‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்!’

….. Post from MALARCHI App….. …..

‘சார் வண்டி பத்து நிமிஷம் நிக்கும் டீ காப்பி டிபன் சாப்டறவங்க சாப்படலாம்’ வகை அறிவிப்புகளும், ‘முருக்கேய், மொளவடேய்! இஞ்சிமரபா!” வகை கூவிக்கூவி நடைபெறும் விற்பனைகளும் இல்லா விமான சேவை என்பதால் மட்டுமல்ல, கொஞ்சம் மண்டை உள்ள பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்பதால் ஜெட் ஏர்வேய்ஸ் அதிக மதிப்பெண் பெறுகிறது என் கணக்கில்.

காசென்று வந்து விட்டால் கையாளத் திணறும், காப்பி வாங்கி மீதி கொடுக்க, கணக்குப் போட கை விரல்களை கால்விரல்களையெல்லாம் பயன்படுத்தி துன்பறும் துன்புறுத்தும் சில ஏர்லைன்ஸின் பெண்களைப் போலல்லாமல் (என் பழைய சிங்கப்பூர், சீஷெல்ஸ், கொழும்புப் பயண பதிவுகளை படித்தவர்களுக்குப் புரியும்) சூட்டிகையாக நடந்து கொள்கிறார்கள் இவர்கள்.

ஏறிய ஐந்தாவது நிமிடத்தில் கேட்டாலும் சரி, இருபதாவது நிமிடத்தில் கேட்டாலும் சரி, ‘எஸ் மேடம். ப்ளீஸ் வெயிட்!’ என்று சொல்லி விட்டு தண்ணீர் வண்டியை தள்ளிக் கொண்டு வரும் அதற்கான நேரத்தில் மட்டும்தான் தண்ணீர் கொண்டு வரப்படும் (அந்நாளைய திருவல்லிக்கேணி ‘காசி விநாயகா மெஸ்’ஸில் வரிசையாக அடுத்தடுத்து சாம்பார், காரக்குழம்பு, ரசம் வரும். அந்த நேரத்தில் ஊற்றிக் கொள்ளாமல் விட்டால் திரும்ப காரக்குழம்பு வரவே வராது. அவ்வளவுதான்! அவன் கொண்டு வரும் போது வாங்கிக் கொள்ள வேண்டும்) என்ற வகை ஏனைய விமானங்களைப் போலல்லாமல் எப்போது கேட்டாலும் தரப்படுவது குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், குழந்தையைப் போல நடத்தை கொண்ட பெரியவர்களுக்கும் பெரும் ஆறுதல்.

‘காஃபி..? வி ஹேவ் கேப்பச்சீனோ சார். டூ யூ ஹேவ் கார்ட் சார்? யுவர் போர்டிங் பாஸ் ப்ளீஸ்!’ என்று கேட்டு மளமளவென்று சமாச்சாரத்தை முடித்து விட்டு கையில் காஃபியைத் தந்து விடுகிறார்கள் ரீனாக்களும், சாண்ட்ராக்களும்.

நூறு ரூபாய்க்கு தரப்படும் கேப்பச்சீனோ நன்றாகவே இருக்கிறது.

சென்னை – மும்பை விமானப் பயணம் மற்றதைப் போலல்லாமல் கிட்டத்தட்ட வழி நெடுக சன்னலின் வழியே தரையைப் பார்த்தவாறே பயணிக்கலாம். (ஜெட் விமானத்தில் ‘ஜோன் 3’ எனப்படும் பகுதியில் உங்கள் இருக்கை அமைந்தால், சன்னல் பக்கம் இருந்தாலும் உங்களாலால் எதையும் பார்க்க முடியாது, விமானத்தின் இறக்கைகள் மறைக்கும்.) சிறு செடிகளைப் போலத் தெரியும் மரங்களையும், காலில் இடறும் கல்லின் அளவாகத் தெரியும் கட்டிடங்களையும், நரம்புகளைப் போல நடுநடுவே ஊர்ந்து கிடக்கும் சாலைகளையும் கூகுள் எர்த்தில் பார்ப்பதைப் போல உயரத்திலிருந்து பார்த்தபடியே கேப்பசீனோவை பருக முடியும் உங்களால்.

‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்!’

பின்னிருக்கை மாமி மாமாவை அடக்குகிறார். நூறு ரூபாய் சேமிக்கலாம்தான், இந்த அனுபவம் போய் விடுமே! வாழ்வென்பதே அனுபவங்களின் தொகுப்புதானே! யார் சொல்வது அதை அவருக்கு? வாழ்க்கை அனுபவமே சொல்லிவிடும் ஒருநாள்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை – மும்பை விமானத்தில்
20.02.2019

…. Post from MALARCHI App….. …..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *