கடவுளின் கதை : நேஷனல் ஜியாக்ரஃபிக்

‘திடீரென எழுந்த ஒரு பெரிய சுனாமி அலையால் எங்கள் கப்பல் தாக்கப்பட்டு நான் தூக்கியெறியப்பட்டேன். கடலின் அடியாழத்திற்குள் விழுந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்தேன். வெகுநேரம் கழித்து எங்கிருந்தோ ஓர் ஒளி வருகிறது. ஒளியை நோக்கிப் போகையில்தான் நான் தனியே செயலற்றுக் கிடக்கும் என் உடலைப் பார்க்கிறேன், இறந்து விட்டேனென்று அறிகிறேன்.

அந்த ஒளி, ‘உனக்கு இன்னமும் வேலை இருக்கிறது. திரும்பிப் போ’ என்று அனுப்புகிறது. திடீரென அலையடித்து என்னைத் தூக்கி மேலேயெறிகிறது. நுரையீரலில் இருந்த உப்புத் தண்ணீர் வெளியேற மேலே வருகிறது உயிர் வந்த என் உடல். கப்பலிலிருந்து என்னைத் தேடிக்கொண்டிருந்த என் குழுவினர் என்னை கண்டெடுக்கின்றனர். ஆமாம்… கடலின் அடியாழத்தில் 18 நிமிடங்கள் மூச்சின்றி காற்றின்றி கிடந்தேன்,’ கலிஃபோர்னியாவின் டேவிட்டின் வாழ்க்கை அனுபவங்களில் தொடங்குகிறது இந்த காணொளி.

‘மரணத்திற்கு அப்பால்…’ என்ற தலைப்பில் ‘கடவுளின் கதை’ என்ற தொகுப்பில், உலகம் முழுக்கப் பயணித்து மக்களின் நம்பிக்கைகளை அனுபவங்களை பதிவு செய்கிறார் ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன்.

தேவதூதனை சிலுவையில் அறைந்து கொன்றார்கள் என்றே ஏசுநாதரைப் பற்றி நூல்களிலும், திரைப்படங்களிலும், வழிவழியாகவும் அறிகிறோம். அவரை சிலுவையில் அறைந்த இடத்தைப் பார்க்க முடியுமா? எருசலேமிற்கு வெளியே நல்லடக்கம் செய்ததாக சொல்லப்படும் அந்த இடத்தைப் பார்க்க முடியுமா? இதுதான் அந்த இடம் என்று பதிவு செய்து நம் விழியின் முன்னே நிறுத்தினால் எப்படி இருக்கும்! செய்கிறார்கள்.

இறப்பிற்குப் பிறகு ஒருவன் நெருப்பாற்றை நீந்த வேண்டியிருக்கும், பல்வேறு சங்கேத குறியீடுகளை பயன்படுத்தி நிறைய நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கும் என்பது எகிப்திய நம்பிக்கை.
எகிப்திய பேரரசன் யூனாஸ் இறந்த போது அவனது இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கைக்காக எழுப்பப்பட்ட பிரமிடிற்குள், அவனது மறுவாழ்வை நோக்கிய பயணத்திற்கான மொழிக் குறியீடுகள், மரணத்திற்குப் பின் வரும் நெறுப்பாற்றைக் கடப்பதற்கான படகு மற்றும் துடுப்பு என வேண்டிய எல்லாவற்றையும் 4000 ஆண்டுகளுக்கு முன்பே வைத்திருக்கிறார்கள் என்பதை அந்தப் பொருட்களின் பக்கத்திலிருந்தே ஆராய்ச்சியாளர் சலீமாவை வைத்துக் கொண்டு பதிவு செய்திருக்கிறார்கள்.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் உலகின் புனித நதி என்று கருதப்படும் கங்கை, எந்த இரண்டு இடங்களில் மிக மிக புனிதமாக கருதப்படுகிறது? அவற்றில் ஒன்றான வாரணாசியில் மரணம் எய்தவர்களை எரிப்பதும் ஆற்றில் விடுவதும் ஏன்? இந்துக்களின் நம்பிக்கையான பிறப்பு-இறப்பு-சொர்க்கம் தாண்டிய வாழ்வின் இலக்கு என்ன, நம்பிக்கை என்ன என்பவற்றை வாரணாசியில் வாழும் துறவி – முனைவர் – மருத்துவர் சுவாமி வாரிஸ்தானந்தாவிடம் விளக்கம் பெற்று பதிவு செய்திருக்கிறார்கள்.

‘நேஷனல் ஜியோக்ராஃபி’ உருவாக்கியிருக்கும் இந்த ‘ஸ்டோரி ஆஃப் காட்’ ‘பியாண்ட் டெத்’ என்ற காணொளிப் பதிவை ‘ஹாட் ஸ்டார்’ரில் இன்று காண நேர்ந்தது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும் இந்த தொகுப்பு வேறு வேறு இடங்களின் வேறு வேறு மக்களின் பகிர்வுகளை பதிவு செய்திருக்கிறது. சுவாராசியம் தருகிறது.

பார்க்கலாம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
25.04.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *