என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது…

என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது.

பொறிஞன், தொழில் நுட்பம் தெரிந்தவன் என்றாலும்
வெட்கம் பிடுங்கித்தின்னும் நடுத்தர வர்க்கத்துப் பையனாகவே இருந்து அடியிலேயே உழன்று கொண்டிருந்த எனக்கு வாழ்வின் முக்கியக் கதவுகள் திறந்தது பெங்களூருவில்தான்.

சென்னை ‘ஆஃபீஸ் டைகர்’ (இன்றைய ‘ஆர் ஆர் டொனாலி’) ப்ராஜெக்ட்டில் இருந்த நான், எதை எங்கு சொன்னால் எங்கு போய் சேரும் என்று அறிந்து ஸ்ரீகாந்த் கொடுமூரிடம் போய், ‘பசிபிக் இண்டர்நெட்டிலிருந்து எனக்கு சிங்கப்பூர் ஆஃபர் வந்திருக்கிறது!’ என்று சொல்லி கவரை மட்டும் காட்டினேன். அடுத்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் ‘மைக்ரோலாண்ட்’ சென்னை கிளையின் தலைமையதிகாரியின் அறைக்கு அழைக்கப் பட்டேன்.

‘ஹாய்ய்ய்… பரமா…!’ என்று எப்போதும் வழியும் உற்சாகத்தோடு என்னை அழைத்தார் என் பாஸ் பிரபா லட்சுமி. ‘மார்க்கெட்டிங்’கில் பழம் தின்று கொட்டை போட்டவர், உற்சாக ஊற்று.

‘பரமா… தீப் பாண்டே ஈஸ் கோயிங் டு ஹிஸ் நேட்டிவ் நைனிடால் ஆன் லீவ். இண்டியா டாம் காம் ப்ராஜெக்ட் நீட்ஸ் ஸம் லினக்ஸ் கேட். நீ போயேன்!’ என்று பிரபா சொன்ன போது உற்சாகமாக ஒத்துக் கொண்டேன்.

அந்த நவம்பர் அதிகாலையில் மடிவாலா ‘புழக்கடேவில்’ ட்ரான்ஸ்போர்ட்டின் பாயிண்ட்டில் என்னை அழைத்துப் போக யமஹா பைக்கில் வந்த ராமுவும், சென்னை அலுவலகத்தில் அறிமுகமாகிய முகுந்தனும் நெருக்கமானது தலைமைச் செயலக அலுவலகத்தில்தான். அடுத்த பல ஆண்டுகளுக்கு பரமன், ராமு, முகுந்தன் என்பது முக்கிய ‘ட்ரையோ’வாகப் பார்க்கப் பட்டது பெங்களூருவில். ( சிவநெறித்தேவன், ஆழ்வார், மத்வ மைந்தன் )

பெங்களூரு நாட்களில்தான் நான் தடையுடைத்து கிளர்ந்தெழ வைக்கப்பட்டேன். பிரபா எப்போதும் எங்களை அரவணைத்து நல்ல ப்ராஜெக்ட்களில் பரிந்துரைத்து உருவாக்க உதவினார்கள்.

முகுந்தனும் நானும் ஹிந்து செக்யூரிட்டி ப்ராஜெக்ட்டிற்காக சென்னை அலுவலகத்தில் இருந்தோம். தி. நகர் ராஜா ச்சர் தெருவில் மமதா அபார்ட்மெண்ட்டில் இருந்தது அலுவலகம் அப்போது. செஸ்டேண்டர்டு சார்ட்டர்டின் ‘ஸ்கோப் இண்டர்நேஷனல்’ ப்ராஜெக்டில் இருப்பவர்களுக்கு இரவு விருந்தோடு கூடிய பாராட்டு விழா. மொட்டை மாடியில் வட்டமாக எல்லோரும் கூடியிருக்க, நடுவில் நின்று பிரபா பேசினார்கள். உற்சாகம் படுத்தும் விதமாக, எல்லோரையும் சில வார்த்தைகள் பேசச் சொல்கிறார்கள்.

தொடை மட்டுமல்ல மொத்த கால்களும் நடுங்குகிறது எனக்கு. முத்து நாயகம், பார்த்த சாரதி, அடுத்தது முகுந்தன், அதற்கு அடுத்து நான். ‘என்ன பேசுவது!?’ நாவறண்டு, உடல் வேர்த்து தவிக்கிறேன். முகுந்தன் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் ஊறியவன். அழகாகப் பேசினான். ‘கன்கிராட்ஸ் டீம். செக்யூரிட்டி டாக்குமெண்ட் பண்ணனும். போய் பொன்னியின் செல்வன் படிக்கனும்’ என்று சொல்லி விட்டு ஓடிவிட்டேன். ‘சூப்பர்டா பரமா!’ என்று அதற்கும் கைதட்டினார் பிரபா,முகுந்தனுடன் சேர்ந்து.

ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பதினைந்து ஆண்டுகள் கழித்து இதோ காரில் மகாபலிபுரத்திலிருக்கும் ஒரு ரிசார்ட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன் ‘கார்ப்பரேட் கோச்’ ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்’ என்பவனாக.

ஒரு நிறுவனத்தின் நூற்றிற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அரை நாள் பயிற்சி வகுப்பெடுக்க. அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஊழியர்கள் என எல்லோரும் ‘மலர்ச்சி உரை’ பேச்சைக் கேட்க உற்சாகமாக காத்திருப்பதாக குறுஞ்செய்தி வருகிறது இப்போது.

அந்த நிறுவனத்தின் இயக்குநர்…

என் பழைய பாஸ்… பிரபா லட்சுமி!

-பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரைச் சாலை
22.12.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *