தமிழ் செழிப்பாக வாழ்கிறது அயலகத் தமிழ்களின் இல்லங்களில்

ஓர் இனத்தின் அழிவில் மட்டுமல்ல, உறவின் முறைகளை விளிக்கும் வழக்குச் சொற்கள் வேற்றுமொழிச் சொற்களால் மாற்றப்படும் போதும் தேயத் தொடங்குகிறது ஒரு மொழி. உறவின் முறைகளை தங்கள் மொழிச்சொற்களிலேயே விளிக்கும் போது விழுதுகள் விடுகின்றது மொழி. ஓர் இனத்தின் மக்கள், உறவுகள் அவ்வப்போது அல்லது விழாக்களில் கூடும் பொழுதுகளில் தங்களுக்கான முறைகளைத் தொடரும் போது பெருமளவில் காக்கப்படுகிறது கலாச்சாரம்.

இலங்கை கொழும்புவில் நடந்த, அன்பரொருவரின் இல்லத் திருமண விழா கருத்தைக் கவர்ந்தது. வந்திருந்த ஆயிரத்து சொச்சம் பேரில் பெரும்பாலானோர் வேட்டி சட்டையில் இருந்தனர். பெண்கள் அனைவருமே புடவையில் இருந்தனர். சிறுமிகள் பாவாடை சட்டையில் மிளிர்ந்தனர். திருமணத்தில் குல மகளிரே முதன்மைப் படுத்தப் பட்டனர். முதல் வரிசைத் தொடங்கிக் கடைசி வரிசைக்கு முந்தைய சில வரிசைகள் வரை என அரங்கத்தின் மையப் பகுதி முழுவதுமே மகளிரே நிறைந்திருந்தனர். அரங்கின் மீதமுள்ள இட வலப் புறங்களின் இருக்கைகளில் ஆடவர் பெருமக்கள் அமர்ந்திருந்தனர்.

அரசாணிக் கால் நடல் தொடங்கி முளைப்பாரி, செம்பானைகளில் வைக்கப்படும் கும்பம் என எல்லாமும் இருந்தன என்றாலும், சில சங்கதிகள் அழகாக நடந்து கவனம் ஈர்த்தன. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் என இரு வீட்டாரின் மொத்த மக்களும் வரிசையாக வந்து திருமணத்திற்கு வந்திருந்த ஒவ்வொருவரையும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்து ஒவ்வொரு வரிசையாக வணங்கி வரவேற்றனர்.

மங்கல நாண் பூட்டிய அடுத்த சில விநாடிகளில் மணமேடையில் பெற்றோர் சகிதம் கையெடுத்துக் கும்பிட்டு நின்றிருந்த மணமக்களை நோக்கி குடும்ப உறவுகள் வரிசையாக வந்து நெற்றியில் திருநீறிட்டு திலகமிட்டு வெற்றிலையில் பூவையும் பணத்தையும் வைத்துத் தந்து வாழ்த்தி நகர்ந்தனர். எவரும் எவருடையை நேரத்தையும் வீணடிக்காமல் அவரவருக்கான நேரத்தில் மணமக்களை வாழ்த்தி விட்டு நகர்ந்தனர்.

தாலி கட்டியதும் மணமக்களின் மடியில், பட்டுச் சட்டையும் பட்டு வேட்டியும் சூட்டப்பட்ட சிறு குழந்தையொன்று வைக்கப்படுகிறது. மணமகளும் மணமகனும் மாறி மாறி குழந்தையை ஏந்தி சீராட்டுவதும் மடியில் இடுவதுமாக சடங்குகள் செய்யப்படுகிறது. முப்புரி நூல் அணிந்த அந்தணர் அதிகம் தமிழிலேயே மந்திரங்களை ஓதினார். பதிக பாசுரங்கள் பாடினார்.

மணமக்கள் ஒருவருக்கொருவர் மணமாலையை மாற்றி மாற்றி அணிவித்து மகிழ்வது, ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொள்வது, தத்தம் தாய்தந்தையருக்கு பாத பூசை செய்வது போன்ற நிகழ்வுகளும் நடந்தேறின.

மாமா, அத்தை, ‘இவர் என் சின்ன தாத்தாவின் பேரன் வழி உறவு’, பெரியம்மா, அக்காள் என்ற வார்த்தைகளால் நிரம்பி வழிந்த திருமண அரங்கில், நாதஸ்வர இசை மேலும் இனிமை சேர்த்தது. ‘வெள்ளி மலை மன்னவா’வில் தொடங்கி, ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம்’, ‘காற்றில் வரும் கீதமே… என் கண்ணனை அறிவாயா!’ என்று மாறி, ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை’ என்று முடித்து, ‘இந்தப் பாட்டையெல்லாம் இசைக்கிறார்களே, அட!’ என்று நினைக்க வைத்து அசத்தினார்கள் இலங்கை மண்ணின் நாதஸ்வர தவில் குழுவினர்.

தமிழ் மணம் அதிகம் வீசியது திருமண விழாவில். தமிழ் இன்னும் செழிப்பாக வாழ்கிறது அயலகத் தமிழ்களின் இல்லங்களில்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
கொழும்பு,
09.09.2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *