இனி, துரைசிங்கத்தின் வசனங்கள் வராது; தூத்துக்குடி என்றால் சொல்வதற்கு நினைப்பதற்கு நிறைய நல்ல சங்கதிகள் இருக்கிறது எனக்கு.

தூத்துக்குடியில் இறங்கிக் கால் வைக்கும் போது…

உலகின் மிகச் சிறந்த உப்பு உற்பத்தியாகும் இடம், வ.உ.சியின் சுதேசிக் கப்பல், கிரேக்க தாலமி குறிப்புகள், எரித்ரேயன் பெரிப்லஸ், ஆதிச்ச நல்லூர், மார்க்கோ போலோ குறிப்பிட்டிருந்த முத்துக் குளித்தல், ஆதிகுடி மக்களான வலையர் குல மக்கள், டச்சுக்காரர்கள், கிழக்கிந்திய கம்பெனி, பரதவர்கள் வணங்கும் பனிமயமாதா, அனுமனை சீதையைத் தேட அனுப்பி விட்டு கடற்கடைக் காட்டில் மந்திரங்கள் உச்சரித்த ராமன் – அடங்கிய கடல், ஸ்பிக் தொழிற்சாலை, தூற்றிக்குடி தூத்துக்குடியான கதை, உப்பு சத்தியாகிரகம் – என எவ்வளவோ நல்ல சங்கதிகள் நினைவில் கொள்ள இருந்தும்,

‘அஞ்சாயிரம் ரூவாய் இருந்தா மளிகைக் கடை வைப்பேன்,
அம்பதாயிரம் ரூவாய் இருந்தா
டிபாண்ட்மெண்டல் ஸ்டோர் வைப்பேன்.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு. பாக்கறியா… பாக்கறியா!’ என ஹரி படத்து துரைசிங்கம் வசனங்களே ஓடின மனதிற்குள். என்னை நினைத்து வருத்தப்பட்டேன்.

பரதவர் குலத்திலிருந்து ஒரே நேரத்தில் 20,000 பேர் மதம் மாறியது, 440 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வழிபாட்டுக்காக எழுப்பப்பட்ட தேவாலயம் என்பதையெல்லாம் நினைத்துக் கொண்டு பனிமய மாதா கோவிலின் வளாகத்தைப் பார்க்கும் போது, ‘ எத்தனையெத்தனை மனிதர்கள் வந்தனர் போயினர் இக்கடலின் வழியே இக்கரையில், காலங்கடந்தும் கண்டு கொண்டு நிற்கிறேன் சாட்சியாய்!’ என்று மௌனமாய் சொல்லி நிற்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாய் தெரிகிறது அது. கிட்டத்தட்ட 600 மீட்டருக்கு உள்ளே பெரிய பிரமாண்ட உயரத்தில் பனிமயமாதா. எவ்வளவு பெரிய்ய கொடி மரம் வெளியில்!

தூத்துக்குடியிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் முறப்பநாடு. நவகைலாயம் – சிவன் கோவில் என்றெல்லாம் சொல்லப்படும் அவ்விடத்தில் என்னைக் கவர்ந்தது தாமிரபரணி. வடக்கிலிருந்து தெற்காக பாய்கிறது பொருநை. இந்தக் கரையிலியிலிருந்து அந்தக் கரைக்கு ஆற்றில் இறங்கி நடந்தே போய்விடலாம், இடுப்பளவு ஆழந்தான். குனிந்து மூழ்கி மண்ணையள்ளிக் கையிலெடுத்தால் ‘அட…’ பட்டுப் போன்ற சிவந்த மணல். நீரின் வேகமென்றால் அப்படியொரு வேகம். காலை ஊன்ற வில்லையென்றால் நீரில் போய்க்கொண்டேயிருப்பீர்கள். இறங்கிய சில நொடிகளில் நீருக்குள்ளே உங்கள் குதிகாலை சுண்டு விரலை முன்னங்காலை திடீரென்று சில விரல்கள் வருடுவதற்கும் கிள்ளுவதற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் எதுவோ செய்வது போல் உணர்வீர்கள். என்னுடன் நீரில் இறங்கிய சிறுவன் ‘ஐயய்யோ!’ என்று அலறி துள்ளிக் காலை இழுத்து உதைத்தான். ஆமாம் கையளவு பெரிய மீன்கள், உங்கள் கால்களை கொத்திக் கொத்தி இலவசமாக உலகத்தின் தலைசிறந்த ‘ஃபிஷ் ஸ்பா’ செய்கின்றன.

நீரின் உள்ளே முட்டிப் போட்டுக் கொண்டு பின்னங்காலை மொத்தமாய் மீன்களுக்குத் தந்துவிட்டு அமைதியாய் மார்பில் மோதி பிரிந்து போகும் நீரில் அமிழ்ந்து கிடந்தேன். ‘ஆ… ஐயோ!’ என்று கூறிக்கொண்டே என்னைப் பார்த்து சிறுவன் நித்தின் கேட்டான், ‘சார் உங்களுக்கு வலிக்கல!’

பதில் சொன்னால் உடல் அசைவில் மீன்கள் ஓடிவிடுமேயென்று பதிலே சொல்லாமல் சிரித்து வைத்தேன்.

தூத்துக்குடியின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்றாகப் பதிந்தது தாமிரபரணியில் மாலைக் குளியல். என்னை அழைத்துப் போய் தாமிரபரணியில் விட்ட மலரவர்கள் ரத்னாவிற்கும் குத்தலிங்கத்திற்கும் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.

இனி, துரைசிங்கத்தின் வசனங்கள் வராது; தூத்துக்குடி என்றால் சொல்வதற்கு நினைப்பதற்கு நிறைய நல்ல சங்கதிகள் இருக்கிறது எனக்கு.

– பரமன் பச்சைமுத்து
தூத்துக்குடி
28.09.2019

#Tuticorin
#ParamanInTuticorin

www.Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *