கொழும்பில் ஒரு சிறு பெண்

‘திருச்சிற்றம்பலம்’ என்று தொடங்கி ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்…’ என்ற பதிகத்துடன் ஒரு பள்ளியின் நிகழ்ச்சி தொடங்கினால் எப்படியிருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் நமக்கு!

கொழும்புவில் உள்ள முக்கிய மகளிர் கல்லூரியான ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்விலும் சரி, சில தினங்களுக்கு முன்பு நாவலப்பிட்டியவில் கதிரேசன் மத்திய கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியிலும் சரி… தேவார திருவாசகப் பதிகங்களோடே தொடங்குகிறார்கள் பாடசாலையின் நிகழ்ச்சிகளை என்பதைக் கவனிக்க முடிந்தது. இதைக் கேட்டால், தமிழகத்தில் உள்ள என் தந்தையைப் போன்ற தமிழ் விரும்பிகள் சைவப்பற்றாளர்கள் நெகிழ்ந்து போய் விடுவார்கள்.

தபிழகத்தில் அந்தக் காலத்தில் இருந்த பியூசி நிலைகள் இலங்கையில் (கர்நாடகத்திலும் கூட) தொடர்கிறது. நாம் +1, +2 என்று மாற்றி விட்டோம். இங்கே 10, ஏ+ லெவல்,13த் லெவல் என்று 11,12,13 வரை முடித்து விட்டு அடுத்த நிலைக்கு பல்கலைக் கழகம் செல்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகள் கேட்கும் 16 ஆண்டுகள் கல்வியை இளங்கலை முடிக்கும் போதே நிறைவு செய்துவிடுகிறார்கள் இப்பிள்ளைகள்.

இன்று இந்து கல்லூரியில் நடந்த மாணவச் செல்வங்களுக்கான ‘மலர்ச்சி உரை’, எப்போதும் போல பெறும் வரவேற்பையும், மாணவிகளுடையே உற்சாகத்தையும் மாற்றங்களையும் தந்தது. ஆசிரியப் பெருமக்கள் குறிப்பெடுத்துக் கொள்வதும், ‘எங்களண்ட பாடசாலையின் டீச்சர்ஸுக்கு நீங்கள் ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டதும் நடந்தது.

மலர்ச்சி உரை முடிந்ததும் கல்லூரி மாணவர்கள் தலைவர் நிலையிலிருக்கும் மாணவி மிக அழகான தமிழில் அழுத்தமாக நன்றியுரையை ஆற்றி அசத்தினார்.
நன்றியுரையை முடித்து விட்டு போன அந்த மாணவியை அழைத்து ‘அருமையாகப் பேசினாயம்மா!’ என்று சொல்ல அழைத்தேன். நான் பேசும் முன்னே, வெள்ளைச் சீருடையணிந்த அந்த மாணவி பேசினார்.

‘இரண்டாண்டுகளுக்கு முன்பு கொழும்பு சரஸ்வதி ஹாலில் நடந்த உங்கள் மலர்ச்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். நிகழ்ச்சி முடிவில் ஒரு கேள்வியைக் கேட்டேன். பெரும் உளைச்சலிலிருந்த எனக்கு அப்போது ஒரு பதிலும் விளக்கம் தந்தீர்கள். அதன்படியே வாழ்கிறேன். அந்த உளைச்சல் தீர்ந்தது. இங்க அமைதி்வந்துவிட்டது. மகிழ்ச்சியா இருக்கிறேன். நீங்கள் எங்க கல்லூரிக்கே வருவீங்கன்னு நினைக்கவே இல்லை!’

நான் மகிழ்ச்சியில், நெகிழ்ச்சியில், இறைவனின் செயலில்… உறைந்து அப்படியே நின்றேன் சில நொடிகள்.

– பரமன் பச்சைமுத்து
கொழும்பு
09.09.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *