‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’

‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’

புதிய கிளையை திறந்து வைப்பதற்காகப் சாலையில் பயணித்து குண்ட்டூர் சென்று இறங்கியதும் எனை நோக்கி வைக்கப்பட்ட, நான் எதிர் கொண்ட முதல் கேள்வி. கடவுளுக்கு ‘தேவுடு!’ என்கிற வார்த்தையை மட்டும்தான் நான் அறிவேன். அதுவும் என்டிஆரை மக்கள் அப்படி விளிப்பார்கள் என்பதாலும், ரஜினி படத்துப் பாடலில் அது வரும் என்பதாலும்.

‘நாளை அங்கே பிரார்த்தனை செய்யும் போது வேண்டியது வரும், அப்போது பார்த்துக் கொள்வோம்!’ என்று சொல்லிக்கொண்டே தூங்கப் போனேன் ஹோட்டல் அறையில்.

காலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி, முக்கிய பிரமுகர், முன்னாள் டிஜிபி இந்நாள் அரசியல்வாதி என பிரமுகர்களோடு மலர்ச்சி ஆசிரியனாக நானும் என்ற பதாகைகள் பளீரென்று இருந்தன குண்ட்டூரின் முக்கிய வீதிகளில்.

உள்ளே நுழைந்த எங்கள் அனைவருக்கும் நெற்றியில் பொட்டு வைத்து விட்டார் வந்திருந்த சாஸ்திரிகள். கிறிஸ்துவரான முக்கிய அரசியல் பிரமுகர் தவித்தார்.

தோசார்ட் கிளை திறப்பும் நடந்தது, குத்து விளக்கு ஏற்றலும் நடந்தது. நான் செய்யும் பிரார்த்தனைக்கான நேரமும் வந்தது.

‘வாட் எவர் வி ஆர் ட்டுடே…!’ என்று ஆங்கிலத்தில் தொடங்கியது என் விளக்கம். எல்லோரும் கண் மூடி எழுந்து நின்று இறையை தொழத் தயாரான போது, குண்ட்டூர் இது தெலுங்கு தேசம் என்பதெல்லாம் தோன்றாமல், தானாக வந்தது, ‘கருவாக்கி உருவாக்கி எனையாண்டு…’ தமிழில் இறை வணக்க விளக்கம்.

பிரார்த்தனை முடித்து கிளையின் உரிமையாளர், தோசார்ட் உரிமையாளர்கள் என எல்லோருக்கும் வாழ்த்துகள் சொல்லி கண் திறந்த போது, முன்னாள் டிஜிபியும் இந்நாள் அரசியல்வாதியுமான அந்த பிரமுகர் என் கையைப் பிடித்துக் கொண்டு துண்டு துண்டான ஆங்கிலத்தில் ( ஹீ ஸ்போக் இங்கிலீஷ் இன் தெலுகு) சொன்னார், ‘ ச்சே… என்ன ஒரு ப்ரேயர்! மனசு நிறைந்தது. இன்னிக்கு சண்டே ப்ரேயர் எனக்கு இங்கயே முடிஞ்சிருச்சு! ரொம்ப நன்றி. மனசு நிறைஞ்சதுங்க. நான் இதை எதிர்பார்க்கவில்லை!’

கையின் மீதான அழுத்தம் குறையவில்லை. எல்லாம் சொல்லிய பிறகும் எல்லாமும் சொல்ல முடியவில்லை என்பது போல கையை பிடித்துக் கொண்டே நின்றிருந்தார் அவர்.

அவருக்குத் தமிழ் தெரியாது, நமக்குத் தெலுங்கு தெரியாது என்பதல்ல; உண்மையான உணர்வுகளுக்கு மொழி தேவைப் படுவதில்லை. மொழியைக் கடந்தவை அவை என்பது மறுபடியும் உணர்த்தப்பட்டது எனக்கு.

…..

வணக்கம் சென்னை!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
15.09.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *