‘ஹவுஸ் ஓனர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

houseowner8235457821587935743.jpg

சென்னை அசோக்நகரில் ஒரு வீடு, தன் மொத்த சம்பாதித்யத்தையும் அதில் போட்ட முன்னாள் ராணுவ அதிகாரியும் இந்நாள் அல்ஜைமர் நோயாளியுமான ‘ஹவுஸ் ஓனர்’, அவரைத் தாங்கு தாங்கென்று குழந்தையெப் போலத் தாங்கும் அவரது மனைவி, இவர்களோடு சென்னையின் பெருமழை… இவற்றை வைத்து உணர்வுப் பூர்வமாக ஒரு படம் தந்து பிரமிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

‘என்னம்மா இப்படிப் பண்றீங்களூம்மா!’ என்றே ஊடகங்களில் அடையாளப் படுத்தப்பட்ட லட்சுமி ராமக்ருஷ்ணன்தான் இயக்குநர் என்பதைக் கண்டதும் இன்னொரு வியப்பு.

காலில் செருப்போடு படுக்கையிலிருந்து விழித்தெழும் நாயகன், கயிற்றில் கோர்த்துக் கட்டிய மூக்குக் கண்ணாடி, ஸ்வெட்டர் என எல்லாம் அணிந்து கொண்டு ‘ஹூ ஆர் யூ? திஸ் ஈஸ் மை ஹவுஸ்!’ என்று கத்தும் போது கண்ணாடியில் கிஷோர் உருவம் தெரியும் ஒரே காட்சியில் மொத்த கதாபாத்திரத்தின் தன்மையையும் அல்ஜைமரையும் சொல்லி ‘அட…!’ போட வைத்து விட்டார் இயக்குநர்.

மழையின் குளுமையோடு மழைக்கால இருட்டோடு பாலக்காட்டை காட்டும் விதம், குறிப்பாக ஊஞ்சலும் படிகளும் கொண்ட கொள்ளைப்புற குளியல் இடம், கொள்ளை அழகு. போக வேண்டும் போல் இருக்கிறது.

இயக்குநர் சிகரம் பாலசந்தர் அவர்கள் வெறும் குரலை மட்டுமே வைத்து ‘இருமல் தாத்தா’ என்று முழுப்படத்திலும் வரும் பாத்திரம் செய்வார். மினி, ரம்யா, உதவி செய்ய வந்த ஜான் என வெறும் குரல்களை மட்டுமே வைத்து மிக நேர்த்தியாக உணர்வுகளைக் கடத்தி பாத்திரங்கள் செய்திருக்கிறார்கள்.

கிடைக்கும் எந்த படத்திலும் சிறப்பாகச் செய்யும் கிஷோர், இதில் ஓர் அல்ஜைமர் நோயாளியாகவே வந்து அசத்துகிறார். ‘மழையா…!’ ‘ஆருட்ட பேசிட்டுருக்காய்!’ ‘இவன் என்ன சொல்றான்?’ என்று அழகாகச் செய்துள்ளார். கிஷோரை அப்படியே நடிப்பில் முழுங்கி விட்டு மொத்தப் படத்தையும் தன் இடுப்பில் தூக்கிச் சுமக்கிறார் ஸ்ரீரஞ்சனி. தமிழ்திரைக்கு இதோ இன்னொரு நல்ல நடிகை.

‘புதிஷ்ஷாஸா பாடுங்கோ’ ‘எண்ணா…’ ‘ஒன் மிண்ட்ட’ என்று படம் முழுக்க பாலக்காட்டு மொழியை அதே வகையில் அப்படியே தர, அல்ஜைமர் வந்தவர் விலாசம் மாறி வெளியே போய்விட்டால் தொடர்புக்காக அவரவது கர்னல் தொப்பியில் பெயரும் தொடர்பு எண்ணும் எழுதுதல் போன்ற பல இடங்களில் படம் முழுக்க நிறைய உழைத்திருக்கிறார்கள்.

மழையின் சத்தத்தை, சில நேரங்களில் வெறும் மௌனத்தைத் தந்து உணர்வையேற்றுகிறார் இசையமைப்பாளர். இடைவேளையில் வெளியே வரும் போது, ‘வெளியே மழை பெய்யுதோ!’ என்றோர் உணர்வே வந்து விடுகிறது.

கிஷோரின் இளமைக்கால பையனாக வரும் ‘பசங்க’ கிஷோரும், அந்தப் பெண்ணும் கூட நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

குத்துப்பாடல், ஒரே அடியில் ஒன்பது முறை சுழன்று விழும் சண்டைகள், ‘நான் பாஞ்சா புலி, படுத்தா எலி, இதோ துப்பறேன் சளி… த்தூ’ வகை பஞ்ச் வசனங்கள், கேமராவைப் பார்த்து கத்திக் கத்தி பேசும் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாத ஒரு கதை அதையொட்டிய பாத்திரங்கள் மட்டிமே கொண்ட மாறுபட்ட படம் பார்க்க விரும்புவோருக்கானத் திரைப்படம் – ‘ஹவுஸ் ஓனர்’

எல்லோருக்கும் பிடிக்காது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கொஞ்சம் பிசகினால் தொலைக்காட்சி நாடகமாகி விடும் என்ற நிலையிலிருக்கும் கதையை கையிலெடுத்து கமர்சியல் சமரசம் செய்யாமல் கொடுத்து சபாஷ் வாங்குகிறார் இயக்குநர்.

இடைவேளைக்கப்புறம் கொஞ்ச நேரம் மெதுவாக நகர்கிறது என்பது பலவீனம்.

வி- டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘ஹவுஸ் ஓனர்’ – இரண்டு மணி நேரத்தில் காட்சிப்பதிவாய் ஒரு நல்ல நாவல்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *