ரேய் துஸ்லிகா பச்சிடிரா’

‘ரேய் துஸ்லிகா பச்சிடிரா’
‘க்கோர்சிக்கிடிக்காய் பச்சடி தீஸ்கோண்டி’
‘மஜ்லிகா புளுஸு’

இந்தச் சத்தங்கள் நிறைந்த அந்த உணவகத்தினுள் நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம். திருப்பதி போகும் போதெல்லாம் மினர்வா கிராண்டில் அல்லது மயூராவில், பெங்களூருவில் நாகார்ஜுனாவில், வேறு வழியில்லாத போது சென்னையில் அமராவதியில் என்ற அளவிலேயே ஆந்திர சாப்பாட்டைப் பற்றிய அனுபவங்கள் கொண்ட நம்மை ‘ஆத்தன்டிக் அக்மார்க் ஆந்த்ரா மீல்ஸ் காட்டறேன் வாங்க!’ என்று குண்ட்டூரில் மௌரியா டேஸ்டி ஃபுட்ஸ் என்ற உணவகத்திற்குக் கூட்டிப் போனார்கள் மலர்ச்சி மாணவர்கள். (இது மட்டும்தான் குண்ட்டூரிலேயே சிறந்த சுத்த சைவ உணவகமாம்!)

இரண்டு கரண்டி கேழ்வரகு மாவில் பரந்த மெலிந்த தோசையை ஊற்றி மடித்து உள்ளே சீவிய கேரட் துருவிய தேங்காயோடு பீன்ஸ் போல் வெட்டப்பட்ட பச்சைமிளகாய் (அம்மாடியோவ்!) நிரப்பித் தந்த, நெல்லூர் கார தோசை என இரவில் இஞ்சி – வரமிளகாய் – வெல்லம் அடித்து செய்த அல்லம் பச்சடியோடு தோசைகள் தந்த அதே உணவகத்தில் பகலில் சாப்பாடு.

ஆந்திரா மீல்ஸ் என்றாலே பருப்புப்பொடிதான் என்ற என் அமெச்சூர் உள் படிவம் உடைந்தது குண்ட்டூரில். சிந்தக்காய் பொடி என்ற பெயரில் (புளியங்காய் !?) ஒரு பொடியைக் கொட்டி நெய் ஊற்றினார்கள். நாம் பழகிய அந்தப் பருப்புப் பொடியெல்லாம் இங்கே கிடையாதாம். இந்தக் கறுப்புப் புளிப் பொடி காரமும் புளிப்பும் கலந்து வித்தியாசமாக இருந்தது.

அதை முடித்த போது, சோற்றில் பிசைந்து கொள்ள ‘துஸ்லிகா பச்சடி தீஸ்கோண்டி’, அடுத்து ‘மஜ்லிகா புளுஸு’ என்னும் அட்டகாசமான மோர்க்குழம்பு, ரசம், சாறில்லாமல் உதிரியாக சேமியா பாயாசம் என வரிசையாக வைக்கிறார்கள். இயல்பாகவே அவ்வப்போது அதிக காரம் ருசிக்கும் இயல்பு கொண்டவனாக இருந்தும், உணவருந்தும் போது நீர் அருந்தா வழக்கம் கொண்ட எனக்கே தண்ணீர் தேவைப்படுமளவிற்கு காரம் அடித்துத் தூக்கியது.

மழையென்றாலும் வெய்யிலென்றாலும் காட்டுக் காட்டென்று காட்டும், நாட்டிலல்ல ஆசியாவிலேயே பெரிய மிளகாய் சந்தையைக் கொண்டிருக்கிற வளமான பூமியைக் கொண்டிருக்கிற குண்ட்டூரின் உணவு இனிப்பு, புளிப்பு, காரம் என எல்லாமே சற்று தூக்கலாக காட்டமாக இருக்கிறது, ஆளை சிலுப்பி விடுமளவிற்கு, அந்தக்கால சிரஞ்சீவி இந்தக்கால ராஜமௌலி படங்களைப் போல. எல்லாமே அனுபவந்தானே!

– பரமன் பச்சைமுத்து
குண்ட்டூர்,
15.09.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *