இயற்கையே… கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேரறிவே!

‘ ம்க்கூம்… உலகம் முழுக்கக் காடு காடுன்னு கத்தும். ஆனா, அதக் காப்பாத்த என் நாட்டோட நிலப்பரப்ப பொருளாதாரத்த இழக்க வேண்டிருக்கு! எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியும். நீங்க ஷட் அப் பண்ணுங்க!’ – இது ‘ஐயோ காட்டையழிக்கிறார்கள்… காட்டையழிக்கிறார்கள்! நிறுத்துங்கள்!’, என்று சில மாதங்கள் முன்பு கதறிய உலகத்தினரின் முகத்தை நோக்கி பிரேசிலின் புதிய அதிபர் உமிழ்ந்தது.

அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் காடு பற்றியெரிவதைக் காண்கையில், அதுவும் அணைக்க முடியா அளவிற்குப் பரவி எரிவதைப் பார்க்கையில்… மன்னிக்கவும், பின்புலம் தெரியாமல் எவரையும் தவறாகப் பேசக்கூடாது என்றாலும், இது மனிதர்களால் உருவாக்கப்பட்டத் தீயோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

முடிவளராதவர்களுக்கு அமேசான் காட்டு எர்வாமாட்டின் மீது ஓர் ஈர்ப்பு உள்ளது போல, உலகம் முழுதும் வாழும் சாகச குணம் கொண்டோர் இயற்கையின் மீது ஆர்வங்கொண்ட மனிதர்களின் ஆசைகளில் ஒன்று இயற்கையின் பேரதிசயங்களும் மர்மங்களும் நிறைந்திருக்கும் அமேசான் ஆற்றையும் அதையொட்டிய காடுகளையும் கொஞ்சமேனும் பார்த்துவிட வேண்டுமென்பது.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ‘லோரேசியா’, தெற்கே ‘கோண்டுவானா’ என இரண்டு நிலப்பரப்புகளாக இருந்த பூமி, ஒன்றாய் இணைந்து ‘பாஞ்சயா’ என்ற ஒற்றைத் திட்டாய் மாறிய போது உருவானதாம் உலக ஆர்வலர்கள் போற்றும் அமேசான் ஆறு. அது வரை பசிபிக் கடலில் கலந்து முடிந்த அமேசான் ‘பாஞ்சயா’ ஒற்றைத் திட்டு உடைந்து நகர்ந்து ஏழு கண்டங்களாக மாறிய போது நடுவில் வந்த அட்லாண்ட்டிக் கடலில் கலக்கத் தொடங்கியதாம். பல கோடி ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் அமேசான் அட்லாண்டிக்கின் உப்பின் அளவைக் குறைத்து உதவி புரிவதோடு போகும் வழியில் தனது கரைகளில் உருவாக்கியதே ஆச்சரியங்கள் நிறைந்த அமேசான் மலைக்காடுகள். உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் வாழ்கின்றனவாம். உலகின் நுரையீரல் என்றழைக்கப்படும் இந்தக் காடு பற்றியெரிகிறது.

உள்ளிருக்கும் விலங்குகளும், கிடைக்கவொண்ணா தாவரங்களும், அமேசான் காடுகளுக்குள்ளேயே வாழும் பழங்குடிகளும், அரிய வகைப் பறவைகளும், பூச்சிகளும் வெந்து மடிந்து சாம்பலாகியிருக்கும். சாமானியனாகிய நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை.

இயற்கையே…
கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேரறிவே!

மனிதர்களின் தவறுகளை மன்னித்து பெருங்கருணை புரிவாய்,

இப்பூவுலகைக் காத்தருள்வாய்!

அபயம்! அபயம்!

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி,
29.08.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *