செலாமத் பெட்டாங் மலேசியா!

‘மதிப்புக்குரிய தாய்மார்களே, மாண்புமிகு ஆண்களே… வானவெளியில் காற்று மண்டலத்தில் கொந்தளிப்பு இருக்கிறது. உங்கள் இருக்கையில் அமருங்கள்’ என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வரும் அறிவிப்பிலும், இறங்கிய உடன், ‘டிஃபன் சாப்பிட்டீங்களா?’ என்பதற்குப் பதிலாக, ‘விமானத்தில் பசியாறக் குடுத்தாங்களா?’ ‘நீங்க பசியாறிட்டீங்களா?’ என்று மலேசியத் தமிழர்கள் கேட்பதிலுமே புரிகிறது, மலேசியாவில் தமிழ் அதிகம் கலப்பில்லாமல் வாழ்கிறதென்று.

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை தாய்மொழியும் ஆங்கிலமும், ஆறாம் வகுப்பிலிருந்து மலாய் மொழியும் என்ற மும்மொழிக் கொள்கையில் இயங்குகின்றன பள்ளிகள். தமிழ்ப்பள்ளிகளில் பயில்வோர் தமிழ் ஆங்கிலம், நடுநிலைப்பள்ளியில் மலாய். சீனப் பள்ளியில் பயில்வோர் சீனம், ஆங்கிலம், நடுநிலைப்பள்ளியில் மலாய் என்று பயில்கின்றனர். ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்ததைப் போல பள்ளிகள் என்றாலே அரசுப்பள்ளிகள்தான் என்ற நிலையிலிருக்கிறது மலேசியா (தனியார்ப் பள்ளிகள் மிகக் குறைவாம்)

ராஜேந்திரச் சோழன் கடல் கடந்து வந்து வெற்றி கொண்ட போது ‘மலைநாடு’ என்ற வைத்த பெயரே, பின்னாளில் பிரித்தானியர்களால் மலேசியா என்றழைக்கப்பட்டது என்று இங்குள்ள சிலரால் சொல்லப்படுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ்ச்சொற்கள் மலாய் மொழியில் மிக அதிகம் இருக்கிறது, ராஜேந்திரன் கடாரத்தை வெற்றி கொண்டது ஆகிய இரண்டும் பெரும் உண்மைகள், இவை இரண்டையும் கலந்து கட்டப்படுவது உண்மையா, உணர்ச்சிக் கட்டுமானங்களா என்பதை சரித்திர ஆய்வாளர்கள் எவரேனும்தான் சொல்ல வேண்டும். (ராஜேந்திரச் சோழன் படையெடுத்து வந்து வெற்றி கொண்ட கடராம், இன்று மருவி ‘கிடா’ என்று அழைக்கப்படுகிறது.)

இரவு ஏழுமணிக்கு பளீரென்று ‘இப்போதைக்கு மறையறதா எண்ணமே இல்லை தம்பீ!’ என்று பிரகாசமாக வெய்யிலடித்துக் கொண்டு நிற்கும் சூரியனைக் காண்பது வித்தியாசமாக இருக்கும் நமக்கு. உலகின் மிக முக்கியமான சுற்றாலா மையம், ‘ஷாப்பிங் ப்ளேஸ்’ என்றெல்லாம் இருந்தாலும் கூட பெரும்பாலான உணவகங்கள் இரவு பத்து மணிக்கே கடை கட்டி விடுகின்றன.

லிட்டில் இந்தியாவில் ‘த்தோஸை, வடகறி, காப்பி’ என்று ஆர்டர் செய்தால், காப்பியை முதலில் தந்து அதிர வைக்கிறார்கள். ‘காப்பியைப் போய் முதல்ல தர்றாங்க!’ என்று கேட்டுவிட்டால், நீங்கள் தீர்ந்தீர்கள். ‘ ‘இந்தியாவுலே எல்லாமே தலைகீழாதான் சாப்பிடுவாங்க!’ என்று பக்கத்து மேசையிலிருந்து ஒருவர் பாயக்கூடும். ‘இங்க இப்படித்தான். முதல்ல காப்பியோ, தேநீரோ குடிப்போம். அப்படியே அப்புறம் பசியாறுவோம்.’ என்று உங்கள் உடன் வந்தவர் தன்மையாக சொல்லக் கூடும்.
(தோசையை ‘த்தோஸை’ என்று உச்சரிக்கிறார்கள்)

இலங்கையைப் போலவே மலேசியாவிலும் டீ என்பது ‘தே’ என்றேயழைக்கப்படுகிறது. தேநீரை ‘தே’ என்று ஆர்டர் செய்யும் போது கவனிக்க வேண்டியது, தே என்றால் ‘டிப் டீ’. ‘தே தாரே’ என்றால் அடித்து ஊற்றி ஆற்றித் தரும் ‘தே’நீர். சிங்கப்பூரைப் போலவே ‘கண்டென்ஸ்டு மில்க்’கில்தான் காப்பியும், தேநீரும் என்றாலும் ‘தே தாரே’ மற்றவற்றை விட கொஞ்சம் சுவைதான். குடிக்குமளவிற்கு கேட்டால் குளிக்குமளவிற்கு ஒரு பெரிய க்ளாஸில் ஒன்றரை வெள்ளிக்கு தருகிறார்கள் தே தாரே.
( பார்க்க – படம் )
ஒன்றரை வெள்ளிக்கு தேநீரும், இரண்டரை வெள்ளிக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும் கிடைக்கிறது மலேசியாவில்.

சைவம் உண்பவன் என்றாலே, ‘ஐயோ பாவம்!’ என்று நம்மைப் பார்ப்பது மலேசியாவில் அதிகம் நடக்கிறது. தினமும் அடையார் ஆனந்த பவனையும் சரவண பவனையும் தேடிப் போக முடியாது. மலேசியர்கள் தமிழக, தாய்லாந்து, சீனர்களைப் போலவே அரிசி உண்பவர்கள். ‘நாசி லேமாக்’ என்ற பெயரில் அரிச்சோற்றோடு, அவித்த பயித்தங்காய், வறுத்த வேர்க்கடலையோடு தரப்படும் மலேசிய உணவை வாங்கி் முட்டையை ஒதுக்கி வைத்துவிட்டு சமாளிக்கலாம். மூன்று நாள் அனுபவத்தில் கண்டறிந்த மற்றொன்று, பெரும்பாலான பெரும் வணிக வளாகங்களில் ‘சிம்பிள் வெஜ்’ என்ற பெயரில் முழுச்சைவத்தில் விதவிமாகத் தரும் சீன உணவகங்கள் இருக்கின்றன. டோம் யோம் ப்ரவுன் ரைஸ் நூடுல்ஸ் சூப்பில் விதவிதமான காய்கறிகளகளை வெட்டிப் போட்டு, சோயாவில் கோழித்துண்டுகளைப் போன்றே செய்த துண்டுகளைப் போட்டுத் தருகிறார்கள் (பார்க்க – படம்).
சாலை ஓர மலாய் உணவகத்தில் ஏழரை வெள்ளிக்கு நாசி லேமாக் கிடைக்கும், சீன உணவகத்தில் பதினெட்டு வெள்ளியாகிவிடுகிறது, வணிக வளாகம் என்பதால்.

நிறைய மலைகளையும், ஆறுகளையும், ஏரிகளையும் கொண்டிருக்கும் மிகச் செழிப்பான நாடு் மலேசியா. நேராக விமானத்தில் வந்து கோலாலம்பூரில் இறங்கி வேலை முடித்து விட்டு் திரும்பப் பறந்து விடாமல், கோலாலம்பூரிலிருந்து பல மணிநேரங்கள் சாலை வழியே பெந்தோங் மாநிலம், திரும்ப மலேசியாவிலிருந்து சாலை வழியே பல மைல்கள் அண்டை நாடான சிங்கப்பூர் என பயணித்ததால் மலேசியா மண்ணை கொஞ்சம் கவனிக்க முடிந்தது. பழத்தோட்டங்களும், லட்சக்கணக்கான தென்னைகளையும், செம்பனைகளையும் கொண்டிருக்கும் செழிப்பான நாடு.

‘முள் நாறி’ என்று நற்றமிழில் சொல்லப்படும் துரியன் பழங்கள் இம்மண்ணிலேயே விளைகின்றன. அளவில் சிறிய பலாப்பழம் போல தெரியும் துரியனின் முட்கள் வலிமையானவை, கொஞ்சம் அசந்தால் உங்கள் கைகளைக் குத்திக் கிழித்து விடக்கூடும். நம்மூரின் வேர்ப்பலாவைப் போல கனியிலிருந்து வரும் மணம் தூர இருந்தாலும் வந்து அடிக்கிறது நம்மை.

துரியன் பழங்களை எல்லாராலும் ரசித்து உண்ண முடியாது. பழத்திலிருந்து கிளம்பி அடிக்கும் காட்டமான வாடை பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறதாம்.

பழக்கப்படுத்திக் கொண்டால் மிக மிகச் சுவையான கனி துரியன் என்கின்றனர் மலேசிய இந்தியர்கள். முள் நாறி எனும் துரியன் பழங்களும் ஒரு வகையில் மனிதர்களைப் போலத்தான் போல. வெளிப்புற முட்களையும், அடித்துத் தாக்கும் காட்டமான மணத்தையும் கடந்து அனுகினால் உள்ளே மிக மிக இனிக்கும் சங்கதியும் நல் அனுபவங்களும் உண்டு.

செலாமத் பெட்டாங்!

வணக்கம் மலேசியா!

– பரமன் பச்சைமுத்து
கோலாலம்பூர், மலேசியா
24.06.2019

#ParamanInMalaysia
#Malaysia
#Malarchi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *