் கணவன் – அவனுக்குப் பிறந்த குழந்தை எல்லாம் என்னவானார்கள்? இந்த முடிச்சுகளை இரண்டு மணிநேரத்திற்கு அழகாக காட்டினால் – ‘அக்வா மேன்’

வேறு இனம் என்று கருதப்படும் சாமானியன் ஒருவன், தான் சார்ந்திருக்கும் கூட்டத்திற்கு ஆபத்து என்றதும் வீறு கொண்டு எழுந்து பேருருவம் எடுத்து வெற்றிவாகை சூடும் அதே ‘உத்தம புத்திரன்’(சிவாஜி),  ‘லயன் கிங்’ ‘அவதார்’ ‘பாகுபலி’ ‘புலி’ ‘2.0’ வகை காமிக்ஸ் நாவல்தான். ‘டிசி காமிக்ஸ்’ நாவலை படமாக எடுத்துத் தந்திருக்கிறார்கள்.  நீர்மூழ்கிக் கப்பலை அலேக்காக தூக்கி மேலே கொண்டு வரும் நாயகனின் அதிரடி முதல் தோற்றம், ஜேம்ஸ் கேமரூனின் ‘அபிஸ்’ திரைப்படத்தை அப்படியே கண் முன்னே கொண்டுவருகிறது.

நாயகான வருகிறவர் அழகாக பொருந்துகிறார். கடலின் அடியில் இருக்கும் உயிரினங்கள், அதன் அருகிலேயே செல்லும் இயந்திரங்கள், பாலங்கள், ஆயுதங்கள் என மிகப் பிரமாண்டமாக ஆனால் பார்த்துப் பார்த்து உருவாக்கியிருகிறார்கள்.

இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் படம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுவையாக மாறி கடைசியில் மீண்டேழுகிறது.

வீ டாக்கீஸ் வெர்டிக்ட் ; ‘அக்வா மேன்’ – அந்தக் கால விட்டலாச்சாரியா கதையை இந்தக்கால தொழில் நுட்பத்தில். காமிக்ஸ் கதைகளை விரும்புகிறவர்களும், குழந்தைகளும் பெரிதும் விரும்புவார்கள்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *