‘தாய்க் காடை’ : பரமன் பச்சைமுத்து

காடை

‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்?’

மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஆதிரையான் மாமாவிடம் கேட்டான். மாமாவோடு இருப்பதென்றால் ஆதிரையானுக்கு அலாதி விருப்பம், கூடவே வயலுக்கு போவதென்றால் கேட்கவா வேண்டும். அந்தி சாயும் வேளையில் தகர டப்பாக்களையும், தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஆதிரையானை வயலுக்குக் கூட்டி வந்தார் மாமா. மணக்குடியிலிருந்து தச்சக்காடு அய்யனார் கோவில் வரை சைக்கிள் செல்லும் பாதை இருக்கிறது. அதற்கப்புறம் பாட்டை இல்லை, வரப்பின் மீது நடந்துதான் அவர்களது வயலுக்கு செல்லவேண்டும்.

இருமங்கிலும் கவிழ்ந்திருக்கும் நெல்மணிகளும், நாசியில் வந்து மோதும் அவற்றின் மணமும், நடக்கும் போது சரேல் எனப் பாய்ந்து குதித்து ஓடும் தவளைகளும், கொடுக்கையும் கொடுக்கைப் போலவே கண்களையும் தூக்கிப் பார்க்கும் அமைப்பு கொண்ட நண்டுகளும் என வரப்பில் நடப்பது ஒரு புதிய உலகத்திற்கு கொண்டு போய் விடும் எவரையும். ஆதிரையானுக்கும் அதுவே. கனவுகளில் கூட தனியாகவும் மாமாவோடும் வயலில் நடப்பது வரும் அவனுக்கு.

அப்படிதான் அன்றும். வரப்பின் வழியே நடந்து பல நெல் வயல்களைக் கடந்து அவர்களது வயலை அடைந்தார்கள். வயலை அடைந்ததும் மாமா சுற்றி நாலா புறமும் எதையோ பார்த்தார். வானத்தை பார்க்கிறார் என்று மட்டும் புரிந்தது அவனுக்கு.

‘ஏய் ஆதி! எட்றா எல்லாத்தையும். நேத்து வச்சிட்டு போன குச்சி அங்க இருக்குப் பாரு. எடுத்துக்கோ. தட்ட எடுத்து நல்லா தட்டனும்! சத்தமா தட்டனும் தெரியுதா?’

சொல்லிவிட்டு தகர டப்பாவை எடுத்துக் கொண்டார் மாமா. ஒரு பூவரசம் குச்சியை எடுத்து மேளம் வாசிப்பது போல தட்டி சத்தம் வருகிறதா என்று சோதித்துப் பார்த்தார். அப்படியே அவனுக்கு காட்டவும் செய்தார்.

‘டப்..டப்….டப்….டம்….டம்…டம்..’ சத்தம் வர, வயலில் தவளைகள் எலிகள் அரண்டு ஒடுங்கின.

‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்?’

‘செரவி ஓட்ட!’

‘செரவின்னா என்ன மாமா! அத என் ஓட்டனும்?’

‘செரவிங்கறது ஒரு பறவை. கூட்டம் கூட்டமா பறந்து வந்து வயல்ல எறங்கிடும். எறங்கிச்சுன்னா அவ்வளோதான். மொத்தத்தையும் முடிச்சிடும். மொத்தமா எல்லா நெல்லையும் உருவி போட்ட மாதிரி தின்னுட்டு பறந்து போயிடுங்க. அப்புறம் ஒண்ணுமே மிஞ்சாது! இப்படி தட்டி தட்டி சத்தம் போட்டு கத்தினால் செரவி இங்க எறங்காம வேற எங்கயாவது பறந்து போயிடும்!’

‘செரவி திங்கட்டுமே! பாவந்தானே!’

மாமாவுக்கு சிரிப்பும் கூடவே எரிச்சலும் வந்தது. சிறுவனுக்கு புரிவது போல் சொல்ல முயற்சித்தார்.

‘அடேய்… கஷ்டப்பட்டு ஒடம்பு நோக ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி நாம உருவாக்கறது நமக்கு சொந்தம் இல்லையா! அப்பத்தான குடும்பத்தைக் காப்பாத்த முடியும்? அதான்! தட்டு.. நல்லா தட்டு… கத்து!’

வானத்தில் ஏதோ பறவை கூட்டம் தெரிய, மாமா பரபரப்பானார். தகர டப்பா கிழிந்து போகுமளவிற்கு ‘டம் டம் டம்’ என்று தட்டியும், ‘ஏய்…ஏய்… ஏய்…’ என்று சத்தமாகக் கத்தியும் செரவி ஓட்டினார்.

ஆதிரையானுக்கு முதலில் வெட்கமாக இருந்தாலும், மாமா செய்வதைப் பார்த்து உற்சாகம் தொற்றிக்கொள்ள அவனும் தட்டை எடுத்து ‘டங்.. டங்…டங் ….டப்..டப்..’ என தட்டினான். அவனது வெட்கம் அவனை மாமாவைப் போல கத்தி குரலெழுப்ப விடவில்லை.

இரவு வீட்டுக்கு வந்தும் ‘செரவி செரவி’ என்றான். கனவிலேயும் செரவிகள் வந்தன.

‘அடேய்… கஷ்டப்பட்டு ஒடம்பு நோக ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி நாம உருவாக்கறது நமக்கு சொந்தம் இல்லையா! அப்பத்தான குடும்பத்தைக் காப்பாத்த முடியும்?’ கனவிலேயும் மாமா சொன்னதை கேட்டான்.
…..

பத்தாண்டுகளில் எல்லாம் மாறிவிட்டன என்றும் சொல்லமுடியாத, எதுவுமே மாறவில்லை என்று சொல்லவும் முடியாத நிலையில் இருந்தது அந்தப் பகுதி. மணக்குடியிலிருந்து தச்சக்காடு போகும் அதே பாதையை கார் போகுமளவிற்கு வேய்ந்திருக்கிறார்கள் இன்று. நீரின்றி காய்ந்து கிடக்கும் வாய்க்காலுக்கு மேலாக செல்லும் மின்சாரக் கம்பிகளில் நிறைய மைனாக்களும் ஒரு மீன் கொத்தியும் உட்கார்ந்திருக்கின்றன. ‘க்ளாங்..கிளாங்… கிளாங்…கோவ்…க்ளாக்’ என்று பறவைகள் என்னவோ பேசிக்கொண்டன.

என்ன பேசிக்கொள்ளும் இந்தப் பறவைகள்? ‘தோ வண்டி ஓட்டறான் பாரு ஒருத்தன். அவன் பத்து வருஷத்துக்கு முன்ன பொடிப் பயலா சைக்கிள்ள பின்னாடி ஒக்காந்துட்டு வருவான் இதே பாதையில. இப்ப வளர்ந்து அவன் வண்டி ஓட்டிட்டு வரான். அன்னைக்கு சைக்கிள் ஓட்டிட்டு வந்தாரே அவனோட மாமா, அவரு இன்னைக்கு வண்டியில பின்னாடி ஒக்காந்திட்டு வர்றார் பாரு!’ என்று தங்களுக்குள் பெசிக்கொள்ளுமா அவை என்று எண்ணியவாறே தனது கருப்பு வண்ண பஜாஜ் பல்சரை மெதுவாக செலுத்தினான் செமஸ்டர் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் ஆதிரையான்.

வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பூட்டி விட்டு, சாலையின் சரிவில் இறங்கி வரப்பில் நடந்தார்கள் இருவரும். ஆதிரையான் முன்னே போக பின்னே, ‘ஆதி… எவ்ளோ நாள் வீவு? ஓட்டு போட திரும்பி வருவியா?’ என்று பேசிக்கொண்டே தொடர்ந்தார் மாமா. அனலாக இறங்கிய வெயில் ‘கோடை வருதப்பா!’ என்று சொன்னதைப் போல இருந்தது.

வரப்பின் இரு புறங்களிலும் இருக்கும் வயல்களில் நெற்பயிர்கள் இல்லை இப்போது. பிடுங்கி குவியல் குவியலாக போடப்பட்டிருக்கும் உளுத்தஞ்செடிகளை கொண்ட வயல்களும், இன்றோ நாளையோ பிடுங்கலாம் என்ற நிலையில் இருக்கும் உளுந்து அல்லது பச்சைப்பயிர் கொண்ட வயல்களுமாக இருந்தது. அரிவாள் கொண்டு அறுத்துப் போடப்பட்ட உளுத்தஞ்செடிகளின் பச்சை வாடை ஆதிரையானையும் அவனது மாமாவையும் தாக்கி கடந்து போனது.

‘ஆதி.. இன்னும் ரெண்டு நாள்ல புடிங்கடலாம் பயித்த!’ என்றபடியே வயலில் இறங்கிய மாமா, எதையோ பார்த்துவிட்டு திடீரென துள்ளிக் குதித்தார். மாமா பார்க்கும் திசையில் பார்த்த அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. நிலத்தில் எதையோ பார்க்கிறார் என்று மட்டும் புரிந்தது. ‘பாம்பாக இருக்குமோ!’ எண்ணியவன், ‘அதுக்கு இவ்ளோ துள்ளி குதிக்க மாட்டாரே!’ என்று சொல்லிக் கொண்டான்.

ஒரு புதையலைக் கண்டவரைப் போல மகிழ்ச்சியில் இருந்தார் மாமா. பரபரவென்று இயங்கத் தொடங்கியவர் சுற்றும் முற்றும் பார்த்தார், வானத்தைப் பார்த்தார். ‘செரவி வருதோ!’ என்று பழைய நினைவில் வானத்தை பார்த்தான் ஆதிரையான். வேட்டியை கழட்டி தலையில் முக்காடு போல போட்டுக் கொண்டு தன்னை முழுதாக மூடிக் கொண்டார் மாமா.

‘ஆதீய்… காடை முட்டைடா காடை முட்டய்!’ என்று அவன் பக்கம் திரும்பி மெல்லிய குரலில் ஆனால் உற்சாகம் கொப்பளிக்கக் கூவினார். செருப்பைக் கழட்டி விட்டு விட்டு அங்கே ஓடிய ஆதிரையானை, கொஞ்சம் தூரத்திலேயே நிறுத்தினார் மாமா. ‘அடேய்.. அங்கேயே இரு. ரொம்ப கிட்ட வராத. காடை எங்கிருந்தாவது வந்து கொத்திரும். அப்படியே நில்லு!’ வேட்டியை ஏன் தலையில் எடுத்துப் போட்டு மூடிக் கொண்டார் மாமா என்று புரிந்தது அவனுக்கு.

‘மாமா.. என்ன செய்யறீங்க?’

‘டேய்… காடை முட்டை மாப்ளே! இது பொதையலு. கெடைக்கவே கெடைக்காது!’

காடை என்பது நிலத்தில் வாழும் ஒரு பறவை. நிலத்திலேயே கூடு கட்டி முட்டை இட்டு அடை காத்து குஞ்சு பொரிக்கும் பறவை. காடை முட்டை என்பது அசைவ விரும்பிகளால் கொண்டாடப்படும் ஒரு சங்கதி என்று படித்ததெல்லாம் நினைவில் வந்தது ஆதிரையானுக்கு.

இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போய் எட்டிப் பார்த்தான். நிலத்தில் உலர்ந்த புற்களால் ஆன படுக்கையைப் போல ஒரு கூடு. அதில் நான்கு முட்டைகள் இருப்பது தெரிந்தது. இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குனிந்து நான்கு முட்டைகளையும் கையிலெடுத்து விட்டார் மாமா.

‘என்ன செய்யறீங்க?’

‘அடேய்… காடை முட்டைடா! இன்னைக்கு எனக்கு பொன்னான நாள்’ சொல்லிக்கொண்டே ஒரு முட்டையை தட்டி உடைத்து அப்படியே தூக்கி வாயில் ஊற்றிக் குடித்தார் மாமா!

‘ஐயோ…’ கலவரமான ஆதிரையான் கத்தினான்.

‘ப்ப..ம்ம்… ஆகா! காடை முட்டேய்! இப்ப ஓடணும்! என்னா சத்து வரும் தெரியுமா?’

மாமா அடுத்த முட்டையையும் உடைத்தார். தலையை பின்னுக்குத் தள்ளி அண்ணாந்து வாயை வானத்தை நோக்கி வைத்து திறந்து அடுத்த முட்டையை அப்படீயே ஊற்றிகொண்டார்!

‘ப்ப்ப…ம்ம்… ஹ்ம்!’

‘மாமா… போதும் மாமா. ரெண்டு முட்டையை அங்கேயே வச்சிடுங்களேன். அந்த தாய்ப் பறவை வந்தா தேடும் மாமா. பாவம் அதோட குடும்பம் அது. அதோட வம்சம் ஒண்ணாவது பொழைக்கட்டுமே! ப்ளீஸ் மாமா! முட்டைய வச்சிடுங்க!’

‘போடா போக்கத்தப் பயல! காடை முட்டைடா இது. கோழி முட்டைய விட அதிக ப்ரோடீன் சத்து எல்லாம் உள்ளது இது. நாமக்கல் கோவைன்னு நெறைய ஊர்ல ஜப்பான் காடைகள முட்டைகாகவே வளக்கறாங்க! அவுங்களுக்கெல்லாம் தெரியாதா இது? உனக்கு புரியாது! இது ரெண்டும் ஆம்லேட் போட வேணும்! நான் வயல்ல குறுக்க நடந்தே போறேன் போடா!’

பித்துப் பிடித்தவரைப் போல சரசரவென வயல்களின் ஊடே நடந்து போய்க்கொண்டிருந்தார் மாமா. அதே இடத்தில் நின்று அவரையே பார்த்தபடி பித்துப் பிடித்தவனை போல நின்று கொண்டிருந்தான் ஆதிரையான்.

‘ஐயோ! அந்த காடை எங்கு போனதோ! எப்போது திரும்பி வருமோ! குஞ்சுகளாக மாற இருந்த முட்டைகளை காணாமல் எப்படித் தவிக்குமோ அந்தத் தாய்ப் பறவை! அதன் குடும்பம் இது!’

‘தாய்க் காடையே எங்கிருக்கிறாய்? நாங்கள் போன பின்னே வந்து பார்த்து முட்டையில்லாதது கண்டு தவிப்பாயே! இப்போதே வந்துவிடேன்! உன் கோபத்தை என்னிடம் தீர்த்துக்கொள்ளேன். உன் கூரிய அலகு கொண்டு என்னைக் கொத்திக்கொள்! எங்கிருக்கிறாய் நீ!’

மெதுவாக நடந்து வந்து வரப்பில் ஏறினான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாமாவோடு செரவி ஒட்டிய அதே ஈசானிய மூலை. சொல்ல முடியாத ஒரு துக்கம் அடைத்தது. கண்கள் நீர் கட்டியது. இங்கு நின்றுதான் மாமா அவனுக்கு அன்று சொன்னார்.

‘அடேய்… கஷ்டப்பட்டு ஒடம்பு நோக ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி நாம உருவாக்கறது நமக்கு சொந்தம் இல்லையா! அப்பத்தான குடும்பத்தைக் காப்பாத்த முடியும்?’

…..

பரமன் பச்சைமுத்து
திருவண்ணாமலை,
20.04.2019

#### Post from MALARCHI APP ####

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *