அளவில்லாமல் அடாவடி செய்யும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்! : பரமன் பச்சைமுத்து 

திருச்சியில் உள்ள ஒரு நகைக் கடையொன்றில் இரவில் கன்னம் வைத்து கொள்ளை நடந்துள்ளது என்ற ஒரு செய்தி படங்களோடு முதலில் கட்செவியஞ்சலிலும் ஊடகங்களிலும் அடுத்த நாள் செய்தித் தாள்களிலும் வந்தன. முகமூடியணிந்த கொள்ளையர்களின் கண்காணிப்புக் கேமரா படங்கள், துளையிட்ட சுவரின் படம் என எல்லாமே வெளியாகி பெருமளவில் பகிரப்பட்டன. அடுத்த நாள் கடையின் உரிமையாளர் சென்னையிலிருந்து புறப்பட்டுப் போய் சம்பவம் நடந்த திருச்சி கிளையை பார்வையிட்டார். அங்கிருந்து அவர் பேச அதுவும் ஊடகங்களில் உடனே வெளியானது.

இது நடந்த சில மணி நேரங்களில், ‘திருச்சி நகைக் கடை கொள்ளையில் நிறைய சந்தேகங்கள் உள்ளன’ என்ற வகையில் ஒரு புதிய பதிவை எழுதி கட்செவியஞ்சலில் பரப்பினார்கள். ‘ஆறு காவலாளிகள் இருந்தும் எப்படி கொள்ளையடித்தார்கள்?’ என்பது போன்ற கேள்விகளைக் கடந்து போனாலும், கடக்க முடியாத கேள்வியாக இருந்தது, ‘அத்தனைக் கோடி கொள்ளை போன பின்னும் சிரித்துக் கொண்டே பேசுகிறார் கடையின் உரிமையாளர். அத்தனைக் கோடி தொலைந்ததென்பது அவருக்கு சட்டை ஓட்டையிலிருந்து அரையணா விழுந்து தொலைந்த அளவுக்குத்தான் கவலை தருகிறதா?’ என்ற கேள்வி. என்ன ஒரு அடாவடி இது!

‘பாத்தியா, அந்த மூத்தப் பையன் மட்டும் சத்தமா அழவேயில்ல. அப்பா செத்தும் கூட லேசா அழுதுட்டு நிக்கறான் பாரு. ஒரு பாசமுமே கெடையாது அவனுக்கு. ஆனா கடைசி பொண்ணு பாரு எப்படி ஒடஞ்சி தேம்பித் தேம்பி அழுது! அதுக்குத்தான் பாசம் அதிகம்!’ – என்ற வகையில் சாவு வீட்டில் அழுபவர்களை வைத்து முடிவுகளை எடுக்கும் மட்டமான அணுகுமுறை.

அவரவர் நிலையை வைத்தே அடுத்தவரை அளப்பது அவனியின் இயல்பு. அடுத்தவரின் உணர்வும் அதை அவர் கையாளும் விதமும் அவர் கொண்டிருக்கும் நிலையும் வேறாக இருக்கலாம் என உணர்வதே பக்குவம்.

ஒரு நிகழ்வை ஒரு சம்பவத்தை ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளும் முறை வேறாக இருக்கலாம். நான் எப்படி உணர்கிறோனோ அப்படியே அடுத்தவரும் உணர்ந்திருக்க வேண்டும், இல்லையெனில் ஏதோ தவறு இருக்கிறது என்பது உளவியல் பிரச்சினை.

ஒரே இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது விராட் கோலி உணர்ச்சி மிகுதியில் துள்ளிக் குதிப்பதையும் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் வெளியில் எதையும் காட்டிகொள்ளாமல் ‘மிஸ்டர் கூல்’ என்ற வகையில் சாந்தமாக கையாளும் மகேந்திர சிங் தோனியையும் பார்த்திருக்கிறோம். கோலி அப்படி, தோனி இப்படி. கோலி மாதிரியே தோனியை எதிர்பார்க்க முடியாது. ‘பாரு, எவ்வளவு அமைதியா நிக்கறாரு தோனி. அப்படீன்னா, நாட்டின் மேல பற்றே கிடையாது. அதான்!’ என்று முடிவு எடுத்தால் சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்வீர்கள்தானே! அதே வகையில் ‘அடுத்தவர் அதற்கு இப்படி(த்தான்) உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்க வேண்டும், இல்லையென்றால் அதற்கு அதுதான் பொருள்!’ என்று முன்முடிவெடுத்து இயங்கிக்கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வீர்கள் நீங்கள்?

(இதை எழுதி முடிக்கும் வேளையில், திருச்சி நகைக் கடைக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை திருவாரூரில் காவல்துறையினர் கைது செய்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது)

ஒரு சங்கதியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பது நீங்கள் யார் என்பதை உரக்கச் சொல்கிறது.

பதிமூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை போன பின்னும் நிலையை உணர்ந்து ஆனால் சிரித்துக் கொண்டே எதிர்கொண்ட அந்த உரிமையாளரை, அந்த இடத்தில எதற்கும் அசரா ஆளுமைக் குணத்தின் உதாரணமாக காண்கிறேன் நான்.

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து

04.10.2019

Paraman@Malarchi.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *