‘இண்டிகோ விமானம் ஏறி கோவை வந்த திருவண்ணாமலைத் தண்ணீர்’: பரமன் பச்சைமுத்து

மார்வாடி மொழி பேசும் ராஜஸ்தானிய இன பெரும் புள்ளி ஒருவரது இல்லத் திருமணத்தின் விருந்திற்கு விமரிசையாக வேண்டும் என்று திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா ஆட்களை பெருந்தொகை கொடுத்து வரச் செய்தார்களாம். சென்னையில் வந்து இருட்டுக்கடை அல்வா செய்து தர ஆள், அம்பு, சேனை, சாமான், செட்டு என்று நெல்லையிலிருந்து எல்லாமும் கொண்டு வந்த அவர்கள் வரும் போதே நெல்லை பொருநை நதியின் தண்ணீரை ஒரு டேங்கர் லாரியில் நிரப்பிக் கொண்டு வந்தார்களாம். இருட்டுக் கடை அல்வாவின் உன்னத தனிச்சுவைக்கு செய்பொருட்கள், தயாரிப்பு முறை, கைப்பக்குவம் என எல்லாவற்றையும் தாண்டி அந்த ஊரின் ஆற்றுத் தண்ணீரும் காரணம் என்பது மறுக்க முடியா ஓர் உண்மை.ஓர் ஆக்ஸிஜன் அணுவுடன் ஈர் ஐதரஜன் அணுக்களின் வேதியல் சேர்மமே நீர், நிறமற்றும் நெடியற்றும் ஒளிபுகும் தன்மையிலும் இருப்பதே இச்சேர்மத்தின் பண்பாகும் என்பவை ஏழாம் வகுப்பு வேதியியல் பாடத்தில் படித்தவை. ஒரே பூமி, அதில் இருக்கும் நீரெல்லாம் அதே ஓர் ஆக்ஸிஜன் அணுவும் ஈர் ஐதரஜன் அணுக்களும் கொண்ட சேர்மமே என்றாலும், ஒவ்வோர் ஊரின் தண்ணீரும் உண்மையில் வேறாகவே இருக்கின்றன.நீர் அது ஊறும் இடத்தைப் பொறுத்து பாயும் நிலத்தைப் பொறுத்து ஒரு தனித்தன்மையைப் பெற்றுவிடுகிறது.
‘அனைத்துக் கரைப்பான்’ என்று வேதியியல் பாடத்தால் சொல்லப்படும் நீர், அது ஊறும் இடத்தில் பாயும் நிலத்தில் இருக்கும் உயிரிகளையும் தாதுக்களையும் கரைத்துத் தன்னுள் சேர்த்துக் கொள்கிறது. அதனாலேயே மண்ணுக்கு மண் நீரின் தன்மையும் மாறிவிடுகிறது.வார நாட்களில் சென்னையிலும் சிங்கப்பூரிலும் மென்பொருளானாக இருக்கும் என் நண்பர் பாலச்சந்தர், வார இறுதியில் திருக்காட்டுப்பள்ளி வரகூரில் விவசாயம் செய்கிறார். ‘அதே ஏக்கர் நெல்லுக்கு அதே அளவு தண்ணிதான் பாச்சுவோம். ஆனா, போர் தண்ணி பாச்சினா வர்ற மகசூலை விட ஆத்துத் தண்ணி பாச்சினா வர்ற மகசூல் ஒன்றரை மடங்கு ஜாஸ்தி பரமன்! ஆத்துத் தண்ணிதான் அல்டிமேட்!’ என்று அவர் கூறுவதற்குக் காரணம் குடகில் பிறந்து கருநாடக நிலத்தில் பாய்ந்து மேக்கேடாட்டு ஒகேனக்கல் தருமபுரி திருச்சி வழியே ஓடி வரும் காவிரி் நீர் வரும் வழியின் நிலங்களின் தாதுக்களை கரைத்து தன்னுள் சேர்த்துக் கொண்டு வருகிறதென்பதாலேயே.கவிப்பேரரசு வைரமுத்து தான் உடுத்தும் அத்தனை உடைகளையும் துவைத்து வெளுக்க ஊருக்கு அனுப்பி விடுவாராம் ஒவ்வொரு முறையும். அவர் உடுத்திக் கழற்றிய உடைகள் அல்லிநகரம் போய் சலவையாகியே திரும்பி வருமாம் சென்னை நகருக்கு. ‘என் ஊரின் தண்ணீரில் துவைக்கும் உடைகளை நான் அணியும் போதே, என் ஊரின் மண்ணின் தன்மை என்னிடம் தொடர்கிறது’ என்றொரு பேட்டியில் சொல்லியிருந்தார். பிடுங்கி எடுத்து வந்து சென்னையில் நடப்பட்டாலும் தனது விருட்சத்தின் வேர்களை தனது ஊர் மண்ணின் நீர் கொண்டே நனைக்கிறாரவர்.மண்ணின் மைந்தன் என்பவன் அம்மண்ணில் பிறந்தவன் என்பதால் அல்ல, அம்மண்ணின் நீர் குடித்து உயிரும் உடலும் வளர்த்தவன், அம்மண்ணின் நீரால் விளைந்ததை தின்று வளர்ந்தவன். நீங்கள் வாழும் ஊரிலிருந்து நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் விளைவதை மட்டுமே உண்ணுங்கள் என்று இன்றைய உயிரியல் உணவியல் அறிவியல் நிபுணர்கள் பரிந்துரைப்பது கூட மண்ணின் இந்த அறிவியல் தன்மையால்தான். மாடித்தோட்டம் அமைத்து அவரவர் விளைவித்துக் கொள்வதும் அதனால்தான்.என் ராசாவின் மனசிலே’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, கவனம் பெற்ற நடிகர் வடிவேலு ‘தேவர் மகன்’ போன்ற படங்களில் வரத்தொடங்கிய போது, ஒரு விழாவொன்றில் அவரைப் பாராட்டிக் குறிப்பிடும் போது இளையராஜா இப்படிச் சொல்லியிருந்தார், ‘வைகை ஆத்துத் தண்ணிக்குன்னு ஒரு குசும்பு உண்டு. அது அப்படியே தெரிகிறது வடிவேலுவிடம்’. ‘மாயவரம் தண்ணீ, அதான் இசை வருது!’ என்று சிலர் சிலரைப் பற்றிப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அந்நாளைய சூப்பர் சிங்கர் அல்கா அஜீத் முதல் தமிழ் சினிமாவின் பெரும்பாலான சிறந்த பாடக பாடகியர்களெல்லாம் கேரள நாட்டிலிருந்து வந்து கோலோச்சி நிற்பதைக் காணும் போது, மண், பருகும் தண்ணீர் பற்றியெல்லாம் சிந்திக்கவே செய்கிறது உள்ளம்.நீர் அது பாயும் இடத்தைப் பொறுத்து சேரும் நிலத்தைப் பொறுத்து குணத்தில் மாற்றம் பெற்று நிற்கிறது. ‘ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்’ என்று சித்த மருத்துவம் சொல்வது இதனால்தான்.’புறத்தூய்மை நீரால் அமையும்’ ‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறது குறள் மொழி. ‘எந்த நீரைப் பருகுகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் தன்மை மாறுகிறது’ என்கிறது புரிதல் மொழி.மலர்ச்சி வகுப்பு முடித்து விட்டு நேற்றிரவு சென்னைக்குப் புறப்பட காரிலேறியபோது, குடிக்க இருக்கட்டுமேயென்று மலர்ச்சி மாணவர் பழனி பின்னிருக்கையில் வைத்த பாட்டில், மீதமிருக்கவே இன்று மாலை சென்னையிலிருந்து என்னுடனேயே இண்டிகோ விமானமேறி கோவைக்கு வந்து விட்டது. எந்த ஊர் போனாலும், அதே தண்ணீர்தான் எல்லா இடங்களிலும் என்றாகிப் போகிறது இன்று.’எங்க ஊரு காவக்காரன்’ படத்தில் வரும் ‘சிறுவாணி தண்ணி குடிச்சி நான் பவானியில் குளிச்சி வளந்தவ’ என்று தொடங்கும் பாடலில், ‘யாராயிருந்தாலும் செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்’ என்று முடிப்பார் இசைஞானி இளையராஜா. அது பழைய கதையாகிப் போனது இன்று. அமிஞ்சிக்கரையில்(அமைந்தகரை) அமர்ந்து கொண்டு ஆஸ்த்ரேலியன் க்ரேப்ஸைத் தின்று எங்கேயோ தொழிற்சாலையிலிருந்து வந்த பாட்டில் நீரை குடிப்பதே இன்றைய நிதர்சனம். சுத்தமான நீர் கிடைக்கப்பெறுவதும், அந்தந்த ஊரின் தண்ணீரை அருந்தப் பெறுவதும் ஒரு வகையில் பாக்கியம் என்றே எண்ணுகிறேன். எந்தத் தண்ணீரையும், கேன் தண்ணீரைக் கூட உயிர் நீராக மாற்ற முடியும் என்கிறது இயற்கை மருத்துவம். சிறிது வெட்டிவேர், நன்னாரி, தேற்றாங்கொட்டை எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் வைத்து முடிச்சிட்டு, அதை நீரில் இட்டு நான்கு மணி நேரம் விட்டுக் குடித்தால் அது உயிர் நீராகும் என்கிறது பாரம்பரிய மருத்துவம். இதைத் தொடர்ந்து செய்து கபம், இருமல், உடற்சூடு எதுவுமின்றி கார் காலத்தையும் கோடை காலத்தையும் கடந்து நிற்கும் சென்னை வாழ் மலர்ச்சி மாணவர்கள் பலர் இதற்கு சாட்சி!எந்தத் தண்ணீரைக் குடிக்கிறீர்கள் நீங்கள்?- பரமன் பச்சைமுத்து
கோவை,
21.04.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *