சாலை வழியே சிங்கப்பூருக்கு…

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சாலைவழிப் பயணமாக வந்தேன் இன்று. லட்சக்கணக்கான தென்னைகளும் செம்பனைகளும் இருமங்கிலும் கொண்ட சிறப்பான நெடுஞ்சாலை சாலையில் 320 கிமீ தூரம் பயணித்து எல்லையைக் கடந்தேன்.

இரண்டு் நாடுகளுக்குமிடையே இரண்டுக்கும் சொந்தமில்லாத ‘நோ்மேன்ஸ் ஐலண்ட்’டும்,
அதில் காரிலமர்ந்தபடியே கடவுச்சீட்டு பரிசோதனை குடியமர்வு ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றைச் செய்ததும் புதுவனுபவங்கள். இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கு பேருந்தில் பயணப்பவர்கள் எல்லோரும் இறக்கி விடப்பட்டு வரிசையில் சென்று கடவுச்சீட்டு ஒப்புதல் அச்சு பெற்றதும், அதன்பின்பு அடுத்த பக்கத்தில் பேருந்தில் ஏறுவதும் பார்க்க முடிந்தது.

எத்தனை கார்கள் வரிசையில் வந்தாலும், எவ்வளவு பேர் வரிசையாகக் காத்திருந்தாலும், ‘யு ஹேவ் நாட் ஃபில்ட் திஸ் ஃபார்ம்!’ என்று ரோஜா நிற ‘இமிக்ரேஷன் ஃபார்ம்’மைத் தந்து, ‘ஃபில் பண்ணிக் குடுத்தான் அனுப்புவன் மவனே!’ என்று இருக்கும் குடியமர்வு பாதுகாப்பு அதிகாரி வியக்க வைக்கிறார். சென்னையிலிருந்து நேராக கோலாலம்பூர் போனதால், சிங்கப்பூரின் படிவம் பூர்த்தி செய்யவேயில்லை நான். மலேசியாவின் குடியமர்வு துறையில் இப்படி எழுதித்தரும் படிமங்களேயில்லை.

வரிசையில் எங்கள் கார் இருந்தபோது, எங்களுக்கு சற்று முன்பு அதிகாரிகளால் சோதனையிடப்பட்ட கார் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. ஓட்டுனர் இருக்கையிலிருந்து மேற்பக்கமாக திறக்கும் வண்ணம் இருந்த அந்த கதவு இன்னும் கவர்நத்து. அது அட்டகாசமான லம்போர்கினி.
( பார்க்க – படம்)

‘உலகமெலாம் சைவ நெறி ஓங்க வேண்டும்!’ என்று சிறு வயதில் படித்த வரிகள், இன்று
மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே உணவிற்கு அலைந்த போது வேறு மாதிரி புரிந்தது. போக்குவரத்து நெரிசலில் கொஞ்சம் நேரத்தை விட்டதால் நேரம் கடந்து உணவிற்கு வழியில் தேடினேன். ‘ரெஸ்ட்டோரென்’ என்ற மலேசிய ஆங்கில எழுத்துக்கள் கொண்ட உணவகங்களில் கோழி, மீன், வேறு ஏதோ சில விலங்குகளின் இறைச்சி இருந்தன சைவ உணவு இல்லை. தாய்வான், தாய்லாந்து என எதைப் பார்த்து உள்ளே போனாலும், ‘வெஜ் த்தேரியன் ஹேவிங் நாட் ஹியர்’ என்று புதுவடிவ ஆங்கிலத்தில் சொன்னார்கள் எல்லா மலாய்க்காரர்களும். ‘துரியன் பழம்தான் இன்று!’ என்று முடிவெடுத்த போது, ஒரு மலாய் உணவகமும் அங்கே கருத்த ராமநாதபுரத்துக்காரரும் தென்பட பறந்து ஓடினோம். பருப்பு, ஏதோ காய்கறி, பூண்டு நசுக்கிய ரசம், சோறு… பார்த்ததும் உயிர் வந்தது.
🙂

வாகனங்கள் எல்லாம் மிக நேர்த்தியாக, வரிசையாக, ஒழுங்காக… அட சிங்கப்பூர் வந்து விட்டது.

வணக்கம் சிங்கப்பூர்!

– பரமன் பச்சைமுத்து,
சிங்கப்பூர்,
24.06.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *