சிவராஜ் தெரியுமா?

கடலூர் ஓ.டி எனப்படும் பழைய நகரத்திலுள்ள பள்ளியொன்றில் மாணவர்களுக்கு மலர்ச்சி உரையாற்றுவதற்காகப் போகிறேன். பள்ளியின் நிறுவனர், தாளாளர், உள்ளூரின் முக்கியப் பிரமுகர்களோடு அமர்ந்திருக்கிறேன். சிறப்பு விருந்தினர் என்று கூறி சிறப்பு செய்கிறார்கள். பக்கத்திலிருக்கும் பள்ளியின் முக்கிய நிர்வாகியிடம் சபை நாகரீகத்திற்காகப் பேசுகிறேன். பதிலுக்கு அவர் என்னிடம் வினவுகிறார்.

‘உங்க வீடியோவெல்லாம் பாத்தோம். ரொம்ப மோட்டிவேட்டிங்கா இருந்தது. உங்கள் மாதிரி ஆளுங்கல்லாம் நம்ம பள்ளிக்கு வரணும். பாண்டில க்ளாஸ் எடுக்கறீங்களாம் இப்ப’

‘ஆமாங்க. நீங்க எந்த ஊருங்க?’

‘புவனகிரி’

‘புவனகிரியில எங்க?’

‘சின்ன தேவாங்கர் தெரு’

‘தெரியும். அந்தத் தெருவில்லாம் சுத்தியிருக்கேன்!’

‘அப்படியா! நீங்க எந்த ஊரு?’

‘மணக்குடி’

‘கீழமணக்குடியா? குறியாமங்கலம் பக்கத்துல!’

‘ஆமாம்!’

‘மணக்குடி போற வழியில குறியாமங்கலம் முன்னாலதான் நிலம் இருக்கு. விவசாய நிலம்! உங்களுக்கு சிவராஜ் தெரியுமா?’

‘ஐயோ… ஈச்சர் ட்ராக்டர் ஒண்ணும், மெஸ்ஸி ஃபர்குஷன்ஸ் ட்ராக்டர் ஒண்ணும் வச்சிருப்பாங்களே! மணக்குடியிலேருந்து புவனகிரி ஸ்கூலுக்கு நடந்து போகும் போது அவங்க விவசாய நிலம், அந்த ட்ராக்டர் எல்லாத்தையும் பாத்துகிட்டேதான போவோம் நாங்க சின்ன பசங்க அப்ப.

சிவராஜ், முத்து முதலியார்ல்லாம் பாத்துதான் இப்படில்லாம் விவசாயம் பண்ணணும்னு ஆசையே வந்தது. இன்னிக்கு வரைக்கும் விவசாயம்ன்னா சிவராஜ் நிலமும், அந்த பண்ணை வீடும்தான் மனசில வரும்! பஜாஜ் ஸ்கூட்டர்ல வருவாரு அப்போ. ஒரு தடவ சின்னப் பையனான எனக்கு புவனகிரி வரைக்கும் லிப்ட் குடுத்திருக்காரு. அதுதான் என் வாழ்க்கையின் சைக்கிளைத் தாண்டிய முதல் ட்டூ வீலர் பயணம்’

‘ நாந்தான் சிவராஜ்!’

– பரமன் பச்சைமுத்து
கடலூர் O.T
21.08.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *