சிக்கிம் டைரி

மரணத்திற்குப் பின் என்ன என்பதைப் பற்றி அதிகம் கை காட்டாமல் இப்போது இரு இக்கணமே வாழு என்று அறிவுறுத்திப் போன புத்தனின் மார்க்கம் நூற்றாண்டுகளைக் கடந்து வரும் போது பல சங்கதிகளையும் தன்னுள் சேர்த்து கொண்டே வந்துள்ளது.

‘ஊழி வந்து உறுத்த’ என்று இளங்கோவடிகள் சொன்ன ஊழை நம்புகிறார்கள் திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றும் சிக்கிமிய மக்கள்.

இலங்கையின் தேரயான புத்தத்தில், விமானத்தில் சாலையில் என எங்கும் துறவிகளுக்கு முதலிடம் தந்து செய்யப்படும் போற்றுதல்கள் எல்லாம் இங்கு சிக்கிமில் இல்லை. சிக்கிமில் இருப்பது திபெத்தின் வஜ்ராயன புத்தம். கேங்டாக்கின் முக்கிய சந்தைப் பகுதியான எம்ஜி மார்க்கில், நீங்கள் உணவருந்தும் அதே உணவகத்தின் பக்கத்து மேசையில் என எங்கும் மக்களோடு மக்களாகவே சாதாரணமாக இருக்கிறார்கள் வஜ்ராயன துறவிகள். மலர்ச்சி மஞ்சள் வண்ண மேலாடையும் அதற்கு மேல் மெரூன் போர்வை போன்ற ஒன்றையும் போர்த்திக்கொண்டு ஆப்பிள் ஃபோனில் பேசிக் கொண்டு இருநூற்றைம்பது மில்லி ஸ்பிரைட் குடிக்கிறார்கள்.

ஆறாம் நூற்றாண்டில் அவதரித்த சாக்கிய முனி கௌதம புத்தர் உலகிற்கு புத்த மார்க்கத்தைத் தந்து போன பின்பு, இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வந்த இரண்டாம் புத்தர் என்று நம்பப்படும் பத்மசம்பவாவால் தொடங்கப்பட்டது வஜ்ராயனம். தாயும் இல்லை தந்தையும் இல்லை தானே தோன்றினார் பத்மசம்பவா, உஜ்ஜையினியில் ஒரு தாமரை மலரில் என்பது திபெத்தியர்களின் நம்பிக்கை.

இலங்கையின் தேராயன புத்தத்தில் மகா விஷ்ணு வழிபடப் படுவதைப் போல், வஜ்ராயனத்தில் இந்திரன் வழிபடப்படுகிறான். இப்போது வானுலகில் இருக்கிறார் மைத்ரேயர் என்ற நம்பிக்கை மட்டும் ஏறக்குறைய எல்லா பிரிவின புத்தத்திலும் ஒன்றாயிருக்கிறது. புத்தரின் பல் இருப்பதாகச் சொல்லப்படும் இலங்கையின் கண்டி ‘தலதா’வில் புத்தருக்கு மலர்களை அளிப்பதைப் போல, சிக்கிமில் ஏழு கிண்ணங்களில் நீரை காணிக்கையாகத் தருகிறார்கள்.

இன்று எங்களுக்கு வாகனம் ஓட்ட வந்த ஜோஜோ தபாங், திபெத்திய புத்தத்தைப் பின்பற்றுபவர். கர்நாடகாவின் மைசூருக்கு அருகிலுள்ள பாலகுப்பேயில் வந்து தங்கி திபெத்திய புத்தியிஸம் பயின்றவர். கர்நாடகாவில் இருந்ததால் அவருக்குக் கொஞ்சம் ஆங்கிலமும், கர்நாடகாவில் இருந்ததால் எனக்கு ‘தோடா தோடா ஹிந்தி’யும் வந்தன. இன்று இரண்டு மொழிகளையும் முடிந்த வரை உரையாடிக் ‘கொன்றோம்’.

திபெத்திய புத்த மதத்தின் முக்கிய மந்திரமான ‘ஓ மானே பட்மே ஹவும்’மை அதே ராகத்தில் நான் பாடிக்காட்ட அசந்தவர் உற்சாகமாகி கொஞ்சம் தன்னைத் திறந்தார். பத்மசம்பவாவை நான் தொடங்கியதும் இன்னும் கொஞ்சம் திறந்தார்.

இறப்பிற்குப் பின் செய்யப்படும் ஒரு மண்டலத்திற்கான (48 நாட்கள்) திபெத்திய பிரார்த்தனை சடங்குகள் பற்றி நான் கேட்டதற்கு, ஜோஜோவின் பதில் – ‘சார்… வோ நகி சக்தா, வோ 49 டேய்ஸ் ஃபார்மாலிட்டி. அச்சா கர்மா சாயியே! வோ சக்தா. டூ குட் கர்மா. யு ரீச் ஹெவன். ஃபிர் டவுன் நீச்சே!’

இருக்கும் போது இம்மையில் நல்லது செய், மறுமையில் நல்லது நடக்கும் என்பது பொதுவாகவே எல்லா இடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லப்படுகிறது.

கேங்டாக்கிலிருந்து இறங்கி சிம்டாங் (விஜய் படத்து ‘சிம்டாங்காரன்’ பாட்டை இந்த ஊரை நினைத்துதான் எழுதினார்களோ!) வழியாக ராம்பியினருகில் புல்காவையும் தட்காவையும் தேநீரோடு உண்டு விட்டு வளைந்து வளைந்து செல்லும் தீஸ்தா நதியையொட்டிய மலைப்பாதையில் கொட்டும் மழையில் பயணிக்கிறேன்.

#Sikkim

#Gangtok

#ParamanInSikkim

– பரமன் பச்சைமுத்து
மேற்கு வங்காளம்,
02.05.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *