டை

20190709_1010267680153292561573311.jpg

டை என்னைப் பொறுத்த வரை எவருக்கும் அழகு சேர்க்கும் ஓர் உடை. என்ன உடுத்தினாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என்று எண்ணும் வேளைகளில் ‘அட!’ என்னுமளவிற்கு அழகுக் கூட்டி அசத்தி விடுவது டை என்பது என் தனிப்பட்டக் கருத்து.

‘மைக்ரோலாண்ட்’டில் ஐடி இஞ்சினியராக இருந்த பெங்களூரு – சென்னைக் காலங்களில் வெள்ளைச்சட்டையும் டையும் எங்கள் ட்ரெஸ் கோட்.

அதற்குப்பிறகு வந்த அல்மாமாட்டர் மார்க்கெட்டிங் காலங்களிலும் சரி, ‘தாயம்’ ட்ரெய்னர் ஆன காலங்களிலும் சரி டை என் கழுத்தில் தொங்கும் உறுப்புகளில் ஒன்று என்று கருதுமளவிற்கு ஆகிப்போனது.

பிரிட்டிஷ் ஸ்டைல் யூனி கலர் ட்ரெஸ்ஸங், மற்ற பிற பாணியின் அனுமதிக்கப்பட்ட வண்ணக்குவியல் என எல்லாவற்றிற்கும் டைகள் வைத்திருப்பேன் நான். ‘என் கலர் காம்பினேஷன் இப்படித்தான்! நான் இப்படித்தான் போடுவேன், போய்யா!’ என்று திமிரோடு காம்பினேஷன் செய்ததும் உண்டு.

நான் அணியும் டையையும் சட்டைகளையும் வைத்தே இது என்ன கிளாஸாக இருக்கும் என்று யூகிக்கும் முகுந்தன்களும், ஸ்ரீநிவாசகா குமரன்களும், குத்தாலிங்கங்களும் உண்டு.

டைகள்தான் என் அடையாளம் அக்காலங்களில். மடிப்பது பாதுகாப்பது இஸ்திரி செய்வது என்பதைத் தாண்டி, டைகளுக்கென க்ளிப்புகள் செய்து அதை பீரோவின் உள்ளே தொங்கவிட்டு பூட்டிப் பாதுகாப்பேன். என் வேலையின் உடையின் ஒரு பாகம் டை. அதனால் அதை தங்கத்தைப் போலவே பாதுகாப்பேன். ‘ எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கினாலும், அடிக்கடி பயன்படுத்தினாலும் பரமனால் டைகளை புதுசுபோலவே வைத்துக் கொள்ள முடிகிறது’, ‘பரமன் கட்டும் டைகளுக்கு நான் ரசிகை!’ என்றெல்லாம் அல்மாமாட்டர் பெங்களூரு ஃப்ரட்டெர்னிட்டியில் பொதுவெளிப் பேச்சுக்களே உண்டு. பெங்களூரு ஜூன் ஜூலை மழைக்காலத்தில் நனைந்த எவ்வளவு இஸ்திரி செய்தாலும் பழைய மிடுக்கு பெறாத சில டைகளை நினைத்தால் ஒரு சோகமே வரும் எனக்கு.

ஸில்க், சிந்தெடிக், காட்டன், சீனத்துப் பட்டு என்று வகைவகையாய் பல ஆண்டுகளில் சிறுகச் சிறுக நான் சேகரித்து வைத்திருக்கும் டைகளின் எண்ணிக்கை நூறைத் தொடும்.

மலர்ச்சி உதயத்தில் வந்த ‘கோட்’டினால் டையை துறந்து விட்டேன்.

பரமனென்றால் டை என்றிருந்த காலம் மாறிவிட்டது இன்று. சிங்கப்பூரின் பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியிலிருக்கும் நண்பனொருவன் (மத்வமைந்தன்!), முக்கிய மீட்டிங் ஒன்றிற்கு ‘பரமன் குடுத்த டையை எடுத்திட்டு போவோம்!’ என்று
தனது ‘ப்ரோஃபைல் பேக்’கில் எனது டையை வைத்து எடித்துப் போனானாம்.
( ஒரு நிகழ்ச்சிக்காக நீல டை ஒன்றை இரவல் தந்தேன். திருப்பியே தரவில்லை அவன்!)

ஒரு காலத்தில் கிட்டத்தட்ட என் வாழ்வின் சொத்துக்கள் என்றே நான் கருதிய,
சிங்கப்பூர் – ஹாங்காங் – பெங்களூர் – பூனா – பாம்பே என்று தேடித்தேடி வாங்கிச் சேர்த்து பாதுகாத்த, உடுத்தி அழகு பார்த்த,
என்னைப் புரட்டிப்போட்டு பெரிதாக வளர்த்து விட உதவிய பெங்களூரு மார்க்கெட்டிங் காலங்களில் எனக்கு ஓர் அடையாளமாகவே இருந்த, என் டைகள் சிலவற்றை,
அது தேவைப்படும் ஒருவருக்குத் தரப் போகிறேன் இன்று.

பெறுபவனின் உணர்ச்சி என்னவாக இருக்குமென்று தெரியவில்லை. எனக்கு வத்தியாசமான உணர்ச்சி.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
09.07.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *