மாலையில் வெள்ளை காலையில் சிவப்பு

20190109_2124342130056772036433717.jpg

மாலையில் வெள்ளை வெளேரென்றும் அடுத்த நாள் காலையில் ரத்தச் சிவப்பிலும் மாறும் இந்த மலரைத் தெரியுமா உங்களுக்கு?

நான் சிறுவனாக இருந்த போது எங்கிருந்தோ இந்தக் கொடியைக் கொண்டு வந்து நட்டார் அப்பா. மணக்குடிக்கே இந்தக் கொடியை அறிமுகப்படுத்தியவர் அப்பாதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்னால். கொடுக்காப்புலியும், இந்தக் கொடியும் நான் பீற்றிக் கொள்ளும் பெருமைகள் அப்போது. ‘எங்க வீட்ல ரெண்டு கலர் பூக்கற கொடி இருக்கு தெரிஞ்சிக்கோ!’ என்பது என் பால்ய காலத்து பெருமை வரிகள்.

அப்புறம் மணக்குடியிலேயே குளத்தங்கரையின் இந்தப்பக்கத்திற்கு மாறி வீடு கட்டிக் கொண்டு வந்து விட்டோம். அதே கொடியைக் கொண்டு வந்து வீட்டின் வேலி முழுவதிலும் வைத்து விட்டார்.

முதல் முதலி்ல் மாலையில் மலரும் போது வெள்ளை வெளேரென்றும், அடுத்த நாள் சிவப்பாகவும் மாறிவிடும் இந்த மலர்கள் ஓர் அதிசயம் எனக்கு அப்போது. ‘ரங்கூன் மல்லி’ என்று எவரோ ஓர் பெயரைச் சொன்னார்கள்.

பெயரைத்தாண்டி இந்த மலரின் தேன் பருகியே வளர்ந்தோம் நாங்கள். இந்த மலரைக் கொய்து அதன் நீள் காம்பினடியில் கடித்து உறிஞ்சினால் தேன் வரும். ராஜவேல் சித்தப்பாதான் அதை முதன்முதலில் கற்றுத் தந்தார். பள்ளியிலிருந்து வந்து தேன் குடிக்க ஒரு போட்டியே நடக்கும். சில வேளைகளில் உறிஞ்சும் போது புளிக்கும். தேனின் சுவைக்காக ஆசையாய் உறிஞ்சிய ஒருவனின் முகம் திடீரென்று மாறி கண் சுருங்கி வாய் தானாக ‘ஆவ்…’ என்று திறந்தால், எறும்பிருந்த மலரை உறிஞ்சிவிட்டோம் என்று பொருள். உறிஞ்சிய உறிஞ்சலில் தேனோடு எறும்பும் வந்து விட்டது என்று பொருள். தேனோடு எறும்பு வந்தால் புளிக்கும். அடுத்து அவசரமாய் நல்ல தேனை தேடும் வாய், மலரைத் தேடும் கை.

இப்போதும் மணக்குடியில் வீட்டின் முன் வேலியில் மருதாணிச் செடியும் இந்தக் கொடியும் அடுத்தடுத்து இருக்கின்றன. ஆடுகள் மருதாணி யைக் கடிப்பதும், பள்ளிச் செல்லும் பிள்ளைகள் தேனுக்காக இந்த மலர்களைக் கொய்வதும் தலைமுறைகள் தாண்டியும் இன்னும் தொடர்கிறது.

புதுச்சேரியில் ‘வளர்ச்சிப்பாதை’ வகுப்பெடுத்து விட்டு வெளியில் வந்தவனை நினைவுகளால் பற்றி் இழுத்து விட்டது இந்தக் கொடி. இன்று வரை இந்தக் கொடியின் பெயர் தெரியாது. அதன் பச்சை இலைகள் பள்ளிப் பருவம் தாண்டியும் என் ஓவியக் கிறுக்கல்களில் இடம் பெற்றே இருந்தன. இந்த மலர்கள் என் கனவுகளில் வந்தன.

அதன் பச்சை பசேல் இலைகளை ரசிக்க, வெள்ளை மலர்களை கன்னக் கதுப்புகளில் வைத்து உரச, பார்த்துக் கொண்டே லயிக்க… பெயர் தெரிய வேண்டுமா என்ன! இயற்கையின் வண்ண விளையாடல்களில் இதுவும் ஒன்று போல.

அதன் இலைகளின் அழகை, அதன் புதிய வெள்ளை மலர்களின் மலர்ச்சியை, பழைய சிவப்பு மலர்களின் நிறத்தை நீங்கள் ரசித்திருக்கிறீர்களா?

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
09.01.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *